05/10/2024, பகவத்கீதை, பகுதி 51
- mathvan
- Oct 5, 2024
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தின் சுருக்கம்:
சாங்கியம் என்றால்?
ஆராய்ந்து தெளிவதனால் அடையும் அறிவு அல்லது ஞானம்.
யோகம் என்றால்?
அந்த அறிவினை மேலும் சிந்தித்துச் செயல்படுத்தும் வழிமுறை.
எதனை ஆராய்வது?
உண்மைப் பொருள்களை ஆராய்வது.
உண்மைப் பொருள்கள் யாவை?
பதி, பசு, பாசம். அஃதாவது, இறைவன் அல்லது இயற்கை, எண்ணற்ற உயிர்கள், பற்று.
ஆராய்ச்சி எதனைக் குறித்து?
நிலைத்த தன்மை அல்லது நிலையாமையைக் குறித்து.
நிலையாமை என்பது? தோன்றிய பொருள்கள் மறையும்.
இதனைத் தெரிந்து கொண்டால் என்ன பயன்?
இன்ப - துன்ப நடுவுநிலைமை ஏற்படும். மனத்தில் குழப்பம் மேலோங்காது. இதுவும் கடந்து போகும் என்ற ஞானம் தோன்றும். பற்று நீங்கும்.
பற்று நீங்கினால்?
மனத்தில் தெளிவு மற்றும் உறுதி ஏற்படும். செயல்களைச் செவ்வனே செய்ய இயலும்.
செயல்களைச் செவ்வனே செய்தால்?
பின்னர் இப்படிச் செய்திருக்கலாமோ, அப்படி நிகழ்த்தியிருக்கலாமோ என்றெல்லாம் வருந்தத் தேவையில்லை. மனத்தில் அமைதி நிலவும்.
மனத்தில் அமைதி நிலவினால்?
செய்த செயல்கள் இறுதிக் காலத்தில் வந்து நம்மை பயமுறுத்தாது. இந்த உலகத்தைவிட்டு நீங்கும்போதும் மனத்தில் சலனம் இருக்காது. இஃதே முக்தி. செய்த செயல்கள் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று பல காலம் போற்றப்படும். புகழுடன் இந்த உலகத்தில் எச்சங்கள் நிலைக்கும்.
சரி, செய்ய வேண்டியன யாவை?
புலன்களின் வழி மனத்தைச் செல்லாமல் வைத்தல்; அஃதாவது, விலக்கியவைகளை ஒழித்தல்.
தத்தம் நிலைகளில் நின்று தமக்கு வகுத்த கடமைகளைக் கட்டுப்பாட்டுடன் கண்ணியமாகச் செய்தல்.
இவையே சாங்கிய யோகத்தின் சாரம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments