top of page
Search

12/01/2025, பகவத்கீதை, பகுதி 152

  • mathvan
  • Jan 12
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

15:14 ஆம் பாடலில் நிறுத்திவிட்டு, அந்தப் பாடலில் இருந்த சத்தியின் பின்னால் சென்றோம். மீண்டும் தொடர்வோம்.


நான்தான் எல்லாம் என்பதனைச் திரும்பச் சொல்கிறார்.

எல்லாருடைய உள்ளத்திலும் நானே நிறைந்திருப்பவன்; நிலையும், நினைப்பும், அறிவும், மயக்கமும் உள்ளிட்ட அனைத்துச் செயல்களுக்கும் நானே பின்புலம். எல்லா மறைகளாலும் அறியப்படுபவனும் நானே. மறைகளின் உள்பொருள்களை ஆக்கியோன் நானே; அவற்றை உணர்ந்தவனும் நானே. – 15:15


அடுத்துவரும் பாடலில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சொல்லாடல்களான க்ஷரம், அக்ஷரத்தினைப் பயன்படுத்துகிறார்.

அஃதாவது, க்ஷரம் என்றால் அழிவிற்கு ஆட்பட்டது என்றும் அக்ஷரம் என்றால் அழிவில்லாதது என்றும் பொருள்படும் என்று எட்டாம் அத்தியாயமான் அக்ஷர பரப்பிரம்ம யோகத்தைச் சிந்தித்தப் பொழுது பார்த்தோம். காண்க 19/11/2024, பகவத்கீதை, பகுதி 95


அவை மட்டுமன்று! அக்ஷரம் என்றால் என்றும் நிலைத்து நிற்கும் கருத்துகள் என்றும் பார்த்துள்ளோம். காண்க 20/11/2024, பகவத்கீதை, பகுதி 96


இந்த அத்தியாயத்தில் மூவகைப் புருடரைச் (புருஷரைச்) சொல்லப் போகிறார். அவர்கள்: 1. க்ஷரப் புருடன்; 2. அக்ஷரப் புருடன்; 3. உத்தம புருடன்.

 

உலகத்தில் க்ஷரப் புருடர் மற்றும் அக்ஷரப் புருடர் என்னும் இருவகைப் புருடருளர்.  உருவம் உள்ள அனைவருமே க்ஷரப் புருடர்கள்தாம். அவர்களுள் குணங்களைக் கடந்து குணாதினனாக சிகரத்தில் இருப்பவன்தாம் அக்ஷரப் புருடன். அஃதாவது அழிவற்றவன், நிலைத்து நிற்பவன், மாறுதலற்றோன். – 15:16

 

இவ்விருவரில் இருந்தும் வேறுபட்டோன் உத்தம புருடன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவனே இந்த உலகினை எந்தவித மாறுபாடின்றித் தாங்கிக் கொண்டு இருப்பவன். – 15:17

 

நான் அழிவிற்கு அப்பாற்பட்டவன்; நான் அக்ஷரப் புருடரைக் காட்டிலும் உயர்ந்தோன். எனவே உலகத்தாராலும் மறைகளாலும் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறேன். – 15:18

 

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் நினைவிற்கு வருகின்றது.

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!


காவியத் தாயின் இளையமகன்

காதல் பெண்களின் பெருந்தலைவன்

மானிட ஜாதியில் தனிமனிதன்

நான்படைப்பதனால் என்பேர் இறைவன்!


மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்

அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை!

 

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

 

படைப்பாளிகளுக்கு என்றும் மரணமில்லை.

 

கீதாச்சாரியன் அடுத்துவரும் இரு பாடல்களினால் இந்த அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.

 

அறியாமை விலக்கி எவன் நானே (இயற்கையே) புருடர்களில் உத்தமன் என்பதனை அறிவானோ அவனே எல்லாம் அறிந்தவன். மிகவும் இரகசியமான எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கருத்துகளை எல்லாம் உனக்குத் தெளிவாக்கியுள்ளேன். அர்ஜுனா இவற்றை உணர்ந்தவன் புத்திமான்; அவனே செய்யத் தக்கன செய்வான். – 15:19-20

 

இவ்வாறு இந்த அத்தியாத்தை நிறைவு செய்கிறார்,

 

புருஷோத்தம யோகமென்னும் பதினைந்தாம் அத்தியாயம் முற்றும்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

 

 
 
 

Komentáře


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page