09/01/2025, பகவத்கீதை, பகுதி 148
- mathvan
- Jan 9
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
குணத்திரய விபாக யோகமென்னும் பதினான்காம் அத்தியாயத்தினைத் தொடர்ந்து புருஷோத்தம யோகமென்னும் பதினைந்தாம் அத்தியாயம்.
புருஷர்களில் சிறந்தவன், முதன்மையானவன் புருஷோத்தமன் என்று பொருள்படும். இங்கே படைப்புகளின் மூலம் என்ற பொருளில் ஆகி வந்துள்ளது. இதனைக் குறித்துச் சிந்திப்பதுதான் புருஷோத்தம யோகம்.
இறைவனிடம் வேண்டும் பொழுது பெரும்பாலான மதத்தினர் கைகளை மேல் நோக்கி ஏந்தியே இறைஞ்சுகிறார்கள். மேலிருந்து வருவதுதான் அறிவு!
மரங்களின் இலைகளில்தாம் அவற்றிற்குத் தேவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அந்த இலைகளில் இருக்கும் நுண்ணியத் துளைகள் மூலம் தான் கீழிருந்து பெற்ற நீரினை நீராவியாக வெளியேற்றித் தன் வெப்ப அளவைச் ஒரே சிராக வைத்துக் கொள்கின்றது. நமக்கு வியர்ப்பதைப் போல!
பெரும்பான்மை கருதி வேர்கள் இருவகை என்று நமக்குத் தெரியும். அவையாவன: ஆணி வேர் (Tap root), சல்லி வேர் (Fibrous root).
ஆணி வேருக்கு மா, பலா, ஆல மரம் போன்றன எடுத்துக்காட்டு; சல்லி வேருக்கு நெல் முதலானவை.
ஏன் இந்த வேர் ஆராய்ச்சி என்கிறீர்களா? இருக்கு, காரணம் இருக்கு! அதற்குமுன் இன்னும் சில வேர்களைப் பார்ப்போம்.
நிலத்திற்கு அடியில்தான் வேர்கள் என்றில்லை. சில வகைத் தாவரத்திற்கு நிலப்பரப்பிற்கும் மேலேயும் வேர்கள் இருக்கும்!
தண்டுப் பகுதி, கிளை, அடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்தும் வேர்கள் வெளிப்படும்.
ஆல மரத்தின் கிளைகளில் உருவாகி கீழ் நோக்கி இறங்கி நிலத்தில் தடம் பதிக்கும் வேர்களின் பெயர் தாங்கு வேர்கள் (Prop).
பெரு மரங்களைச் சுற்றிச் சின்னச் சின்ன சுவர்களைப் போன்ற அமைப்பினைப் பார்த்திருப்பீர்கள். மருத மரம், அத்தி மரம் போன்றவற்றில் இந்த அமைப்பு இருக்கும். இவையும் வேர்களே. இந்த வேர்களுக்குப் பெயர் அண்டை வேர்கள் (butress roots / plank roots). இவ்வகை மரங்களுக்கு ஆழமான வேர்கள் இருக்கா.
இவை தவிர மிதவை வேர், உறிஞ்சு வேர், ஒட்டு வேர் எனப் பல வகை வேர்கள் உள!
சரி, இருக்கட்டும். இப்பொழுது இவை எதற்கு என்கிறிர்களா?
கீதாச்சாரியன் இந்த பதினைந்தாம் அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் பொழுது அச்வத்தம் என்று ஒரு மரத்தினைச் சொல்கிறார். இதற்குப் பொருள் அரச மரம் (Pipal / peepal), அத்தி மரம் (Fig) போன்றவை என்கிறார்கள்.
இந்த அரச மரம்தான் புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவிலிருந்த போதி மரமும்! இந்தியாவில் தற்போதைய பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்த கயாவிலிருந்து இந்த மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்கு எடுத்துச் சென்று அனுராதபுரத்தில் புனித மரமாக வளர்த்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளுள் மிக உயரிய விருதான பாரத இரத்னா விருது அரச இலையின் வடிவம் கொண்டது.
சரி, இருக்கட்டும்! பகவத்கிதைக்குள் போகலாமா?
கீதாச்சாரியன் ஒரு வித்தியாசமான கருத்தினைச் சொல்கிறார். இந்த அரச மரத்தின் வேர்கள் மேல் நோக்கி இருக்கின்றன என்கிறார்!
அஃதாவது, அந்த மரம் உயர்ந்தோங்கத் தேவையான கருவிகள் மேல்பாகத்தில் (Upper deck) இருக்கின்றன என்கிறார்.
உயிர்களிலேயே மேல் பாகத்தில் அனைத்து அறிவுக் கருவிகளும் இருக்கும் உயிரினம் மனிதன்தான்!
ஏன் ஒட்டகச் சிவிங்கி இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்





Comments