top of page
Search

13/12/2024, பகவத்கீதை, பகுதி 119

  • mathvan
  • Dec 13, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

இந்தப் பயங்கரமான வடிவத்தினைக் காண்பிக்கும் நீ யார் என்னும் வினாவிற்கு பகவான் சொல்லுகிறான்:

 

உலகை அழிக்கும் வலிமையுடைய காலனாக நான் உள்ளேன். உலகத்தினை ஒடுக்க இங்கு வந்துள்ளேன். உன்னைத் தவிர வேறு எவரும் மிஞ்சமாட்டார்கள். – 11:32

 

ஆகையினால், நீ எழுந்து நில்; புகழை அடை; பகைவரை வென்று அரசினை ஆள்; என்னாலேயே இவர்கள் முன்பே கொல்லப்பட்டுவிட்டார்கள். இடது கையாலும் அம்பெய்தும் வீரனே, நீ வெறும் வெளித்தோற்றதிற்குக் காரணமாக இருப்பாயாக. – 11:33

 

துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்றுமுள்ள வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. இப்பொழுது நீ இந்த வெளி உலகிற்காகக் கொல்வாய். பயந்து வருந்தாதே. போர் செய். எதிரிகளை வெல்வாய். – 11:34

 

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் சஞ்ஜயன் சொல்வதாவது:

 

கேசவனுடைய வார்த்தைகளைக் கேட்டு நடுக்கமுடையவனாய் அர்ஜுனன் கைக்கூப்பித் தொழுது மிகவும் நடுங்கி வாய்க் குழற கிருஷ்ணனை நோக்கிச் சொல்கிறான். – 11:35

 

கிருஷ்ணா, உன்னுடைய பெருங்கீர்த்தியால் உலகம் மகிழ்கிறது. ஆனந்தத்தையும் அடைகிறது. இராட்சதர்கள் எல்லா திசைகளிலும் ஓடி ஒளிகின்றனர். சித்தர் கணங்கள் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள். பெரியோனே, அளவிறந்தவனே, தேவர்க்கு இறைவனே, உலகின் உறைவிடமே, பிரம்மாவிற்கும் பெரியோனே, எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக விளங்கும் உன்னை (யார்தான்) வணங்கமாட்டார்கள். அழியாபொருளும் நீ; உண்மையும் இன்மையும் நீ; அதற்கு அப்பாலுள்ளது எதுவோ அதுவும் நீயே. – 11:36-37

 

மீண்டும் அர்ஜுனன் புகழத் தொடங்குகிறான்:

 

எல்லையில்லா வடிவினனே, நீ ஆதிதேவன், மூத்தோர்களில் முதன்மையானவன் (புராணஹ புருஷஹ), நீ இவ்வுலகிற்கு உயர்ந்த உறைவிடம், யாவும் அறிந்தவன் நீ,  நீயே (அனைவர்க்கும்) அறிபடும் பொருளாகவும் அதன் எல்லையாகவும் இருக்கிறாய். உன்னால் இந்த உலகம் நிரம்பியுள்ளது. – 11:38

 

நீயே காற்று; எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரம்மன், பிரம்மனுக்கும் முத்தோன், உனக்கு மீண்டும் எனது கைக்கூப்புதல்கள். ஆயிரம் முறையும் அதற்கு அதிகமாகவும் உனக்கு என் வணக்கம். (அஃதாவது, கோடி, கோடி வணக்கம் என்பது போல) – 11:39

 

உன்னை முன்னும் வணங்குகிறேன், பின்னும் வணங்குகிறேன். எங்கும் நிறைந்த உன்னை எல்லாத் திக்குகளிலும் வணங்குகிறேன். அளவில்லா ஆற்றலுடையாய் நீ எங்கும் நிலைத்திருக்கிறாய். ஆதலால் நீ எல்லாம் ஆகின்றாய். – 11:40

 

திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் ஒரு பாடலில் சில கருத்துகளைச் சொல்லியிருப்பார்:

 

நாங்கள் அறியாத பிள்ளைகள். எங்கள் அறியாமையினால் உன்னை சிறுபேர் இட்டு அழைத்தோமே என்று பதறிப்போகிறார். அதற்காக நீ எங்களை மன்னித்து அருள்வாய் என்பார்.

 

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். – பாடல் 28, திருப்பாவை

 

அர்ஜுனனும் உரைக்கிறான்!

 

நின் பெருமையை அறியாமல் நின்னைத் தோழனென்று கருதி “ஏ கண்ணா, ஏ யாதவா …” என்றெல்லாம் துடுக்காகச் சொல்லியிருப்பேன். நீ என்னுடன் விளையாடும் போதும் என்னுடன் இருந்து உண்ணும் போதும் உறங்கும் பொழுதும் தனிமையிலோ அல்லது மற்றவர்கள் முன்னிலையிலோ வேடிக்கைக்காகச் செய்த அவமரியாதைகளை மன்னித்து அருளும்படி வேண்டுகிறேன். – 11:41-42

 

அர்ஜுனனின் சிறு பெயர்களுக்கும் ஆண்டாள் நாச்சியாரின் சிறு பெயர்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு! அவற்றை நாளைப் பார்ப்போம்.

 

நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page