04/10/2024, பகவத்கீதை, பகுதி 50
- mathvan
- Oct 4, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
Archetype (பொது புத்தி, சமுதாய மூளை) என்றால் என்ன?
ஹஜ்ரத் தொடர்கிறார்.
“.. சரி, நானே சொல்லித் தொலைக்கிறேன். ஆர்க்கிடைப்புங்கிறது ஒரு பேங்க் மாதிரி. கண்ணுக்குத் தெரியாத பேங்க். சமுதாயத்தில உள்ளவன்லாம் ஒரே மாதிரி சிந்திச்சு, சிந்திச்சு, அந்த சிந்தனை சக்தி எல்லாம் ஒரு பேங்க் அக்கவுன்ட் மாதிரி தெரண்டு இருக்கும். பத்துபேர் மாதிரியே நாமலும் சிந்திக்கும்போது, நம்ம சிந்தனையெ அந்த பேங்க்தான் கட்டுப்படுத்தும். Collective Unconscious -ன்டு இதெ சைக்காலஜி சொல்லுது. இந்த ஆர்க்கிடைப்புக்கு அடிமையாகத்தான் பொதுவா சாதரண மனுசன் எல்லாரும் இரிக்கிறான். அதெத்தான் சமுதாய மூளைன்னு சொல்லி வைச்சேன்…”
“… நல்லா வெளங்கிக்கிங்க. சாதனையிலே சிரிப்புமில்லெ, அழுகையுமில்லெ…”
“… எவன் சாதனெ பண்ணேன்னு சொன்னானோ, அவன் அதுக்கு மேலெ போவத் தயாரா இல்லென்டு அர்த்தம். எவன் வேதனெ பட்டு அழுவுறானோ அவன் வாழத் தயாரா இல்லென்டு சொல்றதா அர்த்தம்…”
(ஊரெல்லாம் ஆடை அணிந்து கொண்டு சென்றால் நாம் ஆடையணியாமல் செல்வதல்ல இதன் பொருள்!)
“… சிக்கல் வரும்போதுதான் சமுதாய மனம் தெரளுது. உங்களுக்கு சிக்கல் வராம இருக்கும்போதே தெரளுனும். ஒடஞ்சுபோன பொருளைப்பத்தி ஊர்லெ உள்ளவன் ரெண்டு மணி நேரம் பேசுறான். நீங்க ஒடையாத பொருளைப் பத்தி ஒரு மணி நேரம் பேசணும். ஒடஞ்சு போன பொருளெ ஒரு விநாடியிலெ நீங்க மறக்கணும்…”
நாகூர் ரூமி அவர்களின் திராட்சைகளின் இதயத்தை வாய்ப்பிருந்தால் வாங்கிப் படிக்கவும்.
மாற்றி யோசிப்பதனை, சமுதாய மூளையை (ஆர்க்கிடைப்பை) உடைப்பதனைச் சொல்லப் போகிறார் பரமாத்மா.
பிற உயிர்களுக்கு (சமுதாய புத்திக்கு) எது பகலோ அது மனம் ஒரு நிலைப்பட்டவனுக்கு, மாற்றி யோசிப்பவனுக்கு (மனம் அடங்கிய முனிவனுக்கு) இரவாகக் காண்பான். – 2:69
இந்தப் பாடல் ஓர் பெருங் குறிப்பு. பகவத்கீதை ஏதோ ஒரு சிலரை அல்லது பலரை வெட்டிக் கொல்ல அதன் மூலம் வெற்றியை அடையச் சொன்னது போலவா இருக்கிறது?
இது நம்மை நாமே வெற்றிக் கொள்ள வழி சொல்கிறது. சமுதாய மூளையைக் கொண்டு இதனை வெறுமனே பூசனை செய்தால் போதாது. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கேதான் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வளர்ச்சிக்கும் அதுவே வழியாகும்.
பரமாத்மா மேலும் தொடர்கிறார்:
பல் வேறு திசைகளில் இருந்து பல் வேறு ஆறுகள் திரண்டு வந்து கடலில் கலந்தாலும் அந்தக் கடல் தன் மட்டில் நிலை குலையாமல் இருக்கின்றது. அது போல ஆசைகள் பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதல் நிகழ்த்தினாலும் நிலை குலையாமல் இருப்பவனின் மனம் அமைதியில் நிலைக்கும். - 2:70
செயல்களில் “நான்” “எனது” என்னும் பற்றுகளை அறுக்க மனம் அமைதியுடன் செயல்படும். – 2:71
பார்த்தா இஃதே உயர்ந்த நிலை. இவ்வாறு செயல்படுபவன் எவனோ அவனுக்கு வாழ்க்கையில் மயக்கம் இல்லை. அவன் இந்த உலகத்தைவிட்டு நீங்கும் போதும் மன அமைதியுடனே நிங்குவான். அதுவே முக்தி. – 2:72
அவனின் செயல்கள் பன்னெடுங்காலம் புகழுடன் விளங்கும்.
இந்தப் பாடலுடன் சாங்கிய யோகம் என்னும் இரண்டாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. பகவத்கீதையில் மிக முக்கியமான அதிகாரம் இந்த இரண்டாம் அதிகாரம்!
அண்மையில் ஆட்டோவில் படித்தது:
“வாழ்ந்தவர்கள் எல்லாம் வரலாறு படைத்தவர்கள் இல்லை;
வரலாறு படைத்தவர்கள் எல்லாம் தனக்காக வாழ்ந்தவர்கள் இல்லை.” சிந்தக்க வேண்டிய கருத்து.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments