31/01/2025, பகவத்கீதை, பகுதி 171
- mathvan
- Jan 31
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
இந்தத் தொடர் 2024 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் பதினைந்தாம் தேதி (15/07/2024) தொடங்கி இன்றுடன் (31/01/2025) நிறைவிற்கு வருகின்றது.
முதல் பதிவில் குறிப்பிட்டபடி, திருக்குறளுக்கும் பகவத்கீதைக்கும் இருக்கும் தொடர்பு குறித்து அறிந்து கொள்ள ஆவல் மிகுந்ததனால் இந்தத் தொடரை ஆரம்பித்தோம்.
அனைத்து அற நூல்களிலும் சில பல கருத்துகள் ஒன்றாகவே இருக்கும். அதே போன்று சில கருத்துகள் இரு நூல்களிலும் இருந்தன என்றும் பார்த்தோம்.
ஒளவைப் பெருந்தகை “தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்…” என்னும் பாடலில் இதனைத் தெளிவுபடுத்தினார் என்றும் பார்த்தோம். காண்க 20/08/2024, பகவத்கீதை, பகுதி 6.
இருப்பினும், ஒவ்வொரு நூலுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை ஒட்டியே அதன் அமைப்பு முறை விளங்கும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கும் கருத்துகளை இணைத்து வேற்றுமையில் ஒற்றுமையைக் காணலாம். அவ்வளவே!
பகவத்கீதையின் நோக்கம்: நான் புரிந்து கொண்ட அளவில், விதிக்கப்பட்ட கடமைகளைக் கைவிடுவது இல்லறத்தானுக்கு ஏற்புடையது அன்று!
மேலும், அந்தக் கடமைகளையும் சுய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டுச் செய்தல் வேண்டும் என்பது அடுத்த புரிதல்.
ஒரு செயலைச் செய்தால், அந்தச் செயலின் மூலம், தமக்கு என்ன இலாபம், தம் சுற்றத்திற்கு என்ன கிடைக்கும் என்று கணக்கிட்டு அதனால் அந்தச் செயலின் மீது பற்று கொள்வது என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
ஏன்?
இந்த உலகத்தைவிட்டு நீங்கும் பொழுது வருங்கால சந்ததியினர் வாழ இந்தப் பூமிப் பந்தைச் சிறந்த இடமாக விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் பொது நோக்கம். ஆகையினால் நம் பற்றுகள் இந்த உலகினைப் பாதிக்கவிடக் கூடாது.
பகவத்கீதையின் அடிநாதமாக ஐந்து கருத்துகளை முன் வைக்கிறேன்.
முதலாவதாக, “பற்றின்றி இரு” என்பதுதான்.
இரண்டாவதாக, குழப்பங்களைத் தவிர்க்க உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாகச் செய்; அவற்றின் பலனைக் குறித்துப் பதற்றம் வேண்டாம் என்பது.
மூன்றாவதாக, பொதுவாக, செயல்களும் அதனால் விளையும் பயன்களும் குணவசப்பட்டவை. எனவே உன் குணங்களை கட்டுக்குள் வைப்பது முக்கியம். குணங்களின் தன்மைகளை அறிந்து அதற்கேற்றார் போல் உன் செயல்களை வடிவமை என்பது.
நான்காவதாக, பொருள்கள் அனைத்தும் இயற்கையில் இருந்தே தோன்றியவையே. இயற்கையைக் கவனி; இயற்கையினிடம் சரணடை; இயற்கைக்கு இயந்தே செயல்களை அமைத்துக் கொள் என்பது.
ஐந்தாவதாக, முடிவாக, நாம் அடைய வேண்டியது மன அமைதி! இதுதான் ஆனந்தத்தை அளிக்கும். இந்த உலகைவிட்டு அமைதியாக நீங்கவும் ஏதுவாக இருக்கும்.
இன்னும் பகவத்கீதையைச் சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதுதான் “மன அமைதி”! இதுதான் முக்கியம்.
மன அமைதிதான் அடைய வேண்டிய இலக்கு! அதற்குப் பாதை என்னெவென்று கேட்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட ஐந்து கருத்துகளை மீண்டும் ஒரு மீள் பார்வை செய்யவும்!
இது நாள்வரை இந்தத் தொடரை வாசித்து ஊக்கமளித்த அனைவர்க்கும் என் நன்றிகள்.
என் ஆசிரியப் பெருமக்களை மனம் மொழி மெய்களால் மீண்டும் ஒரு முறை போற்றிப் பணிந்து விடை பெறுகிறேன். நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்.

Comentarios