07/09/2024, பகவத்கீதை, பகுதி 23
- mathvan
- Sep 7, 2024
- 2 min read
Updated: Jan 9
அன்பிற்கினியவர்களுக்கு:
அந்தச் சமநிலைத் தவறும் புள்ளியை கவனத்தில் வைப்போம். பூமிப் பந்தினைக் கற்பனை செய்யுங்கள். மக்கள் தொகை சில பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது பல பத்து மடங்கு பெருகிவிட்டது. சில வீடுகள் இருந்த இடத்தில் பல நூறு வீடுகள்!
உலகின் எடை கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால், அதன் வேகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே இருபத்தி நான்கு மணி நேரம்தான் ஒரு நாள்!
பிரபஞ்சத்தின் உள்ளே நிற்கும் சக்தி எங்கனம் ஈடு கொடுக்கிறது? ஓய்வில்லாமல் அஃது இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகையினால்தான், நம்மால் சந்திரனுக்குச் செல்லவும், மற்ற கிரகங்களை ஆராயவும் முடிகின்றது.
மண்ணிலே வேலி கட்டலாம்; ஆகாசத்தில் வேலி கட்ட முடியுமா என்றார் இராமகிருஷ்ண முனி.
ஆகாசத்தைத் தாங்க என்ன இருக்கிறது? ஆனால், அந்த ஆகாயம் இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்கிக் கொண்டு இயங்க அனுமதிக்கிறது.
பிரபஞ்சமும் அதே வேகத்தில் அதே பாதையில் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
ஆகாயத்தைக் கண்ணால் காண முடியாது; அதனை எந்த வாள் கொண்டும் கூறு போட முடியாது; அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து நிற்கும் பொருள் ஆகாயம்.
ஆகாயம் தன் தன்மை இழந்தால், தன் சமநிலைத் தவறினால் …
இந்தக் கேள்வியைக் கேட்கவே பயமாக இருக்கிறது.
அது மாறாது, மாறாது, மாறவே மாறாது. நம்பு என்றுதான் பதிலளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி …
ஆபாவாணன், ஊமை விழிகள், 1986
இது நிற்க.
உடலிலே உயிர் என்ற ஒன்று இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கலாம் என்பதனை இந்த உடல் இயங்குவதனால் அறிகிறோம்.
உயிரினைக் கூறு போட முடியுமா? முடியாது.
கண்ணால் காண? அதுவும் இல்லை.
தொட்டு உணர? இல்லை. இயலாது.
கண்ணால் காண முடியாததும், தொட்டு உணர முடியாததுமாகிய ஒரு பொருள் இருக்கவே இருக்காது என்று சொல்ல இயலுமா என்றால் முடியாது,
உயிர் என்பது நம் உடலில் உள்ளது என்பது உண்மை; அந்த உயிர் எங்குள்ளது என்றால் அதன் வியாபகம் (பரவல்) உடல் முழுவது உள்ளது.
எப்படிச் சொல்ல இயலும் என்றால் காலில் அடிபட்டால் காலைப் பிடித்துக் கொண்டு உயிர் போகிறது என்கிறோம்;
பல்லில் கோளாறு என்றாலும் உயிர் போகிறார்போல் வலிக்கிறது என்கிறோம்; தலைவலி என்றாலும் அவ்வாறே!
எனவே நம் உயிரின் வியாபகம் உடல் முழுவதும் உள்ளது என உணரலாம்!
உடலுக்குத் தோற்றம், வளர்ச்சி, சிதைவு என்னும் மூன்று பருவங்கள் உண்டு.
உடல் தோன்றிய பொருள்; அஃது அழிந்தே தீரும்.
இல்லது தோன்றாது; உள்ளது மறையாது – இதுதான் சற்காரிய வாதம். காண்க https://foxly.link/easythirukkural_சற்காரிய_வாதம்_1, https://foxly.link/easythirukkural_சற்காரிய_வாதம்_2
இதனைக் கிருஷ்ண பரமாத்மா பாடல் 2:16 இல் தெளிவுபடுத்துவார்.
உயிர் தோன்றாப் பொருள் என்கிறது சைவ சித்தாந்தம். உயிர்கள் பல; அவை அனாதி காலம் தொட்டே இருக்கின்றன என்கிறார்கள்.
எனவே உயிர்க்கு எந்த வளர்ச்சிதை மாற்றமும் இல்லை என்கிறார்கள்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments