11/01/2025, பகவத்கீதை, பகுதி 151
- mathvan
- Jan 11
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
சக்தி என்று சொன்னால் என்ன என்று கேட்கிறீர்களா? சொல்லலாம் தப்பில்லை. ஆனால் என்ன உங்கள் சத்திதான் (சக்தி) வீணாகுமாம்!
சொல்லும் எழுத்துகளுக்கு ஒலியின் அடிப்படையிலும் அதற்கு எவ்வளவு குறைவாகச் சத்தியைச் செலவழிக்கலாம் என்று எண்ணி அமைந்த மொழி தமிழ். இதுவும் தமிழின் ஒரு தனிச் சிறப்பு.
சத்தி, முத்தி, பத்தி என்றுதாம் அருணகிரிநாதர் பெருமானும் பயன்படுத்தியுள்ளார். சங்கப்பாடல்களிலும் அவ்வாறே என்கிறார்கள். தொல்காப்பியத்திற்கு முன்னரும் அவ்வாறே.
தொல்காப்பியம் “முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி” எழுதப்பட்டது என்று தொல்காப்பியர் பெருமானின் ஒரு சாலை மாணவரான (Class mate) பனம்பாரனார் பெருமானும் சொல்லியுள்ளார்.
இடையில்தான் சத்தி சக்தியாகி உள்ளது. அந்த சக்தியையும் இப்பொழுது ஷக்தி (Shakthi) என்று உச்சரித்தால்தான் அந்தச் சொல்லுக்கு சத்தி இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள்.
ஆனால், சத்தியநாராயணன் சத்தியாகவே இருக்கிறார். அவர் இன்னும் சக்தியநாரயணனாகவோ, ஷக்தியநாராயணனாகவோ மாறவில்லை.
கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்னும் சொலவடை தமிழினில் உண்டு. முத்தி என்பது முதிர்ச்சியைக் குறிக்கும். முத்தி என்பது தமிழ் மரபு.
ஆனால், முக்தி என்பது திரிபு. அந்த முக்தியும் இப்பொழுது முக்த் என்றும் மோக்ஷம் என்று மாறிக் கொண்டுள்ளது.
முத்தி என்பது தமிழ் இலக்கணப்படி அமைந்த சொல். முத்தி என்பது வீட்டுப் பேற்றையும் குறிக்கும்.
விடுவதனால் வீடு! இந்த உலகத்தை விடுவதனால் வீடு! அவ்வளவே!
கெடுவதனால் கேடு; படுவதனால் பாடு. இவ்வளவு எளிமை தமிழமைப்பு.
சரி, பல சொல்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதே, அவற்றை மாற்றியே ஆக வேண்டுமா என்றால் தேவையில்லை.
இதற்கும் தொல்காப்பியர் விதி வகுத்திருக்கிறார்.
“கடிசொல் இல்லைக் காலத்துப்படினே” என்கிறார் (பாடல் 935, தொல்காப்பியம் - சொல்லதிகாரம், அறிஞர் தமிழண்ணல் உரை
காலந்தோறும் தோன்றும் சூழ்நிலைகளால் உருவாகும் சொல்களை இலக்கணத் தவறு என்று நீக்கிடத் தேவையில்லை என்கிறார்.
தொல்காப்பிய விதி புதுச் சொல்களுக்குப் மிகவும் பொருத்தம். ஏற்கெனவே வழங்கிவரும் சொல்களை நாம் வலிந்து மாற்றி வழக்கத்தில் விடுவதற்கல்ல!
நாம் முன்னர் வேற்று மொழிச் சொல்களைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று நாம் படும் பாட்டினைச் சிந்தித்துள்ளோம்.
வலிந்து மாற்றிக் கொண்டிருப்பது தமிழுக்கு வளம் சேர்க்காது. வழக்கத்திற்கும் வாராது!
கடினமாக உச்சரிக்கும் எழுத்துகள் தமிழில் இல்லை. விரித்தால் விரியும். காலம் இருப்பின் பின்னர்ப் பார்ப்போம்.
நாளை கீதைக்குள் மீண்டும் நுழைவோம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments