30/01/2025, பகவத்கீதை, பகுதி 170
- mathvan
- Jan 30
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
கீதாச்சாரியன் மீண்டும் அர்ஜுனனுக்குச் சொல்லத் தொடங்குகிறார்.
அர்ஜுனா, இரகசியங்களுள் சிறந்தவையும், உயர்ந்தவையும் மீண்டும் கூறுகிறேன் கேள். நீ எனக்கு உகந்த நண்பனாக இருக்கிறாய். ஆகையினால், உனக்கு நன்மையைக் கூறுகிறேன். – 18:64
என்னிடம் உன் மனத்தை வை; என்னிடம் அன்பு வை; என்னைப் பூசனை செய்; என்னை வணங்கு; என்னை அடைவாய்! எனக்கு நீ பிரியமானவன்; உனக்கு நான் உண்மையான உறுதியை அளிக்கின்றேன். எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு; எல்லாப் பாவங்களில் இருந்தும் உன்னை விடுவிப்பேன்; வருந்தாதே. -18:65-66
பக்தி யோகத்தில் சொல்லியிருந்த சரணாகதி தத்துவம் மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது.
இந்த சரணாகதி தத்துவத்தினைச் சொல்லிவிட்டு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றினையும் செய்கிறார். அஃதாவது, இந்தக் கருத்துகளை யாருக்கெல்லாம் சொல்லக் கூடாது என்று பட்டியலிடுகிறார். இஃது ஒரு புதுமை.
பெரும்பான்மை நூல்கள், யாருக்கானது, யாரெல்லாம் படிக்கலாம் என்று தெரிவிக்கும்.
ஆனால், அவற்றில் இருந்து வேறுபட்டு யாருக்கெல்லாம் “சொல்லக் கூடாது” என்பதனைச் சொல்கின்றது கீதை.
சரி, யாருக்கெல்லாம் சொல்லக் கூடாது?
இதை (பகவத்கீதையை) எப்போதும் கடமைகளில் இருந்து விலகுபவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பணிவில்லாதவர்களுக்கும் சொல்லக் கூடாது. மேலும் என்னை இகழ்பவர்களுக்கும் சொல்லக் கூடாது. – 18:67
அதே சமயம், எவன் இந்தப் பரம இரகசியத்தை என் பக்தர்களுக்குச் சொல்கிறானோ அவன் என்னுடைய பரம பக்தன்; அவன் என்னையே எய்துவான்; ஐயமில்லை. – 18:68
மனிதர்களுள் அவனைக் காட்டிலும் எனக்கு இனிமையானவன் யாருமில்லை; அவனைவிட எனக்கு வேண்டப்பட்ட நண்பனாக வேறொருவன் இந்தப் புவியில் உண்டாகப் போவதும் இல்லை. – 18:69
எவன் நம்மிடையே நடந்த இந்த அற உரையாடலைப் படித்து, தெளிந்து, மனத்தில் நிறுத்துகிறானோ அவன் செய்யும் இந்த அறிவு வேள்வியினால் நான் மகிழ்வேன். என்னயே அவன் போற்றியதாக, பூசனை செய்ததாகத் திருப்தி கொள்வேன். இஃது என் எண்ணம். – 18:70
சிரத்தையுடன், அவமதிப்பில்லாமலும் எவன் இந்தக் கருத்துகளைக் கேட்கமட்டுஞ் செய்கின்றானோ அவனுங்கூட தெளிவடைவான்; அவனும் மன அமைதி கொள்ள இந்தக் கேள்வி ஞானம் வழி வகுக்கும். – 18:71
பார்த்தா! உனது புத்தியை ஒரு முகப்படுத்தி இதுகாறும் (நான் சொன்ன) இந்தக் கருத்துகளைக் கேட்டு வந்தனை. உன் மயக்கம் அழிந்ததா? – 18:72
அர்ஜுனன் விடையளிக்கிறான்:
அச்சுதா, நின் அருளாலே, என் மயக்கம் அழிந்தது. உனது கருணையினால் நான் முற்றுணர்வு பெற்றேன்; ஐயங்கள் அகன்றன; நடுவு நிலைமை எய்தினேன்; நீ சொன்னபடி காரியங்களைச் செய்வேன். – 18:73
சஞ்ஜயன் கூறியது:
இங்கனம், நான் வாசுதேவனுக்கும் அருட்கொடைகளைப் பெற்ற அர்ஜுனனுக்கும் நிகழ்ந்த அற்புதமான உரையாடலைக் கேட்டேன். – 18:74
நான் வியாசர் பெருமானின் தனிப் பெருங் கருணையினால் மறை பொருளாக இருந்த ஒப்புயர்வற்ற கருத்துகளையெல்லாம் நேராகவே கிருஷ்ணன் சொல்லக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன். – 18:75
அரசே (திருதராஷ்டிரரே) கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலைக் கேட்டு நான் மீண்டும் மீண்டும் களிப்பெய்துகிறேன். – 18:76
அரசே! பரந்தாமனின் அந்த அற்புதமான தோற்றத்தைக் கண்டு வியப்பு மேலிடுகின்றது. நினைந்து நினைந்து மேலும் மேலும் மகிழ்கின்றேன். – 18:77
கிருஷ்ணன் யோகக் கடவுள். அவன் எங்கே இருக்கின்றானோ, வில்லாளியான பார்த்தன் எங்கிருக்கின்றானோ அங்கேதான் திருவும் வெற்றியும் பெருமையும், நிச்சயமாக நீதியும் நிலைக்கும் என்பது என் (சஞ்ஜயன்) முடிபு. – 18:78
இவ்வாறாகப் பதினெட்டாம் அத்தியாயமான மோக்ஷ சந்நியாச யோகமென்னும் அத்தியாயம் முற்றிற்று.
பகவத்கீதை இனிதே நிறைவுற்றது.
நாளை என் புரிதல்களைச் சுருக்கமாகச் சொல்லி இந்தத் தொடரினை நிறைவு செய்வேன்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments