08/01/2025, பகவத்கீதை, பகுதி 147
- mathvan
- Jan 8
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
அர்ஜுனனின் கேள்விகளுக்குப் பதில் அளித்து இந்த அத்தியாயத்தினை நிறைவு செய்யப் போகிறார்.
பாண்டவா, சாத்விகத்திலிருந்து மனத்தின் ஒளியும், இராசசத்திலிருந்து செயல்களைப் பெருக்க எழும் ஊக்கத்தையும், தாமசத்திலிருந்து எழும் மோகத்தையும் அவன் வெறுப்பதில்லை! அவை அவனைவிட்டு நீங்கும் பொழுதும் அவன் அவற்றின் மேல் பற்று வைப்பதில்லை. – 14:22
எவன் ஒரு சார்பு நிலையை எடுக்காமல் இருந்துகொண்டு குணங்களின் மாறுபாடுகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காமலும், குணங்களே செயல்களுக்கு அடிப்படை என்பதனை உணர்ந்து அசைவற்று இருக்கிறானோ; எவன் துன்பத்திலும் இன்பத்திலும் மனத்தில் சமனிலை எய்தி தன்னில் பொருந்தி இருக்கிறானோ, மண்ணையும், கல்லையும், பொன்னையும் சமமாக பாவிக்கிறானோ, விருப்பு வெறுப்பற்றவனோ, மனத்தில் உறுதியுடையவனோ, தன்னை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் ஒரு நிலையில் இருப்பவனோ, எவன் மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறானோ, நண்பர்களிடமும், பகைவர்களிடமும் சமநோக்கு வைக்கிறானோ, விருப்பத்தின் உந்துதலால் தொடங்கப் பெற்ற எந்த வினையையும் நினைத்த மாத்திரத்தில் துறக்கவும் தலைப்படுவானோ அவனே குணக்குன்று (குணாதீதன்) என்று சொல்லப்படுவான். – 14:23-25
மேற்சொன்ன கருத்துகளை ஆறாம் அத்தியாயத்தில் அதே மண், கல், பொன் என்னும் உவமைகளைக் கொண்டு சொன்னவை உங்கள் கவனத்திற்கு வரலாம்!
மீள்பார்வைக்காக:
அறிவாலும் அனுபவத்தாலும் அமைதியடைந்தவனாய், எதற்கும் அசையாதவனாய், புலன்களை வென்று மண்ணையும், கல்லையும், பொன்னையும் ஒன்று போலக் காணும் பண்பைக் கொண்டவனே யோகி என்று சொல்லப்படுவான். அவனே ஒரு நிலையில் நிற்பவன். – 6:8
மீண்டும் தொடர்வோம்.
எவன் என்னை முறை பிறழாது பக்தி யோகத்தால் பூசிக்கின்றானோ அவனும் இக்குணங்களை எளிதில் கடந்து சென்று முழுமை அடைவதற்கு தகுதி பெறுகின்றான். அழிவற்ற முழுமைக்கு நானே நிலைக்களன். என்றும் நிலைத்திருக்கும் அறத்திற்கும் ஒப்புயர்வில்லாப் பேரின்பத்திற்கும் நானே இருப்பிடம். – 14:26-27
குணங்களைக் கடக்க இயலவில்லையா உயர் சக்தியை நாடு என்று சொல்லி இந்த குணத்திரய விபாக யோகமென்னும் பதினான்காம் அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.
குணத்திரய விபாக யோகம் முற்றும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments