top of page
Search

10/09/2024, பகவத்கீதை, பகுதி 26

  • mathvan
  • Sep 10, 2024
  • 2 min read

Updated: Jan 13

அன்பிற்கினியவர்களுக்கு:

பாடல் 2:11 இல் இருந்து பரமாத்மாவின் உபதேசம் தொடங்குவதாகக் கொள்ளலாம்.

 

எப்படி ஆரம்பிக்கிறார் என்றால்:

 

யாருக்கு இரக்கம் காட்டக் கூடாதோ அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறாய். அதுமட்டுமன்று, உனக்குதான் எல்லாம் தெரியும் என்னும் நினைப்பில் ஏதோ பெரிய அறிவாளி போலவும் தத்துவம் பேசுகிறாய். மன அமைதி வேண்டும் என்கிறாய். உனக்கு ஒன்று சொல்வேன் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை; இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்றும் தெரியாது; ஒரு செயலை ஆரம்பித்துவிட்டால், அறிவுடையவர்கள், இதையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளமாட்டார்கள். – 2:11

 

இதற்கு அடுத்த பாடலில் இருந்துதான் ஆன்மாவைப் பற்றி சொல்லப் போகிறார். நாம் முன்பு ஆன்மா குறித்து சிந்தித்ததைக் காண்க  https://foxly.link/06092024_ஆத்மா.


பார்த்தசாரதி சொல்கிறார் நானும் நீயும் எப்பொழுதுமே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம். – 2:12

 

அஃதாவது, எல்லாரும் இந்த உலகில் இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் என்ன, வெவ்வேறு உருவங்களில் இருப்போம் என்கிறார்.

 

கீழ்க்காணும் கருத்துகள் பரந்தாமனுடையது.

 

உடலில் ஆன்மா இருக்கிறது; உடலைவிட்டு அந்த ஆன்மா நீங்கினால் வேறு உடல் எடுத்துக் கொள்ளும்; நல்ல வீரன் இதில் கலக்கம் கொள்ளமாட்டான். – 2:13

 

நம்மாளு: உயிரைத் துச்சமென மதிப்பான் என்று சொல்கிறாரா?

 

இன்பம் துன்பம் நிலையில்லை; அவை வரும் போகும்; இவற்றைப் பொறுத்துக் கொள். – 2:14

 

கடந்து போகும் நிகழ்வுகளால் பாதிக்கப்படாதவன் மரணமில்லாதவன். – 2:15

 

நம்மாளு: தினம் தினம் செத்துப் பிழைக்கத் தேவையில்லை; கோழைகள் நொடிக்கு நொடி செத்துப் பிழைக்கிறார்கள் என்கிறாரா?

 

அடுத்து வரும் பாடலில் சற்காரிய வாதக் கொள்கையைச் சொல்கிறார். அது குறித்து நாம் முன்பு சிந்தித்ததைக் காண்க https://foxly.link/பகவத்கீதை_23


இல்லாதது உண்மையாகாது; உள்ளது இல்லாததாகாது. இந்த ஞானம் உள்ளவர்கள் இந்த வேற்றுமையை உணர்வார்கள். – 2:16


அஃதாவது, ஆக்கப்பட்ட பொருளுக்கு அழிவுண்டு; பொருள்கள் அனைத்தும் பஞ்ச பூதச் சேர்க்கை; அந்தச் சேர்க்கைப் பிரிந்து பஞ்ச பூதங்களோடு இணைந்து கொள்ளும். பஞ்ச பூத கொள்கைக்கு என்றும் அழிவில்லை என்கிறார். இதனை அறிந்தவன் ஞானம் உள்ளவன். அவனுக்குக் கட்டுப்பட்டு இந்த உலகம் இயங்கும்.


என்றும் உள்ளவை வியாபித்து இருக்கும். வியாபித்து நிற்பதால் அவை இங்கும் அங்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. தேவையை முன்னிட்டு அவை கூடும்; பிரியும்.


என்றும் உள்ளவை அனாதி காலம் தொட்டே இருப்பன; சைவ சித்தாந்திகள் அவற்றை மூன்றாகப் பகுத்துச் சொல்கின்றனர். அவையாவன: பதி (இறை, இயற்கை), பசு (எண்ணற்ற உயிர்கள்); பாசம் (மும்மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை).


கட்டை விரலைக் குறித்து முன்பு நாம் சிந்தித்துள்ளோம். காண்க https://foxly.link/பகவத்கீதை_கட்டை_விரல்


அதில் இருக்கும் மேலும் ஒரு இரகசியத்தை நாளைக் காண்போம்.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page