10/10/2024, பகவத்கீதை, பகுதி 56
- mathvan
- Oct 10, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
உலகத்தைச் சார்ந்து மனிதர்கள்; மனிதர்களைச் சார்ந்து உலகம் என்று பார்த்தோம்.
பரமாத்மா தொடர்கிறார்:
இந்தச் சுழற்சியை அறியாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ அவனின் வாழ்நாள் வீண். – 3:16
நம்மாளு: அவனின் செயல்கள் எவருக்கும் நன்மை பயக்காது. அத்தகையச் செய்கைகளால் அவன் போற்றப்படமாட்டான்.
தன்னில் முழுமையடைந்தவனின், அஃதாவது, மனத்துடன் ஒன்றி மன அமைதியுடன் இருப்பவனின் செயல்களில் பற்று இருக்காது. அவனுக்கென்று தனிப்பட்ட செயல்கள் ஏதும் இருக்காது. – 3:17
அவன் இதுவரை செய்த செயல்களினாலும் எந்த பலனையும் எதிர்பாராதிருப்பான்; இனிச் செய்யப்போகும் காரியங்களினாலும் அவனுக்கென்று தனிப்பட்ட பலன்களை எதிர்பாராதிருப்பான்; அவனுக்குப் பிற உயிர்களால் ஆகக் கூடிய காரியம் என்று எதுவுமிருக்காது. ஆகையினால் நீ பற்றற்று காரியங்களைச் செய். பற்றில்லாமல் செயல்களைச் செய்பவன் உயர் நலத்தை அடைகிறான். – 3:18-19
நம்மாளு: அஃதாவது, அவன் தன்னில் தானே முழுமையடைந்தவன். (Self-contained person)
(எனவே, அர்ஜுனா) நீ பற்றற்றுக் காரியங்களைச் செய்து கொண்டிரு. மனம் அமைதியடையும். மேலும் உயர் நிலையை அடைவாய். – 3:19
அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா சொன்ன அறிவுரைதான் கீதை என்று நமக்குத் தெரியும். நம் அர்ஜுனனே ஒருவர்க்கு அறிவுரை சொன்ன ஒரு படலம் இருக்கிறது மகாபாரதத்தில்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் உண்மைதான்.
எப்பொழுது சொன்னான் என்கிறீர்களா? போரெல்லாம் முடிந்துவிட்து. தர்மரின் மனத்தில் கலக்கம். நாடளாப் போவதில்லை; காடேகப் போகிறேன் என்கிறார் தருமர்.
பலர் அவருக்கு எடுத்துச் சொல்கிறார்கள். அதில் அர்ஜுனனின் பகுதி முக்கியமானது.
ஜனகர் என்ற ஒரு மகாராஜா. அவரின் வளர்ப்பு மகள்தாம் சீதாப் பிராட்டியார். அதாங்க, நம்ம இராமரின் மனைவி. ஜனகரின் மற்றொரு பெயர் விதேஹர். (விதேகர் என்றால் பெரிய தேகம் உடையவர் என்ற பொருளிலா?)
சீதைக்கும் கர்ணனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னவென்று கேட்கிறீர்களா?
இரண்டு பேரும் பெட்டியில் வைத்து விடப்பட்டவர்கள்! ஆனால், என்ன சீதை ஒரு ராஜாவின் கண்ணில் சிக்கினார். கர்ணன் தேரோட்டியின் பார்வையில்பட்டார். அவ்வளவுதான் வித்தியாசம். இது நிற்க.
ஜனகரின் மனைவியின் பெயர் சுனைனா. ஜனகர் ஒரு நாள் திடுதிப்பென்று கையில் திருவோடு ஏந்திக் கொண்டு துறவியாகிவிடுகிறார்.
அவரைத் தேடிப்பிடித்துக் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு சுனைனா திணறடிக்கிறார். செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்கும் பொழுது துறவறம் பூணுவது சரியல்ல என்கிறாள். இந்தப் பகுதி சாந்தி பர்வத்தில் வருகிறது.
இதனை விரித்தால் விரியும். இருப்பினும் சுனைனாவின் வாதங்களில் சில:
ஓ! மன்னா, உன்னை நம்பி இருப்பவர்களின் நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர்?
அதிலும் குறிப்பாக முக்தியானது ஐயம் நிறைந்தது. உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்?
நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது.
தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான்.
உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அருள் உலகங்களை வெல்வீராக. தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், பிற உயிர்களைப் பேணுபவனைவிட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்? என்கிறார் சுனைனா.
சரி, இங்கே எதற்கு ஜனகரைக் கூட்டி வந்தாய் என்று கேட்கிறீர்களா?
நாளைச் சிந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments