top of page
Search

09/10/2024, பகவத்கீதை, பகுதி 55

  • mathvan
  • Oct 9, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பாடல் 3:11 இல் தேவர்கள் முதலானவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார் பரமாத்மா.


வள்ளுவப் பேராசான் இல்வாழ்வானுக்குப் பதினோரு கடமைகளைச் சொல்லும் பொழுது:


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - 43; அதிகாரம் - இல்வாழ்க்கை


பரமாத்மா தொடர்கிறார்:

இயற்றும் பொருள்களைப் பிறர்க்குக் கொடுக்காமல் உங்களுக்கென்று மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்களும் கள்வர்களே, கயவர்களே! – 3:12


காக்க வேண்டியவர்களைக் காத்து அதன் பின்னர் தம்மையும் கவனித்துக் கொள்பவன் மன அமைதி பெறுகிறான். அவனின் செயல்கள் ஒரு போதும் அவனைப் பின்னர் துரத்தாது.  அவ்வாறில்லாமல், தமக்கெனவே பொருள்களைச் சமைப்பவர்கள் மனத்தில் அமைதி நிலவ வழியில்லை. – 3:13


நம்மாளு: “கடப்பாரையை விழுங்கினவன்”, “உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்” என்றெல்லாம் சொல்கிறார்களே அது போன்று பிறர்க்கு உதவாதவனின் கதை ஆகிப்போகும்.


வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறார் என்றால்:

விருந்தினர்களுக்கு உணவளித்துவிட்டு மீதம் இருப்பதை உண்பவன் இருக்கும் இடத்தில் அவன் வித்திட்டுதான் விளைவிக்க வேண்டுமா? வேண்டா.

 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். - 85;  அதிகாரம் - விருந்தோம்பல்


பரமாத்மா தொடர்கிறார்:

உணவினால் உயிர்கள் தழைக்கின்றன; அந்த உணவு மழையினால் உண்டாகிறது; மழையானது நாம் செய்யும் கடமைகளால் பொழிகிறது; கடமைகள் என்பன நாம் பற்றற்றுச் செய்யும் செயல்களே. – 3:14


நம்மாளு: மாமழை போற்றுதும் என்கிறார்.


யஜ்ஞம் என்ற சொல் பகவத்கீதையில் பல பாடல்களில் வருகிறது. பெரும்பாலான உரைகள் நெருப்பு மூட்டிச் செய்யும் வேள்விகள் என்றே அதற்குப் பொருள் வழங்கப்படுகின்றன.


கடமைகளைச் செய் என்பதுதான் கீதையின் சாரம் என்றால் “யஜ்ஞம் செய்” என்றால் “கடமையைச் செய்” என்று பொருள் எடுப்பதுதான் பொறுத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


அதே போன்று ப்ரஹ்மம் (பிரம்மம்) என்ற சொல்லுக்கும் பொருள் எடுக்கும்போதும் அந்த அந்த இடங்களுக்கு ஏற்றார்போல் பொருள் எடுத்தால் பொறுத்தமானதாக இருக்கும்.


பிரம்மம் என்னும் சொல்லுக்கு இறை/இயற்கை, தொடக்கம், ஆதி என்ற பொருள்களும் உள்ளன.


கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்

தஸ்மாத் ஸர்வகதம் பிரம்ம நித்ய யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் – 3:15

 

கர்ம = கடமைகள்; ப்ரஹ்மோத்பவம் = தொடக்கத்திலேயே விதிக்கப்பட்டுள்ளன; ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம் = அவை இயற்கை விதிகளால் அமைந்தன; வித்தி = (என்பதனை) அறிவாயாக; தஸ்மாத் = ஆகையினால்; ஸர்வகதம் = எங்கும் நிரம்பிய; பிரம்ம = இயற்கை அல்லது இறை; நித்ய யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் = எப்பொழுதும் விதிக்கப்பட்ட கடமைகளால் நிலை பெற்றுள்ளது.


கடமைகள் தொடக்கத்திலேயே விதிக்கப்பட்டுள்ளன. அஃதாவது, நீ பிறக்கும்போதே கடமைகளுடன்தாம் பிறக்கிறாய். அவை இயற்கை விதிகளால் அமைந்தன என்பதனை  அறிவாயாக. ஆகையினால், எங்கும் நிரம்பிய இயற்கை அல்லது இறை விதிக்கப்பட்ட கடமைகளை எப்பொழுதும் நிறைவேற்றுவதனால் நிலை பெற்றுள்ளது – 3:15


அஃதாவது, இல்லறத்தான் தமக்கு விதிக்கப் பட்டவற்றைச் செய்வதனாலும் விலக்கியன ஒழித்தலாலும் இந்த உலகம் சமநிலையில் எப்பொழுதும் இருக்கும்.


சுருக்கமாக: உலகத்தைச் சார்ந்து மனிதர்கள்; மனிதர்களைச் சார்ந்து உலகம். எனவே நாம் இந்த உலகத்தைவிட்டு நீங்கும்போது நம்மைத் தொடர்ந்து வருபவர்களுக்கு இஃது இன்னும் சிறந்த முறையில் வாழக்கூடிய இடமாக விட்டுவிட்டுச் செல்வதுதான் நமது கடமையாக இருத்தல் வேண்டும்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page