06/01/2025, பகவத்கீதை, பகுதி 145
- mathvan
- Jan 6
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
குணங்களின் வெளிப்பாடுதான் உடலின் மொழி.
அடுத்து வரும் பாடல்களில் பல ஆச்சரியமான கருத்துகளை முன் வைக்கிறார் கீதாச்சாரியன். அவை அப்படியே:
எப்பொழுது சாத்விகம் மேலோங்கி உள்ளதோ அப்பொழுது ஒருவன் உயிரினை நீத்தால் அவன் ஞானிகளுக்குரிய குற்றமற்ற உலகங்களை அடைகிறான். இராசச குணங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளபோது இறந்தால் செயல்களில் பற்றுக் கொண்டவர்களிடையே பிறக்கிறான்; தாமச குணங்களில் மூழ்கி இருக்கும்போது மரணிப்பவன் பகுத்தறிவில்லாத பிறப்பாகப் பிறக்கிறான். – 14:14-15
இஃது ஏதோ பயமுறுத்துவது போலத் தோன்றுகின்றது. எனக்குத் தோன்றுவது என்னவென்றால் நாம் மறையும் தருவாயிலும் நாம் வெளிப்படுத்தும் குணங்களின் மொழியைக் கவனித்துச் சரி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் கீதாச்சாரியன் சொல்ல வருவதாக நினைக்கிறேன்.
அடுத்து மீண்டும் பிறக்கிறோமோ இல்லையோ அதனைக் குறித்த கவலைத் தேவையில்லை.
மறுபிறப்பு உண்டென்பார் சிலர்; இல்லையென்பார் சிலர்; நமக்கில்லை அந்தக் கவலை என்று பற்றற்று விதித்தன செய்வோர் இருப்பர் என்றும் சொல்லியுள்ளார் கீதாச்சாரியன்.
சிலர் அடுத்த ஜென்மத்திலாவது ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடு என்று ஆண்டவனிடம் வேண்டுவதனையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் கீதாச்சாரியன் சொன்ன கருத்துகளை இந்த உலகினைவிட்டு பிரியும் தருணத்திலாவது கவனத்தில் இருத்தி நல்லதொரு பிறப்பு அவர்களுக்கு அமைய வாழ்த்துவோம்!
நாம் கீதாச்சாரியனைத் தொடர்வோம்:
சாத்விகத்தின் பயன் தீங்கற்ற நல்ல செயல்கள் என்பர்; இராசச குணத்தின் பயன் துன்பம்; தாமச குணத்தின் பயன் மயக்கம். – 14:16
சாத்விகத்திலிருந்து அறிவு (ஞானம்) பிறக்கின்றது; இராசசத்திலிருந்து ஆசை மேலோங்குகிறது; தாமசத்திலிருந்து அறியாமையும், மதி மயக்கமும், மோகமும் தோன்றுகின்றன. – 14:17
சாத்விக குனமுடையோர் முன்னேறுகின்றனர்; இராசச குணமுடையோர் இருந்த இடத்திலேயே உழல்கின்றனர்; தாமச குணமுடையோர் தாழ்ந்து போகின்றனர். – 14:18
இரண்டாம் அத்தியாயத்தில் இருந்த ஒரு பாடலை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவோம்.
மீள்பார்வைக்காக:
வேதங்கள் சொல்வனவெல்லாம் முக்குணங்களைப் பற்றியவை. நீ முக்குணங்களைக் கடந்தவனாய், குணக் கோளாறுகள் இல்லாதவனாய், இருள் சேர் இரு வினைகளையும் சேராமல் (நல் வினை, தீ வினை) அவற்றை வெற்றி கொண்டு உறுதியுடைய மனத்தினனாய், பொருள்களின் மேல் பற்றில்லாமலும், ஐம்பூதங்களால் பரவி நிற்கும் உள்ளத்தை அறிந்து இருப்பாயாக. – 2:45
குணங்களைப் பின்னர் விரிப்பார் என்றும் பார்த்தோம். அவற்றைத்தாம் இந்த பதினான்காம் அத்தியாயமான குணத்திரய விபாக யோகமென்னும் இப்பகுதியில் விரித்துரைக்கிறார்.
அதற்கு முன்னர் சில நியாயங்களைப் பார்ப்போம்!
தருக்க சாத்திரத்தில் தத்துவார்த்தக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள மூன்று முக்கியமான அளவைகள் இருக்கின்றன. அளவைகளைப் பிரமாணங்கள் என்றும் அழைக்கிறார்கள். அந்த மூன்று பிரமாணங்களாவன, காட்சிப் பிரமாணம் (காண்டல் அளவை), அநுமானப் பிரமாணம் (கருதல் அளவை), ஆகமப் பிரமாணம் (உரை அளவை) ஆகும்.
கருதல் அளவையில் சில நியாயங்களைப் பயன்படுத்துகின்றனர். நியாயம் என்றால் வழக்குரை என்று பொருள்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments