10/01/2025, பகவத்கீதை, பகுதி 150
- mathvan
- Jan 10
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
(பிறவாமை என்னும் நிலையில்) அங்குச் சூரியச் சந்திரர்களுக்கோ நெருப்பிற்கோ ஒளி தரும் வேலையில்லை. அந்த நிலை எய்தியோரே ஒளிப்பிழம்பு. அதுவே பரமபதம் என்னும் உயரிய நிலை. – 15:6
இந்த இயற்கையின் (என்) அம்சமே உயிர்களாகத் தோன்றி அதனதன் இயல்பில் நிற்க மனம் முதலான ஆறு புலன்களையும் பெறுகின்றது. – 15:7
காற்றானது பூக்களில் இருந்து நறுமனத்தைச் சுமந்து செல்வதனைப் போல இந்த உடலினை ஆளும் ஜீவன் புதிய வடிவத்தினில் வெளிபடும் பொழுது (புலன்களைக் கொண்டு) செல்கிறான். – 15:8
ஆகையினால், மனம், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களைத் தன் வயப்படுத்திக் கொண்டு அனுபவங்களைப் பெறுகிறான். – 15:9
அவன் இருப்பதும், நிற்பதும், நடப்பதும், உண்பதும் குணங்களின் கூட்டினாலே என்பதனை ஞானிகள் அறிவார்கள்; மயக்கத்தில் உள்ளோர் (மூடர்) அறிவதில்லை. – 15:10
(இங்கே ஞானிகள் என்பதும் மூடர்கள் என்பதும் இந்த உயிருடன் கூடிய உடலைக் கொண்டுள்ள நம்மையே குறிக்கிறார். அவன்/இவன் என்று குறிப்பன நம்மில் இருந்து இந்த உடல்-உயிர் கூட்டினைப் பிரித்துக் காண்பிக்க!)
(மன அமைதி என்னும் பிறவாமையை நோக்கி) முயல்பவர்களான யோகிகள் இவனை நம்மில் உறைந்திருப்பவனாகக் காண்கின்றனர். நாமும் முயல்கிறோம் என்று சொல்லிக் கொண்டு தம் செயல்களால் திருந்தாதவர்கள் இவனைக் காண்பதில்லை. – 15:11
சூரியனின் ஒளி எங்கனம் இந்தப் பூமிப் பந்தினை ஒளி பெறச் செய்கின்றதோ, அதே போன்று சந்திரனும், நெருப்பும் எங்கனம் ஒளியினை உமிழ்கின்றதோ அந்த ஒளியே நான் என்று அறிவாய். – 15:12
(பாடல் 15:6 இல் கூறியதை மீண்டும் உரைத்தார்.)
நான் (இயற்கை) என்னின் தன்மையினால் இந்தப் புமியினில் பரவி எல்லா உயிர்களையும் தாங்குகிறேன்; பயனுள்ள சந்திரனாக இருந்து கொண்டு எல்லாப் பயிர்களையும் செழிக்கச் செய்கின்றேன். – 15:13
இது நிற்க.
உணவுகளை நான்கு வகையினில் பிரிக்கிறார்கள். அவையாவன: 1. நன்றாகக் கடுக்கு முடுக்கென்று பற்களால் கடித்துச் சாப்பிடுவன (முறுக்கு முதலானவை); 2. நன்றாக மென்று சாப்பிடுவன (குழம்புடன் சோறு முதலானவை); 3. நக்கிச் சாப்பிடுவன (தேன், சில மருந்துக் கலவைகள் உள்ளிட்டன); 4. உறிஞ்சிக் குடிப்பன (திரவ நிலையில் இருப்பன).
உண்ட இந்த உணவுகளை சத்தியாக மாற்றி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல பிராண வாயு தேவை; உணவுகளின் கழிவுகள் காற்றாகவும் மாறும் நம் உடலில்! அந்தக் கழிவுக் காற்றை வெளித்தள்ள அபானன் என்னும் வாயு நம் உடலில் இருக்கும். இந்த இரண்டும் உணவிற்குத் தேவைப்படுவன.
உடலில் இருக்கும் வாயுக்கள் பத்து என்பது நமக்குத் தெரியும். விரித்தால் விரிந்து கொண்டே போகும்.
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்றுதானே உங்கள் கேள்வி?
அடுத்துவரும் பாடலில் இவை வருகின்றன! அதனைப் பார்ப்போம்.
நானே (இயற்கை) உடலுடன் கூடிய எல்லா உயிர்களிலும் இருந்து கொண்டு பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்கு விதமான உணவினையும் சத்தியாக மாற்றுகின்றேன். – 15:14
என்ன சக்தி என்று எழுதுவதற்குப் பதிலாக சத்தி என்று எழுதுகிறாயே என்ற கேள்வி உங்களுக்கு எழுமே?
இது தொல்காப்பியம் படிப்பதனால் ஏற்பட்ட விளைவு. ககரத்திற்குப் (க்) பக்கத்தில் ககரம்தான் வருமாம். எடுத்துக்காட்டு: ப க்க ம்
அஃதாவது, வல்லினம் ஆறும், அதாங்க, கசடதபற என்று சொல்லுவோம். ஆனால், எழுதும் பொழுது க்ச்ட்த்ப்ற் என்றுதான் எழுதணும்! மெய்களின் வடிவம்தாம் வல்லினத்திற்கும்.
இந்த ஆறு வல்லினங்களுடன் அதே குடும்ப எழுத்துகள் வருவன மரபாம்!
எடுத்துக்காட்டு: க் – பக்கம்; ச் – பச்சை; ட் = பட்டு; த் – சத்தி; ப் – பருப்பு; ற் – காற்று
நாளை சத்தி ஏன் என்று பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments