top of page
Search

04/01/2025, பகவத்கீதை, பகுதி 141

  • mathvan
  • Jan 4
  • 2 min read

Updated: Jan 13

அன்பிற்கினியவர்களுக்கு:

கீதாச்சாரியன் குணத்திரய விபாக யோகத்தைச் சொல்லத் தொடங்குகிறார்.

 

ஞானங்களிலெல்லாம் உயர்ந்த ஞானத்தை உனக்கு மீண்டும் உரைக்கின்றேன். இதனை அறிந்து முனிவர்களெல்லாம் இந்த உலகத்திலேயே பேரின்ப வாழ்வினைப் பெற்றுள்ளார்கள். – 14:1

 

இதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல் தெய்வமாகிறார்கள். அவர்களுக்கு அழிவுக் காலம், தோற்றக் காலம் என்கிறார்களோ அந்தச் சுழற்சி இல்லை. அஃதாவது, இறப்பும் இல்லை; பிறப்பும் இல்லை. – 14:2

 

பிறப்புகள் பல வகை என்று பார்த்துள்ளோம்.

 

உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்

நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய் … பாடல் 1419; திருஞானசம்பந்தர் தேவாரம்

 

என்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்கள் என்றார்கள்!


அடுத்துவரும் பாடலில் மஹத் என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறார்.

மஹத் என்றால் பெரிய என்று ஒரு பொருள் உள்ளது.

ஆனால், தத்துவ நோக்கில் மஹத் என்னும் சொல் முதன்மை என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.


சாங்கியத் தத்துவத்தில், புருஷன் பிரகிருதியுடன் ஈடுபடும் போது பிரபஞ்சத்தின் படைப்புச் செயல்முறை தொடங்குகிறது. மூன்று குணங்களைக் கொண்டுள்ள பிரகிருதி (இயற்கை) என்பது படைப்பின் முதன்மையானது. எனவே, எல்லா உயிர்களுக்கும் பிறப்பிடம் என்பது மஹத் பிரம்மம் என்னும் மூலப்பிரக்கிருதியே! அஃதாவது, இயற்கையின் மடியே!


இஃதே தாய்.


இந்தக் கருத்தினை அடுத்துவரும் பாடல்களில் பயன்படுத்துகிறார்.

அர்ஜுனா, மஹத் பிரம்மம் என்னும் மூலப்பிரக்கிருதியில் எல்லா உயிர்களின் வித்து இருக்கும்படி செய்கிறேன். அதனின்று எல்லாம் உயிர்த்தெழுகின்றன. எல்லாக் கருப்பைகளில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் மஹத் பிரம்மம் என்னும் மூலப்பிரக்கிருதியே தாய்; நான் அந்தத் தோற்றங்களுக்குத் தந்தை போன்றவன். – 14:3-4


சாத்விகம், இராசசம், தாமசம் என்னும் முக்குணங்களும் பிரகிருதியில் இருந்து எழுவன. இம்மூன்றும்தாம் அழிவில்லாத உயிர்களைப் பிணிக்கின்றன. – 14:5


முக்குணங்களுள் சாத்விகம் (பொறுமைக்கு இருப்பிடம்) தன் குற்றமற்றத் தன்மையால் ஒளி வீசுவது. இனியவைகளின் சேர்க்கையாலும், அறிவினது மேற்பார்வையினாலும் கட்டுப்படுத்தும். – 14:6


அர்ஜுனா, இராசச குணமென்பது செயல்களைச் செய்யத் தூண்டும் அவாவின் வடிவம். இஃது, செயல்களைச் செய்யும் வேட்கையையும் பற்றையும் உருவாக்கும். செயல்களின் மீதுள்ள பற்றினால் கட்டுப்படுத்தும். – 14:7


தாமச குணமோ, அர்ஜுனா, (தள்ளிப்போடுவதற்கு இருப்பிடம்) அறிவின் மயக்கத்தினால் விளைவது. எல்லா உயிர்களுக்கும் மோகத்தை விளைவிப்பது என்று அறி! (மோகம் இல்லையேல் உயிர்கள் பிறப்பது எங்கனம்?) இஃது, மயக்கம், சோம்பல், உறக்கம் உள்ளிட்டவற்றால் கட்டுப்படுத்தும். – 14:8


அர்ஜுனா, சாத்விகம் சுகத்தில் சேர்ப்பிக்கும்; இராசசம் செயல்களில் சேர்ப்பிக்கும்; தாமசம் அறிவினை மறைத்து மயக்கத்தில் சேர்ப்பிக்கும். – 14:9


அர்ஜுனா, சாதிவிகம் ஏனைய இரு குணங்களான இராசசம், தாமசத்தைக் கட்டுப்படுத்தி மேலெழும்; இராசசமோ சாதிவிகத்தையும் தாமசத்தையும் அடக்கும்; அவ்வாறே தாமசமும் சாத்விகத்தையும் இராசசத்தையும் அடக்கி மேலெழும். – 14:10


எப்பொழுது, இந்த உடலில் உள்ள ஒவ்வொரு வாயில் வழியாகவும் ஞானம் மிளிர்கிறதோ அப்பொழுது சாத்விகம் மேலெழுந்துள்ளது என்று அறிதல் வேண்டும். – 14:11


ஆசை, புலன்களின் தாக்கம், செயல்களைச் செய்ய அதீத ஆர்வம். அவற்றினில் பற்று, அதனால் உள்ளத்தில் அமைதியின்மை உண்டாகின்றனவோ அப்பொழுது இராசசம் மேலோங்கியுள்ளது என்று அறி. – 14:12


எப்பொழுது, மயக்கம், தளர்ச்சி, முயற்சியின்மை, புலன் நுகர்ச்சியில் மோகம் உள்ளிட்டவைகள் முன்னுக்கு வர முயல்கின்றனவோ அப்பொழுது தாமசம் தலைத்தூக்கிறது. – 14:13


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page