12/10/2024, பகவத்கீதை, பகுதி 58
- mathvan
- Oct 12, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒரு நீர் நிலையின் ஓரம் ஒரு சாது நடந்து சென்று கொண்டிருந்தாராம். அந்த நீர் நிலையில் விழுந்துவிட்ட ஒரு தேள் கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்ததாம். அதனைக் காப்பாற்ற எண்ணிய அந்தச் சாது அதனைப் பிடித்துத் தண்ணிரில் இருந்து வெளியே எடுத்தாராம். அது தன் இயல்பான குணத்தால் நறுக்கென்று அவரைக் கொட்டியதாம். அவர் வலி தாங்காமல் தன் பிடியைத் தளர்த்த அந்தத் தேள் மீண்டும் நீரிலேயே விழுந்துவிட்டதாம்.
அதனை மீண்டும் அவர் தூக்க, அது மீண்டும் அவரைக் கொட்ட சாதுவும் நிறுத்தவில்லை; அந்தத் தேளும் கொட்டுவதைத் தவிர்க்கவில்லை.
இதனைக் கண்ணுற்ற ஒருவர், ஐயா, அந்தத் தேள் நீங்கள் உதவுவது தெரியாமல் உங்களைக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் நீங்கள் உதவுவதை நிறுத்தவில்லையே ஏன்? என்றாராம்.
உதவுவது என் கடமை என்று செய்கிறேன். அந்தத் தேள் கொட்டுவது அதன் இயல்பு என்று செய்து கொண்டிருக்கிறது. அது நிறுத்தாத வரையில் நான் மட்டும் ஏன் நிறுத்த வேண்டும் என்றாராம்.
நம்மாளு: அந்தச் சாதுவுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை ஒரு வாளியைக் கொண்டு அந்தத் தேளை அப்படியே நீருடன் அள்ளி வெளியில் கொட்டி இருந்தால் வேலை முடிந்திருக்குமே!
ஆசிரியர்: நல்ல திர்வுதான். இருப்பினும், இந்தக் கதையில் எப்படி அந்தத் தேளைக் காப்பாற்றுவது என்பது கேள்வியல்ல. சொல்ல வரும் கருத்து என்னவென்றால், தீயவர்கள் தம்மட்டில் தங்கள் அட்டூழியங்களைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, நல்லவர்கள் தாங்கள் செய்ய வேண்டியதைப் பயத்தினால் செய்யாமல் விடுத்தால் வெற்றி யாருக்கு?
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் ஏசுபிரான்!
இந்தக் கருத்தினைப் பரமாத்மா அடுத்துக் சொல்கிறார்.
அறிவில்லாதோர் தங்கள் செயல்களை ஆர்வம் கொண்டு செய்து கொண்டே இருக்கும் பொழுது அறிவுடையவர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவிர்க்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். – 3:25
அடுத்து அந்தத் தேள் கதைக்குப் பதிலும் தருகிறார்.
அறிவில்லாதவன் செய்யும் செயல்களைக் குழப்பக் கூடாது. அறிவுள்ளவன் தம் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு மன அமைதியுடன் இருத்தல் வேண்டும். அறிவுள்ளவனின் செய்கைகள் அறிவற்றவனின் கவனத்தை தாமே ஈர்க்கட்டும். – 3:26
மழைக்காலத்தில் இருக்க இடம் இன்றித் தவிக்கும் குரங்கினைப் பார்த்து கூடு கட்டிக் கொண்டு பத்திரமாக இருக்கும் ஒரு தூக்கணாங் குருவி “நீ ஏன் ஒரு இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளவில்லை” என்று கேட்க அந்தக் குரங்கு உடனே கோபம் கொண்டு மரத்திலேறி அந்தக் கூட்டினைப் பிய்த்துப் போட்டதாம்.
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர(து) ஆகுமே. --- விவேக சிந்தாமணி
அறிவுரை சொல்லும் பொழுதும் கவனம் தேவை!
பரமாத்மா தொடர்கிறார்:
இயற்கையில் அமைந்துள்ள குணங்களால் ஒவ்வொருவரும் செயல்களைச் செய்து கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் “நான் தான் செய்கிறேன்” என்று இறுமாப்பு கொள்கிறார்கள். – 3:27
குணங்கள், செயல்கள், அவற்றின் பிரிவுகளை அறிந்தவன் பற்றற்று இருப்பான். – 3:28
குணங்களைக் கடந்து நில் என்று பாடல் 2:45 இல் சொன்னார். இது ஒரு முக்கியமான குறிப்பு. காண்க https://foxly.link/பகவத்கீதை_பகுதி42
குணங்களால் கட்டுண்டவர்கள் அவற்றில் மயங்கி அந்தக் குணங்களிலும் செயல்களிலும் பற்று வைக்கிறார்கள். அறிவினில் தெளிவு அடையாதவர்களை அறிந்தவன் குழப்பக் கூடாது. – 3:29
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments