top of page
Search

14/10/2024, பகவத்கீதை, பகுதி 60

  • mathvan
  • Oct 14, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

எவ்வளவு உயரிய நிலையில் இருப்பவனும் விழுந்துவிடுகிறானே அது ஏன்?


அர்ஜுனனின் கேள்விக்குப் பதிலைப் பரமாத்மா சொல்லத் தொடங்குகிறார்:


பார்த்தா, ஆசையும் சினமும்தாம் அழிவிற்கு அடிப்படை. (அடங்கா ஆசை சினத்தைத் தூண்டும்.) இவையே ஒருவனின் உயர்வைத் தடுக்கும் பகை. – 3:37


கொழுந்துவிட்டு எரியும் தீயினைப் புகை மண்டலம் சூழ்ந்து கொண்டால் அந்தத் தீ வெளியிலும் தெரியாது; ஒளிவிடவும் செய்யாது. அதைப் போன்றும், சுத்தமான கண்ணாடியின் மேல் மாசு படிந்திருப்பதைப் போன்றும் கருவினைக் கருப்பை சூழ்ந்திருப்பதனைப் போன்றும் ஆசையும் சினமும் இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன. – 3:38


நம்மாளு: தீயைப் புகை சூழ்ந்து கொண்டிருப்பது புரிகிறது; கண்ணாடியில் மாசு – இதுவும் புரிகிறது. அது என்ன கருவினைக் கருப்பை சூழ்ந்திருப்பது? கருப்பை இல்லாமல் கரு உருவாகுமா என்ன?


ஆசிரியர்: உயிர்களின் தோற்றம் (procreation) ஆசையினால்தான் ஏற்படுகிறது. இஃது ஒரு அவசியமான ஆசை. கருப்பையும் தேவையான ஒன்றே. ஆனால், எது வரை? அந்தக் கரு வளர்ந்து வெளிப்படும்வரை! அஃது எப்படி வெளியாகும்? அந்தக் கருப்பையைக் கிழித்துக் கொண்டுதான் வெளியாகும்.


ஆசையைனால் உண்டான அந்தக் கரு வெளியேற வேண்டும் என்றால் அதனை அதுவரை பாதுகாத்து வைத்த கருப்பையையும் கிழித்துக் கொண்டுதான் வெளியேற வேண்டும். இதுதான் குறிப்பு.


புகை மறைய தீ வெளிப்படும்; மாசு அகல கண்ணாடி பளிச்சிடும்; கருப்பை விலக உயிர் வெளிப்படும். அவை போன்று உனக்கு மன அமைதி வேண்டும் என்றால் ஆசை, சினம் என்னும் திரைகளைக் கிழித்துக் கொண்டு வெளியே வா என்கிறார்.


ஆசையென்னும் தீயை அடக்குவது கடினம். அஃது நிரப்பொணாத தீ! ஆசை ஒருவர்க்கு நித்தியப் பகை. – 3:39


ஆசையானது தூண்டப்படும் நேரம் அவை சங்கிலித் தொடர் போல வரும். இதற்கு அடிப்படையாவன:


புலன்களும் அதன் பின்னே செல்லும் மனமும் புத்தியுமாம். இவை ஒருவன் பெற்ற அறிவினைச் சூழ்ந்து கொண்டு மயக்கும். – 3:40


எனவே, பார்த்தா, இந்தக் குறைகளைச் (ஆசைகளைச்) சிறியதாக இருக்கும் பொழுதே புலன்களையும் மனத்தையும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடு. அடங்கா ஆசைகள்தாம் ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் பகை. – 3:41


அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதியில் அநுபூதி எவ்வாறு அமையும் என்று சொல்கிறார்.


அநுபூதி என்றால் வேறு ஒன்றுமல்ல. அனுபவத்தால் வரும் ஞானம். எந்த அனுபவத்தால் என்றால் இறை அனுபவத்தால்!


இறை என்பது எங்கும் விரவி உள்பொருளாக, உண்மைப் பொருளாக வியாபித்து நிற்கும் இயற்கை. இதனை ஜீவாத்மா, பரமாத்மா என்றும் சொல்கிறார்கள்.


சரி, அருணகிரிநாதப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் தூய மணிகளும் ஆடை ஆபரணங்களும் அணிந்து கொண்டிருக்கும் உன்னவளை நேசிப்பவரே, உனது அன்பினாலும் அருளினாலும் எனது ஆசைச் சங்கிலி துகள் துகள் ஆகிவிட்து. எனக்கு இப்பொழுது பேசா அநுபூதி பிறந்துவிட்டது என்கிறார்.


தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்

பேசா அநுபூதி பிறந்ததுவே. – பாடல் 43, கந்தர் அநுபூதி, அருணகிரிநாதப் பெருமான்


ஆசைகள் அற அநுபூதி பிறக்கும்.


அன்பு என்பது தொடர்புடையர்மாட்டு; அருள் என்பது அனைவரின்மாட்டு. அஃதாவது தொடர்புடையவர்களிடம் செலுத்துவது அன்பு; அனைத்து உயிர்களிடம் காட்டும் இரக்கம் அருள். அருளென்னும் அன்பீன் குழவி என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். காண்க https://foxly.link/easythirukkural_kural_757


பரமாத்மா தொடர்கிறார்:

புலன்கள் உயர்ந்தது என்பர்; அதற்கும் மேல் மனம் என்பர்; அதற்கும் உயர்ந்தது புத்தி என்பர். ஆனால், ஒன்று சொல்கிறேன் கேள்! எல்லாவற்றிற்கும் மேல் நீ தான்! இதனை அறிந்து கொண்டு ஆசைகளை வெல்வாய். – 3:42-43


உன்னை நீ அறிந்து கொள்! உன்னை நீ வெற்றி கொள் என்று சொல்லி இந்த கர்ம யோகம் என்னும் மூன்றாம் அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

ஆசைகளை வென்று செயல்களைப் பற்றற்ற முறையினில் செய்யத் தூண்டுவதுதாம் இந்தக் கர்ம யோகம் என்னும் பகுதி.


அடுத்து வருவது ஞான கர்ம சந்நியாச யோகம்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page