03/10/2024, பகவத்கீதை, பகுதி 49
- mathvan
- Oct 3, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒரு பொருளின் மீது நாட்டம் வைத்தால் புலன்கள் அதன் வழி செல்லும். புலன்கள் செல்லும்போது மனத்தையும் அள்ளிக் கொண்டு செல்லும். அதனால் அந்தப் பொருள்களின் மீது ஆசை; தடை ஏற்படும்போது சினம்; சினத்தினால் ஆசை பேராசையாகிறது; பேராசையால் மனத்தில் தடுமாற்றம்; மனம் பேதலிப்பதனால் அழிவு.
இப்படித்தான் அழிவுச்சுழல் நம்மைத் தாக்கும். முதலிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
புலன்களை மன உறுதியால் கட்ட வேண்டும். விருப்பு வெறுப்பற்றுச் செயல்களைச் செய்வதும் அவற்றை அனுபவிப்பதும் மனத்தில் அமைதியை அளிக்கும். – 2:64
திருமூலப் பெருமான் திருமந்திரத்தில் ஆசைகளை அறுத்து ஐம்புலன்களை மேய்க்கக் கற்றுக் கொண்டால் அவை பாலாய் சொறிந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி மனம் அமைதிப்படும் என்கிறார்.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. --- பாடல் 2843, திருமந்திரம்
மனத்தில் சலனங்கள் இன்றேல் அமைதி நிலவும்; அமைதி நிலவினால் மன உறுதி ஏற்படும்; மன உறுதி ஏற்பட்டால் சிந்தையில் தெளிவும் கூர்மையும் இருக்கும். – 2:65
இவ்வகையினில் முயற்சி இல்லாதவனுக்கு மன உறுதியும், சிந்தையில் தெளிவும் கூர்மையும் அமையா. அவனுக்கு மன அமைதியுமில்லை; மனம் அமைதி அடையாதவனுக்கு மகிழ்ச்சி ஏது? – 2:66
பெருங்கடலில் காற்று எவ்வாறெல்லாம் வீசுகின்றதோ அந்தத் திசையினில் எல்லாம் ஓடும் உருளும் குறிக்கோளற்ற ஒரு படகினைப் போன்றதுதான் மனத்தை ஒரு நிலைப்படுத்தாதவனின் நிலை. – 2:67
எனவே, செய்யும் செயல்களில் இருந்து புலன்களை விலக்கி நெறிப்படுத்திச் செல்பவனுக்கே நிலையான புத்தி இருக்கும். – 2:68
மாற்றி யோசி என்கிறார் வரும் பாடலில். அதற்கு முன் நான் நேசிக்கும் ஒரு புத்தகம் என்றால் அது நாகூர் ரூமி அவர்களின் “திராட்சைகளின் இதயம்”. பல ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய புத்தகம் அது. ஒரு குரு தன் சீடர்களுக்கு வாழ்வியல் விளக்கங்களைச் சொல்வது போல அந்த நாவல் அமைந்திருக்கும்.
அந்தப் புத்தகத்தில் மனம் திரள, அஃதாவது மனம் ஒரு செயலில் ஊன்றி ஈடுபட, இரு வழிகள் என்பார் குரு (ஹஜ்ரத்). அவையாவன: ஒரு துன்பம், அவமானம் நமக்கு நிகழும்போது மனம் திரண்டு ஆழமாகச் சிந்திக்கும். இப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படிச் செய்தால் தீர்வு கிடைக்கலாம் என்றெல்லாம் வழிகளைத் தேடும். இது முதல் நிலைச் சிந்தனை. இதனைத்தான் பெரும்பாலனவர்கள் கைக்கொள்வார்கள். இது ஒரு பொது புத்தி (Archetype). ஆனால் முதல் தரச் சிந்தனையல்ல!
இரண்டாவது வழி என்பது எதுவும் நடக்காதபோதே மனம் திரள வேண்டும். இதுதான் முதல் தரச் சிந்தனை.
ஊரெல்லாம் ஒரு வழியிலேயே சிந்திக்கும். இந்தச் சிந்தனை பொது புத்தியின் (Archetype) அடிப்படையில்தான் இருக்கும். இதனை மீற வேண்டும். மாற்றி யோசிக்க வேண்டும்.
ஹஜ்ரத் அவர்களின் வார்த்தைகளில்:
“…சிக்கல் வரும்போது மனம் திரள்வது இயற்கெ. ஆயிரம் ரூவா கொடுத்து வாங்கின சாமான் கீலே உளுந்து ஒடையும்போது, மனம் வேதனைப்படுறது இயற்கெ. நம்ம கஸ்டப்பட்டு வகுத்து வச்ச way of life தப்பான விளைவைக் குடுக்கும்போது, அதெ திருத்த முயற்சி பண்றது, அதுக்காக நாளெல்லாம் பாடுபடுறது இயற்கெ. இன்னும் தெளிவா சொல்லப் போனா, நாமெல்லாம் archetype உடைய அடிமையாக இருக்கோம். Archetype நம்மள அப்டி வாழ வச்சிருக்குது. இதெ மாத்தணும். இல்லென்னா, மத்த மனுசனெப் போலத்தான் நீங்க இருப்பீங்க. அடுத்த வூட்டுக்காரன், எதுத்த வூட்டுக்காரன் மாதிரித்தான் இருப்பீங்க. ஒரு கால் அங்குலம்கூட நீங்க மேலே போவ முடியாது. நீங்க மேலெ வளரணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, இந்த வாழ்க்கையில் மாறுதலெ உண்டாக்கணும். உங்க கற்பனை இருக்குதுல்ல, அதுல மாறுதலெ ஏற்படுத்தனும்…”
இப்படிச் சொல்லிக்கொண்டே போவார் ஹஜ்ரத்.
சரி Archetype என்றால் என்ன? அதனையும் சுருக்கமாகச் சொல்கிறார். நாளைத் தொடர்வோம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments