top of page
Search

13/01/2025, பகவத்கீதை, பகுதி 153

  • mathvan
  • Jan 13
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

தெய்வாசுர சம்பத்(து) விபாக யோகமென்னும் பதினாறாம் அத்தியாயத்தினுள் நுழைகிறோம்.

 

சம்பத்(து) என்றால் கொடுப்பனை, செல்வம் என்றெல்லாம் பொருள்படும்.

 

தெய்வ சம்பத்து என்றால் நல் வழியில் வரும் செல்வம், அருட்கொடை. அசுர சம்பத்து என்றால் எந்த வழியில் வந்தாலும் தப்பில்லை என்பவர்களுக்கு கிடைக்கும் செல்வம்!

 

நம் வள்ளுவப் பேராசான் அசுரர் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக பூரியார் (குறள் 241), பூரியர்கள் (குறள் 919) என்னும் சொல்களைப் பயன்படுத்துகிறார். பூரியார் என்றால் நல்லொழுக்கம் அற்றோர்.

 

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள. – குறள் 241; -  அருளுடைமை

 

 

தெய்வ சம்பத்து பெற்றோர் அருட்செல்வர் அவ்வளவே!

 

இந்த இரு பிரிவுகளைப் பகுத்து இந்தத் தெய்வாசுர சம்பத்(து) விபாக யோகத்தில் சொல்லப் போகிறார்.

 

அர்ஜுனா, அருட்செல்வர்கள் என்போர்களிடம் காணக் கிடைக்கும் குண நலன்களைச் சொல்கிறேன் கேள்:

அச்சமின்மை, மனத்தூய்மை, அறிவின்பால் பொருந்தி நிற்றல். கொடை, புலன் களைக் கட்டுக்குள் வைத்தல், நல்ல நூல்களியக் கற்றல், நேர்மை, கொல்லாமை, வாய்மை, வெகுளாமை (சினம் தவிர்த்தல், விட்டுக் கொடுத்தல், மன அமைதி, புறங்கூறாமை, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை), பணிவு, கிழ்ச் செயல்களைச் செய்ய நாணுதல், மன உறுதி, வன்மை, பிறர் குற்றம் பொருத்தல், செயல்களில் உறுதி, உளத்தூய்மை, வஞ்சனை செய்யாமை, செருக்கின்மை என்னும் இவையெல்லாம் அருட்கொடைகள் (தெய்வ சம்பத்து) பெற்றவனின் இயல்புகள். – 16:1-3

 

பூரியர்களின் இயல்புகளாவன (அசுர சம்பத்து – மருட்கொடை) அர்ஜுனா: இறுமாப்பு, தற்பெருமை, சினம், கொடுஞ்சொல்லும் செயலும், அறிவின்மை உள்ளிட்டன. – 16:4

 

திருக்குறளில் மிக அருமையான குறள் ஒன்று உள்ளது. என்றும் நினைவில் கொள்ள வேண்டிய குறள்தான் அது.

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். ---குறள் 35; அறன் வலியுறுத்தல்

 

 

பரமாத்மா மீண்டும் தொடர்கிறார்:

 

அருட்கொடைகள் மன அமைதி தந்து விடுதலையைத் தரும்; மருட்கொடைகள் மேலும் மேலும் பற்றுகளை வளர்த்து உழலச் செய்யும். அர்ஜுனா, நீ வருந்த வேண்டாம். உனக்கு வாய்த்தன அருட்கொடைகளே. – 16:5

 

இது நிற்க.

 

நம்பிக்கையே வாழ்க்கை. கிடைத்தன கொண்டு அவற்றையே வரமாகக் கருதி கடுகியே நடந்து வென்று காட்டுவதுதான் நம்பிக்கையாளர்களின் தடம்.

 

கிடைத்திருக்கும் அருட்கொடைகளைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் இரகசியம் இருக்கிறது. அறத்திலிருந்து விலகினால் அந்த அருட்கொடைகளும் காணாமல் போய்விடும்.

 

அறம் என்னவென்று கேட்பீர்களானால், குறள் 34 இல், “மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறம்; மற்றவையெல்லாம் ஆரவார அலங்கோலங்களே என்றார் நம் வள்ளுவப் பெருந்தகை. காண்க https://www.easythirukkural.com/post/மனத-த-க-கண-ம-ச-லன-34-15-02-2021

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page