top of page
Search

11/10/2024, பகவத்கீதை, பகுதி 57

  • mathvan
  • Oct 11, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பரமாத்மா தொடர்கிறார்:

பார்த்தா, ஜனகன் முதலான அறிவில் சிறந்தவர்கள் தங்கள் பற்றற்ற செயல்களின் மூலமே இறவாப் புகழ் பெற்றார்கள். எனவே, நீயும் தயங்காது உன்னுடைய கடமைகளைச் செய்து இந்த உலகை நல்லதொரு உலகாகவிட்டுச் செல். – 3:20


கவனித்தீர்களா, இதோ ஜனகனை பரமாத்மா அழைத்து அர்ஜுனனுக்கு விளக்குகிறார். ஏனவேதான் அந்த ஜனகர் அறிமுகம் தேவைப்பட்டது.


ஏன் ஜனகர் என்றால் அவரும் முன்பொரு தருணம், அவர் மனத்தில் குழப்பம் நிலவ, துறவு பூண முயன்றார். அவருக்கு அறிவுரைச் சொல்லி மீண்டும் கடமைகளைச் செய்வதன் அவசியத்தை அவரின் மனைவி சுனைனா உதவினார். பின்னர் அவர் இல்லற வாழ்வினை வென்றார். அறிவில் சிறந்தவர்தாம் ஜனகர் இருப்பினும் குழப்பம் தலைதூக்கியது. அதில் தவறில்லை. எடுத்துச் சொல்லும் பொழுது திருத்திக்கொள் என்கிறார்.


முன் ஏர் செல்லும் வழியில் பின் ஏர் செல்லும்;

தலைவன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி, என்னும் முதுமொழிகள் உண்டு.

 

நம் பிள்ளைகளை நாம் சொல்லித் திருத்த இயலாது. ஆனால், நாம் செய்யும் செயல்களை ஒழுங்காகச் செய்தால் அவற்றைப் பார்த்து அவர்கள் தாமே கற்றுக் கொள்வார்கள்.


இந்தக் கருத்தைப் பரமாத்மா:

உயர்ந்தவர்கள், சான்றோர்களின் வழிகளைப் பற்றிக்கொண்டுதாம் பின் தொடரும் மக்களும் அவ்வழியே செல்வார்கள். – 3:21


அஃதாவது, நீ உன்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு மக்கள் தொடர வேண்டும் என்று நினைத்தாயானால் உனது செயல்களில் அறம் இருக்கட்டும். அதுவும் நீ தலைமைப் பொறுப்பினில் இருந்தால் உனது பொறுப்பு மேலும் அதிகம். கவனத்தில் வை என்கிறார்.


பார்த்தா, என்னை எடுத்துக் கொள். இன்று நான் உனக்குச் சாரதியாக வர வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. உனக்கு மட்டுமில்லை எங்குமே, எவருக்குமே நான் சாரதியாக இருக்க வேண்டிய நெருக்கடி எனக்கில்லை. இருப்பினும், இதோ இந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறேன். உதவி என்று கேட்டாய். உதவி செய்வது என் கடமை என்று கருதி உன்னுடன் வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இதனில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அவரவர் கடமைகளை வகுத்துக் கொண்டு செல்வதுதான் முறை. – 3:22


நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். நான் சோம்பித் திரிந்தால் ஒரு வேளை மக்கள் என்னைப் பார்த்து அவர்களும் வீணாகிப் போவார்கள். அவர்களின் அழிவுக்கு காரணமாகிப் போனாலும் போவேன் – 3:23-24


நாம் கடமைகளைச் செய்து கொண்டிருப்பது ஒரு சமுதாயக் கடமையும்கூட! என்கிறார்.


ஒரு செவிவழிக் கதை ஒன்று உண்டு. முன்பொரு காலத்தில் ஓர் ஊரில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு முனிவர் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பொழியாது என்று சபித்துவிட்டாராம்.


மழை வர வேண்டும் என்றால் மழைக்கு உரித்தான கடவுள் தன் சங்கினை முழங்க வேண்டுமாம். இந்தச் சாபத்தைக் கேள்வியுற்ற அந்தக் கடவுளும் அந்தச் சங்கினை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டாராம். (இது பகுத்தறிவிற்கு ஏற்புடையதா என்றெல்லாம் சிந்தித்துக் குழம்ப வேண்டாம். கதை என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும்)


அந்த ஊர் மக்களும் மிகவும் மனச் சோர்வு அடைந்து தங்கள் ஏர், மண்வெட்டி, கலப்பை போன்ற கருவிகளை மூலையில் போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து போனார்களாம்.


மறுநாள் காலையில் யாரும் வயலுக்குப் போகவில்லை. ஆனால், ஒரே ஒரு முதியவர் மட்டும் தன் ஏர் முதலானவற்றை எடுத்துக் கொண்டு வயலுக்குக் கிளம்பிவிட்டாராம். இதனைக் கண்ணுற்ற மக்கள் அவரை மறித்து “ஏன் ஐயா, எப்படி இருந்தாலும் இன்னும் பல ஆண்டுகள் மழை இருக்காது. எதற்குச் செல்கிறீர்கள்?” என்று வினவினார்களாம்.


அதற்கு அந்தப் பெரியவர்: “எனக்கும் அது தெரியும். இருப்பினும் பன்னிரண்டு ஆண்டுகள் என் வேலையைச் செய்யாமல் இருந்தால் எது எங்கனம் செய்வது என்பது மறந்தே போகும். ஆகையினால் செல்கிறேன்” என்றாராம்.


இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கடவுளுக்கும் பயம் வந்துவிட்டதாம். எங்கே அவருக்கும் சங்கு ஊதுவது மறந்து விடுமோ என்று எண்ணி அவரின் சங்கை எடுத்து ஊதினாராம்!


மழை உடனே பொழிய ஆரம்பித்துவிட்டதாம்!


சாலைகளில் சில இடங்களில் சிவப்பு விளக்கு எரியலாம். சில இடங்களில் பச்சை விளக்கு எரியலாம். அனைத்து இடங்களிலும் பச்சை விளக்கு எரியும் பொழுதுதான் நான் கிளம்புவேன் என்று அமர்ந்திருக்க முடியுமா என்ன?


நாம் நம் கடமைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page