07/10/2024, பகவத்கீதை, பகுதி 53
- mathvan
- Oct 7, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓய்வு (Relaxation) என்பதற்கு நம் ஹஜ்ரத்தின் (திராட்சைகளின் இதயம் – நாகூர் ரூமி) பதில் என்னவென்றால் ஒரு செயலைச் செய்ய வேண்டி இருந்தால் அந்தச் செயல்களுக்குத் தேவையான புலன்களைத் தவிர மற்ற புலன்கள் சும்மா இருப்பது! அஃதாவது ஓய்வாக இருப்பது. இஃதே கர்ம யோகம்.
உதாரணத்திற்குப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் கண்ணுக்கும் மூளைக்கும்தான் அங்கு வேலை. மீதமுள்ள புலன்கள் ஓய்வாக இருக்க வேண்டும். காலை ஆட்டிக் கொண்டிருப்பதும் கையால் கிறுக்கிக் கொண்டிருப்பதும் நம் ஆற்றல் ஒருமைப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.
இஃதே தியானம் (meditation). இதனை அறிந்து கொண்டால் தனியாகத் தியானம் செய்ய வேண்டாம்.
கர்ம யோகம் என்றால் என்னவென்று குமரகுருபரர் சுவாமிகள் சொல்வது போல் அமைந்துள்ள பாடல். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பாடலும் கூட!
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார். பாடல் – 53; நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர் சுவாமிகள்
(செவ்வி = காலம், நேரம்)
பரமாத்மா பாடல் 3:5 இல் குணங்களுக்கு ஏற்றார்ப்போல் ஏதேனும் செயல்களைச் செய்து கொண்டே இருப்பார்கள் என்றார். இதுதான் ஆர்க்கிடைப் (architype) மூளையின் வழி. இதனைத்தான் மாற்ற வேண்டும்.
பரமாத்மா சொல்கிறார்:
(இன்னும் சிலர் இருப்பார்கள்.) விலக்க வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அவர்களின் மனது அவற்றின் பின்னாலேயே போய்க் கொண்டிருக்கும். இவர்கள் முடர்கள், பொய் ஒழுக்கம் உடையவர்கள். – 3:6
இப்படிச் செயல்களை ஒடுக்கிவிட்டேன் என்று பாவனை செய்வதனால் என்ன பயன்?
எவன் ஒருவன் மனத்தையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தி பற்றற்றுச் செயல்களைச் செய்கிறானோ அவனே சிறந்தவன். – 3:7
இல்லறத்தில் இருப்பவர்கள் செயல்களைச் செய்யாமல் இருக்கமுடியாது.
பரமாத்மா மேலும் தொடர்கிறார்:
விதிக்கப்பட்ட கடமைகளை, செயல்களைத் தவிர்ப்பதைவிட அவற்றை எதிர்க்கொண்டு செய்வது நன்று. செயல்களைச் செய்யாமல்விட்டால் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும். – 3:8
வேள்வி என்றால் என்ன?
வேள்வி என்றால் நெருப்பை மூட்டி அதில் பல வகையான ஆகுதிகளை இடுவது அல்ல. இல்லறத்தில் இருப்பவனுக்கு அவன் செய்யவேண்டிய கடமைகள்தாம் வேள்வி.
கடமைகளைச் செய்வதுதான் ஒருவர்க்கு வேள்வி.
இல்வாழ்வானுக்கு மொத்தம் பதினோறு கடமைகள் என்றார் நம் வள்ளுவப் பேராசான், காண்க https://foxly.link/easythirukkural_kural_41_42
பரமாத்மா தொடர்கிறார்:
கடமைகளைச் (வேள்விகளைச்) செய்வதனை விடுத்து மற்றவைகளைச் செய்யும் பொழுது அவையே உன்னைச் சிறைபடுத்தும். எனவே, பற்றுகளைக் களைந்து உன் கடமைகளைச் செய்து கொண்டிரு. – 3:9
அடுத்து வரப்போகும் பாடல்கள் சித்தாந்தகளாக உள்ளன.
உதாரணத்திற்குச் சைவ சித்தாந்திகள் உயிர்களுக்கு இறைவன் தனு, கரண, புவன, போகங்களை அளித்து இந்தப் பிரபஞ்சத்திற்கு அனுப்பி வைக்கிறான் என்கிறார்கள்.
தனு என்றால் உடல்; கரணம் என்றால் மனம் முதலான அனைத்து இந்திரியங்கள்; புவனம் என்றால் வாழுமிடம்; போகம் என்றால் இன்னின்ன அனுபவங்களைப் பெறுதல் என்கிறார்கள்.
அஃதாவது, நாம் இந்த உடலை எடுத்து, நமக்குப் புலன் உணர்வுகளைக் கூட்டி, இந்த இடத்தில் பிறந்து, இப்படியாக வாழ் என்று செய்கிறான் இறைவன் என்கிறார்கள்.
அந்தப் பிறப்பின் நோக்கத்தைக் கண்டறிந்து வாழ வேண்டியது நம் கடமை என்றும் சொல்கிறார்கள்.
“நாம் ஏன் பிறந்தோம்?” என்னும் தேடுதல்தான் ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கும் கேள்வி. பிறந்தோம்,இருந்தோம், மறைந்தோம் என்றால் அது ஒரு சாதாரண வாழ்க்கையாகிப் போகும் (archetype).
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments