13/10/2024, பகவத்கீதை, பகுதி 59
- mathvan
- Oct 13, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
குணங்களைக் கட!
பரமாத்மா மேலும் தொடர்கிறார்.
நான் எனது என்னும் பற்றுகளை அறுத்துச் செயல்களைச் செய். என்னில், அஃதாவது, நான் இதுவரை சொல்லிவந்த தத்துவங்களில் சரணடை. அறிவினில் தெளிவு கொள். நீ செய்ய வேண்டிய கடமையாகிய போரினைச் செய். இதுவரை நாம் பார்த்த கருத்துகளில் எந்தவித கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடாமல், அதிலேயே கவனத்தை இருத்துபவர்கள், அவற்றைக் கொண்டு தம் செயல்களை வடிவமைத்துக் கொள்பவர்கள், மன அமைதி பெறுவார்கள். கர்மத்தளைகள் என்று சொல்கிறார்களே அதனில் இருந்து விடுபடுவார்கள். இந்தக் கருத்துகளை உள்வாங்காதவர்களின் மனத்தில் எக்காலத்திலும் போராட்டங்கள் இருந்தே தீரும். அஃது ஓர் அழிவுப்பாதை. மன அமைதி வாய்க்க வழியில்லை. – 3:30-32
அறிவுள்ளவன் இயற்கைக்கு இயைந்தே தம் செயல்களை வடிவமைத்துக் கொள்வான். அனைத்தும் இயற்கையுடன் கைக்கோர்த்தே நடைபோடுகின்றன. இதனை மாற்ற அடக்குமுறையை பயன்படுத்தினால் அவை மாறுமா என்ன? – 3:33
புலன்கள் விருப்பு வெறுப்பு என்னும் இரு புள்ளிகளிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கும். இவை ஒருவன் முன்னேற தடைக்கற்களாக அமையும். இதனை உணர்ந்து செயல்படு. – 3:34
ஜெரிமி பெந்தம் (Jeremy Bentham) என்னும் பெருமகனார் இதனை Pleasure and Pain principle என்கிறார். Nature has placed mankind under the governance of two sovereign masters, pain and pleasure. --- Jeremy Bentham
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. – பாடல் 14, மூதுரை, ஒளவையார்
இந்தப் பாடல் நமக்குத் தெரிந்த பாடல்தான். என்ன தெரியுமோ அதனைப் பயன்படுத்து. தெரியாதவற்றைக் கற்றுக் கொள். எக்காரணம் கொண்டும் எல்லாம் தெரிந்தவன் போல் நடந்து கொள்ளாதே என்பனதாம் இதன் பொருள்.
மாற்றுக் கோணத்தில் சிந்தித்தால் தன்னறம் என்னவென்று அறிந்து செயல்களைச் செய். அவர்களின் அறம் வேறாக இருக்கலாம். அவை பளபளப்பாகவும் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் வகையினில்கூட இருக்கலாம். மயங்கிவிடாதே. பாதை மாறாதே. செயலினில் தெளிவு இருக்காது.
சரி, இதற்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கீதைக்கும் என்ன உறவு? என்று கேட்கிறீர்களா? இருக்கு என்கிறார் பரமாத்மா.
தன்னறம் என்னவென்று அறிந்து செயலாற்று; இதனில் தோல்வி ஏற்படினும் தவறில்லை. ஆனால், பிறரின் பாதை உன்னை ஈர்ப்பதாக இருந்தாலும் அந்த வழிக்குத் தாவாதே. அவ்வழி அச்சத்தைத் தந்து உன் மன அமைதியைக் கெடுக்கும். – 3:35
இதுவரை பரமாத்மாவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
நாம் சும்மாவே இருந்தாலும்கூட வம்புகள் தாமாகவே (வாலியன்ட்ரியா - Voluntaryஆ) வந்து வண்டியிலே ஏறுதே அது ஏன் என்பதுதான் அவனின் ஐயம்!
அர்ஜுனன் கேட்கிறான்:
பெருமானே, ஒருவன் தம்மட்டில் பற்றில்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தாலும், அவனையும் தூண்டி பாதைகள் மாறி பயணம் செய்விப்பது எது? – 3:36
நம்மாளு: ஒழுக்கமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறான். ஒரு நொடியில் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறானே அது ஏன் என்னும் கேள்வியை எழுப்புகிறார்.
கிருஷ்ண பரமாத்மா திகைத்துப் போகிறார். இதுவரை நான் சொல்லி வந்ததை அவன் கவனிக்கவில்லையா? என்ற கவலை வருகிறது. இருப்பினும் மாணவர்களின் போக்கினை அறிந்தவர் இல்லையா அவர்.
(இஃது கதை சொல்லிகளின் ஒரு யுக்தி. “கூறியது கூறல்” என்னும் குறையைக் களைய பாத்திரங்களைவிட்டுப் பேச வைத்து அவர்கள் இதுகாறும் சொன்னவற்றை மீண்டும் சுருக்கமாகச் சொல்லி முடிப்பார்கள்!)
கர்ம யோகம் என்னும் அத்தியாயம் நிறைவிற்கு வரப்போகிறது. இதுவரைத் தாம் சொன்னவற்றைச் சுருக்கமாக அடுத்துவரும் பாடல்களில் சொல்லி முடிக்கப் போகிறார்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments