top of page
Search

24/11/2024, பகவத்கீதை, பகுதி 100

  • mathvan
  • Nov 24, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

திராவிட மொழிநூல் ஞாயிறு அவர்களைத் தொடர்வோம்:

 

… ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை, "ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந். 765)


"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந். 941) என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத்தென்பதை


"ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி 

ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு 

ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் 

ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே." (திருமந். 2627)


"ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் 

ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் 

ஒங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன 

ஓங்கார சீவ பரசிவ ரூபமே." (திருமந். 2628)

என்பவற்றாலும், அறியலாம்.


ஓங்கார வரிவடிவம் தமிழ் ஓகார வரி வடிவே யாதலாலும், அது யானை வடிவை யொத்ததென்று விநாயக புராணங் கூறுவதாலும், ஓங்கார மந்திரம் தமிழ் மந்திரமேயென்பது தெளிவாம்.


அது சிவனியத்திற் குரியதாயினும், மாலியத்திலும் ஆளப்படுவது. முன்னதன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையையும் உணர்த்தும்.”


இது நிற்க.


அஃதாவது, திராவிட மொழிநூல் ஞாயிறு அவர்கள், ஓம் என்னும் ஒரெழுத்துச் சொல் தமிழின் சிறப்பெழுத்து என்றும் அது தொன்மை மிக்கது என்றும், அது பல பொருள்களை உணர்த்தும் என்றும் ஆராய்ந்து சான்றுகளுடன் தருகிறார். 


அசையாது இருக்கும் இடங்களிலும் அசைந்து கொண்டிருப்பது ஓம் என்னும் ஒலி வடிவம். எனவே இதனை அசபா மந்திரம் அல்லது ஊமை மந்திரம் என்றும் சொல்வர்.


மூச்சை இழுத்துச் சிறிது நேரம் நிறுத்திப் பின்னர் வெளிவிடும் காலத்தில் பிறக்கும் மகத்தான நுண்மை ஒலியே அசபா மந்திரம் என்னும் ஓங்காரம் என்கின்றனர் பெரியோர்.  அஃதாவது ஓங்காரம் என்பது இயற்கை ஒலி!


தியானத்தில் மனத்தினை ஒரு நிலைப்படுத்தி மூச்சினைக் கவனித்தால் இதனை உணரலாம். இந்த மனம் அடங்கிய நிலையில் தெளிவு பிறக்கும் என்றார் பரமாத்மா பாடல் 8:13 இல்.


தெளிவு பிறக்க இயற்கை விதிகள் புலனாகும். அவை புலனாக செயல்களில் கூர்மை, ஒருமை தோன்றும். அவ்வாறு செயலாற்றின் அவன் இயற்கையின் ஓர் அங்கமாகவே ஆகின்றான்.


தியானத்தில் நின்று எவன் சிந்தனையைச் சிதறவிடாமல்  என்னிலேயே (இயற்கையிலேயே) ஒன்றுகிறானோ அவன் என்னையே (இயற்கையை) எளிதில் அடைகிறான். – 8:14


மறுபிறப்பு என்றால் நாம் இறந்து மீண்டும் பிறப்பு எடுக்கிறோம் என்று நினைக்கிறோம். இஃது உறுதியிட்டுக் கூறுவதற்கில்லை.


இருப்பினும், இப்பிறப்பிலேயே நாம் பல பிறப்புகள் எடுக்கிறோம் என்பதுதாம் உண்மை. ஒவ்வொருவரும், தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். நேற்று இருந்த நான் மறைந்து போனான்; இன்று இருப்பவன் புது நான்!


உண்மையை உணர்ந்து கொண்டால், தெளிவு பெற்றுவிட்டால் மீண்டும் மீண்டும் பல பிறப்புகளும், வடிவங்களும் எடுக்க வேண்டியதில்லை.


மகாகவி பாரதியினைக் கேட்போம். “மனத்திற்கு” என்று தலைப்பிட்டு எழுதிய கவிதை இது:


சென்றதினி மீளாது, மூடரே! நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. – மகாகவி பாரதியார்


இதுதான் பிறவாமை! இக்கணத்து உண்மை!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page