06/10/2024, பகவத்கீதை, பகுதி 52
- mathvan
- Oct 6, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகம். அஃதாவது செயல்களைக் குறித்துச் சிந்தித்தல்.
சாங்கிய யோகத்தைக் கேட்ட அர்ஜுனன், அவனின் இயல்புக்கு ஏற்றார் போல, அவன் மனத்தில் மீண்டும் குழப்பம் நிலை கொள்கிறது. நம்முடைய பிரிதிநிதியல்லவா அவன்!
அறிவில் தெளிவு முக்கியம் என்றார். பின்னர் பற்றற்றுக் காரியங்களைச் செய் என்றார்.
அர்ஜுனன் பேசத் தொடங்குகிறான்:
கிருஷ்ணா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அறிவிலேயே தெளிவு பெற்று மனம் அமைதியடையலாம் என்றாய்; அதுதான் உயர்ந்தது என்றால் அதன் மூலம் அமைதி பெறுவதனை விடுத்து என்னை ஏன் செயல் செய்ய, அஃதாவது, இந்தக் கோரமான போரில் ஈடுபடத் தூண்டுகிறாய்? – 3:1
உனது பேச்சினால் எனக்குக் குழப்பமே மேலோங்குகிறது; எனக்குச் சிறந்தது எது என்று ஒன்றே ஒன்றினை எடுத்துச் சொல். – 3:2
நம்மாளு: கிருஷ்ணரின் நிலை பாவம்தான். இவ்வளவு நேரம் என்னெவெல்லாமோ சொல்லி விளங்க வைத்துவிட்டேன் என்று நினத்திருந்தார். கிருஷ்ணர் மட்டுமா பாவம்.
அனைத்து ஆசிரியர்களின் நிலையும் அஃதே!
முதலில் சுருக்கமாகச் சொன்னால் புரியலை என்பான். குறிப்புகளையெல்லாம் தயார் செய்து கொண்டு வந்து விளங்கிக் கொள்ளட்டும் என்று உயிரைக் கொடுத்து மணிக்கணக்காகச் விளக்கிச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.
“அப்பாடா எவ்வளவு கடினமான செய்தியை விளக்கியுள்ளேன்” என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எழுந்து கேட்பான்!
“சார், இதெல்லாம் ரொம்ப குழப்பமா இருக்கு. இதைக் கவனம் வைச்சுக்க ஏதாவது, ஒரு சார்ட் கட் (short-cut = குறுக்கு வழி) சொல்லுங்க சார்” என்பான்!
அதுபோல, இப்பொழுது அர்ஜுனன் கேட்கிறான்!
கிருஷ்ண பரமாத்மா இல்லையா? மீண்டும் பொறுமையுடன் தொடங்குகிறார்.
மகாகவி பாரதி அவர்களின் உரை:
“பாபெமான்றுமில்லாத அர்ஜுனா, இவ்வுலகத்தில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்து. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.” – 3:3
எனக்குப் புரியும் விதத்தில் சற்று விரிவாக:
அர்ஜுனா, இரு வழிகள் என்று முன்னர் சொன்னேன். அவையாவன: சாங்கிய யோகம்; கர்ம யோகம். சாங்கிய யோகத்தினால் அறிவினில் தெளிவு பிறக்கும். இஃது அறிவினைக் கசக்குபவர்களுக்கு! செயல்களைச் செய்யவேண்டும் என்ற கடமை இல்லாதவர்களுக்கு. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுக்கு! கர்ம யோகம் என்பது பற்றற்றுக் காரியங்களச் செய்வது. இஃது செயல்களைச் செய்ய கடமைப்பட்டவர்களுக்கு! அஃதாவது இல்லறத்திலே இருப்பவர்களுக்கு. (இதற்குச் சாங்கிய அறிவும் துணை கொடுக்கும்.) – 3:3
(சாங்கியமும் யோகமும் ஒன்றே என்று பின்னர் விளக்கமாகச் சொல்லுவார். அந்த இடம் வரும்போது அதனைச் சிந்திப்போம்.)
செயல்களைத் தொடங்காமல் இருப்பதனாலேயே ஒருவன் மன அமைதியைப் பெறுவதில்லை. செயல்களைத் துறந்துவிடுவதனாலும் ஒருவன் மன அமைதியைப் பெறான். – 3:4
உயிர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருப்பது இயல்பு. மனம், மொழி, மெய்களால் எப்பொழுதும் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும். அவற்றை இச்சையால் (voluntary) செய்கிறார்களா அல்லது அனிச்சையால் (reflux) செய்கிறார்களா என்பதுதான் கேள்வி.
படித்துக் கொண்டிருப்போம். ஆனால், கால்கள் தம்மட்டில் ஆடிக் கொண்டே இருக்கும். தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்போம். கைகள் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கும். அமர்ந்திருப்போம், ஆனால் மனம் பல இடங்களுக்குப் பயணப்பட்டு பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்.
பரமாத்மா தொடர்கிறார்:
செயல்களைச் செய்யாமல் ஒருவனாலும் இருக்க இயலாது. இயல்புகளுக்கும் குணங்களுக்கும் ஏற்றார்ப்போல் ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். – 3:5
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments