top of page
Search

09/12/2024, பகவத்கீதை, பகுதி 115

  • mathvan
  • Dec 9, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலைப் பார்க்கலாம். நான் என்பதனை நீ என்று மாற்றியுள்ளார்!


ஒரு தெய்வம் தந்த பூவே…கண்ணில் தேடல் என்ன தாயே…

ஒரு தெய்வம் தந்த பூவே…கண்ணில் தேடல் என்ன தாயே…

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…வானம் முடியுமிடம் நீதானே…காற்றைப் போல நீ வந்தாயே…சுவாசமாக நீ நின்றாயே…

மார்பில் ஊறும் உயிரே…எனது சொந்தம் நீ…  எனது பகையும் நீ…

காதல் மலரும் நீ… கருவில் முள்ளும் நீ…

செல்ல மழையும் நீ… சின்ன இடியும் நீ…

பிறந்த உடலும் நீ… பிரியும் உயிரும் நீ…மரணம் ஈன்ற ஜனனம் நீ…

ஒரு தெய்வம் தந்த பூவே…கண்ணில் தேடல் என்ன தாயே… கவிப்பேரரசு வைரமுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், 2002


கசல் என்பது ஈரடிச் சந்தங்களைக் கொண்ட மீளவரும் பல்லவிகளுடன் அமைந்த உருது மொழிக் கவிதை வடிவம். ஒவ்வொரு ஈரடியும் முழுமையானவை; பொருள் உணர்த்துபவை.

 

ஜிகர் மொரதாபாடி (Jigar Moradabadi 1890 - 1960) என்பார் ஒரு உருது கசல் கவிஞர். அவரின் ஒரு கண்ணி இதோ:

 

"அன்பர்களே! காதல் என்பது விளையாட்டல்ல.

அது கண்ணாடியும் கல்லும் சந்தித்துக் கொள்வது."

 

மேலே கண்ட க[]'['ll[]ண்ணியைக் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கீழ்க்காணுமாறு செதுக்குகிறார்:

 

காதல் என்பது கல்லும் 

கண்ணாடியும் ஆடும் ஆட்டம்!” – அப்துல் ரகுமான்

 

இதனைக் கவிஞர் நா. முத்துக்குமார்

 

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதிக்கொண்டால் காதல்! … நா. முத்துக்குமார், சிவா மனசிலே சக்தி 2009.

 

இந்த ஒரு கல் ஒரு கண்ணாடியையும் சுருக்கி OKOK என்றான் பாருங்கள் அவன் கவிஞர்களில் உச்சமானக் கவிஞன்!

 

இப்படிக் கருத்துகள் அவற்றின் வெளிப்பாடுகள் காலம் தோறும் வெவ்வேறு வடிவினில் வெளிவந்து கொண்டே இருக்கும்.

 

கண்ணி என்பது ஈரடிக் கவிதை வடிவம். திருக்குறள், பகவத் கீதை, கபீர் கா தோஹா, கசல் கவிதைகள் உள்ளிட்டவை கண்ணிகளால் அமையப் பெற்ற நூல்களே. கவிதையின் உச்ச வடிவம் கண்ணிகள்!

 

பகவத்கீதையில் இருந்து பல படிமங்களும் தொன்மங்களும் இக்காலப் பாடல்களாக மாற்றம் பெறுகின்றன என்பதனில் ஐயம் இல்லை!

 

நாம் பகவத்கீதையினுள் மீண்டும் நுழைவோம்.

 

பாடல் 10:35 வரை பார்த்துள்ளோம். “எல்லாம் நான்” என்பதனைத் தொடர்கிறார்.

 

வஞ்சகர்களின் நெஞ்சங்களில் வஞ்சம் நான்; பலசாலிகளிடம் பலமும், வெற்றியும், விடா முயற்சியும் நான்; பொறுமையுடையோரிடம் பொறுமை நான். – 10:36

 

விருஷ்ணி குலத் தோன்றல்களுள் (Vrishnis) வாசுதேவன் நான்; பாண்டவர்களுள் அர்ஜுனன் நான்; முனிவர்களுள் வியாசர் நான்; கவிகளுள் சுக்கிர கவி நான். – 10:37

 

ஆள்வோரிடத்து ஆளுமை நான்; வெற்றி பெற விரும்புவோரிடத்து நீதி நான்; இரகசியங்களில் மௌனம் நான்; ஞானமுடையோரிடத்து ஞானம் நான். – 10:38

 

எல்லாப் பொருள்களிலும் உள்ள வித்து நான்; நான் இல்லாத பொருள்கள் இந்த உலகினில் இல்லை. – 10:39

 

என் பெருமைகளுக்கு ஓர் எல்லை இல்லை; இங்கே குறிப்பிடப்பட்டவை குறியீடுகளே! – 10:40

 

எவையெல்லாம் பெருமையுடையன, வலிமையுடையன, அழகுடையன, உண்மையுடையன அவையெல்லாம் எனது பிரதிபலிப்பே. – 10:41

 

இவற்றுள் பேதங்களைப் பார்ப்பதால் என்ன பயன்? உயர்ந்தைப் பார்; அவற்றுள் என்னைக் காண். – 10:42

 

என்று சொல்லி இந்த பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தை நிறைவு செய்கிறார். விபூதி யோகம் முற்றும்.

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page