07/01/2025, பகவத்கீதை, பகுதி 146
- mathvan
- Jan 7
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
முக்கியமான மூன்று நியாங்களாவன: கைமுதிக நியாயம்; அனுவாதம்; தூல அருந்ததி நியாயம் ஆகும்.
பூனைக்கு அஞ்சுபவன் புலிக்கு அஞ்ச மாட்டானா என்று முடிவுக்கு வருவது “கைமுதிக நியாயம்” என்கிறார்கள்.
திருக்குறளிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு. காண்க
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. - 188; புறங்கூறாமை
உடனிருப்பவர்களின் செயல்களையே நியாமற்றுத் தூற்றிக் கொண்டிருப்பவர்கள், வெளிவட்டத்தில் இருப்பவர்களை எப்படியெல்லாம் தூற்றியிருப்பார்கள் என்பதனை நாம் ஊகித்து அறிந்து கொள்ளலாம். இஃதே கைமுதிக நியாயம்.
“அனுவாத நியாயம்” (precedents) என்பது முன்னரே நிருபிக்கப்பட்ட ஒன்றினைப் பின்னர் நிகழும் செயல்களுக்கும் பொருந்தும் என்று எடுத்துச் சொல்வது.
“தூல அருந்ததி நியாயம்” என்பது நன்றாக கண்ணுக்குத் தெரியும் பெரிய விண்மீனைக் முதலில் காட்டுவார்கள். அதன்பின்னர், அதனருகில் உள்ள சிறிய அருந்ததி என்னும் விண்மீனைக் (இதுதான் நாம் பார்க்க வேண்டியது) காட்டுவது. திருமணங்களில் அருந்ததி பாருங்கள் என்கிறார்களே அதேதான்!
அஃதாவது, இல்லறத்தில் ஏதாவது ஒன்றினை விளக்க வேண்டுமென்றால் ஒரு பெரிய பொருளைப் பெரிதாகச் சொல்லி அதற்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய பொருளுக்குக் கவனத்தைத் திருப்புவது. இஃது ஒரு குறியீடு.
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
அதாங்க, குணத்திரய விபாக யோகெமென்னும் அத்தியாயத்தில் குணங்களைக் குறித்து விரிவாகச் சொல்லிக் கொண்டே வருகிறார்.
எதற்காக என்பதுதான் வினா!
குணங்களை விரிவாகச் சொன்னவர் இறுதியில் அந்தக் குணங்களையும் கடந்து வெளியே வா என்கிறார். இதுவே தூல அருந்ததி நியாயம்!
இடம், காலத்திற்கு ஏற்றார்போல் குணங்கள் மாறலாம். அதன் பரிமானங்களைத் தெரிந்து கொள். ஆனால், அக் குணங்களையும் கடந்து செல் என்று பாடல் 2:45 இல் சொன்னவர் அந்தக் கருத்தினை மீண்டும் வலியுறுத்துகிறார்.
நாம் மீண்டும் குணத்திரய விபாக யோகத்திற்குள் நுழைவோம்.
குணங்கள்தாம் அனைத்திற்கும் அடிப்படை என்பதனைக் காண்பவனும், அவற்றையும் கடந்து செல்வதனை அறிந்தவனும் பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் உள்ளிட்டவைகளில் இருந்து விடுபட்டவனும் சாகாத்தன்மை அடைகிறான். – 14:20
குணங்களை மிக விரிவாகச் சொல்லி அதன் பின்னர் அவற்றையும் “கடந்து செல்” என்பதுதான் அடிக்கோடிட வேண்டிய இடம். இதுதான் முக்கியம்.
இப்பொழுது நமக்குச் சில ஐயங்கள் எழலாம். கவலை வேண்டாம். நம் அர்ஜுனன் எதற்கு இருக்கிறார். அவர் கேள்விக் கனைகளைத் தொடுப்பார்!
அர்ஜுனன் கேட்பது:
எம்தலைவனே, மூன்று குணங்களைக் கடந்தவனின் இலக்கணம் எத்தகைத்து? அவனின் செயல்கள் எங்கனம் இருக்கும்? இம்மூன்று குணங்களையும் அவன் எவ்வாறு கடக்கின்றான்? – 14:21
மூன்று முக்கியமான வினாக்களை எழுப்பிவிட்டான் அர்ஜுனன்! இதற்கு விடைகளை எங்கனம் அமைக்கிறார் என்று பார்ப்போம்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments