08/10/2024, பகவத்கீதை, பகுதி 54
- mathvan
- Oct 8, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
நான்.. ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா …
… மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
… கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன் தான் விளைந்தது … கவிஞர் வாலி, நான் ஏன் பிறந்தேன், 1972
எல்லா உயிர்களுக்கும் பயன் இருக்கும்போது நம்மால் என்ன பயன்? நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமலா இருக்கும். அது நாம் பிறந்த இடத்தால், சூழ்நிலையால் காணக்கிடைக்கும்.
இந்தக் கருத்தினை நாம் வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் நம் வாழ்வின் நோக்கம் என்ன? நாம் விட்டுச் செல்லப்போகும் இந்த உலகத்தை எவ்வாறு விட்டுச் செல்லப்போகிறோம்? என்றெல்லாம் தெளிந்து செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள் என்று பொருள் எடுக்கலாம். இதற்காகத்தான் இந்தச் சித்தாந்தங்கள் தோன்றி இருக்க வேண்டும்.
பரமாத்மா சொல்கிறார்:
ஸஹயஜ்ஞாஹா ப்ரஜாஹா ஸருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதிஹி அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக். – 3:10
புரா = தொடக்கத்தில்; ப்ரஜாபதிஹி = படைப்புகளின் முதல்வன்; ஸஹ யஜ்ஞாஹா = கடமைகளைத் தெளிவுபடுத்தி; ப்ரஜாஹா = உயிர்களை; ஸருஷ்ட்வா = உருவாக்கி; அனேன = இதனால்; ப்ரஸவிஷ்யத்வம் = வளர்ச்சியைக் காணுங்கள்; ஏஷஹ = இது; வஹ = உங்களுக்கு; இஷ்ட காமதுக் =காமதேனுவாக; அஸ்து உவாச்ச = இருக்கட்டும் என்றார்.
தொடக்கத்தில் படைப்புகளின் முதல்வன் உயிர்களுக்கு கடமைகளைத் தெளிவுபடுத்தி இதனால் வளர்ச்சியைக் காணுங்கள்; இஃது உங்களுக்குக் காமதேனுவாக இருக்கட்டும் என்றார். – 3:10
இதனைத் தொடர்ந்துவரும் மூன்று பாடல்கள் குறிப்புகளைப் போலத் தோன்றுகின்றன.
பாடல் 3:10 இல் உங்கள் கடமைகளைச் செய்வதால் நீங்கள் வளருங்கள்; உங்களுக்கு அவை நல்ல பயனை விளைவிக்கட்டும் என்றார்.
அஃதாவது, ஆடி ஓடி உழைத்த பொருளெல்லாம் பயன் தரட்டும் என்றார். பயன் என்பதற்கு வள்ளுவர் பெருந்தகை பல குறிப்புகள் சொல்கிறார்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. - 212; ஒப்புரவு அறிதல்
ஒருவன் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் தகுதி உள்ளவர்களுக்கு ஒப்புரவு செய்தற் பொருட்டு. மேலும் விளக்கத்திற்குக் காண்க https://foxly.link/easythirukkural_kural_212
பரமாத்மா தொடர்கிறார்:
கடமைகளைச் செய்வதானால் வரும் பொருள்களைக் கொண்டு தேவர்கள் முதலானவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இச்செயல்கள் மேலும் உங்களை உயர்த்தும். இஃது (ஒரு சுழல் போல) உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். – 3:11
இந்தப் பாடலுக்குக் குறிப்புரையாக அண்ணா சுப்பிரமணியன்:
“இங்கு கூறியது தேவ யஜ்ஞம், இதை ‘உப லக்ஷணமாக’க் கொண்டு அவ்வாறே ரிஷிகள், பிதிரர்கள், மனிதர்கள், பசு, பக்ஷி முதலிய ஸகல ஜீவராசிகளையும் போற்றி வாழ வேண்டும் என்பது கருத்து” என்கிறார்.
(பக்கம் 65, ஸ்ரீமத் பகவத்கீதை – ‘அண்ணா’ சுப்பிரமணியன், ஸ்ரீ இராகிருஷ்ண மடம், மைலாப்பூர் வெளியீடு, V111 5 M 3 C 1 85)
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments