top of page
Search

15/01/2025, பகவத்கீதை, பகுதி 155

  • mathvan
  • Jan 15
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

அர்ஜுனா, உயர் நிலையை இந்த உலகிலேயே (இப்பிறப்பிலேயே) எய்தலாம் என்று அறியாமலே இழிபிறப்பாய் உழல்பவர்கள் இன்னும் இன்னும் கீழ்நிலையிலேயே வீழ்ந்து ஆழ்ந்து போகின்றனர். – 16:20

 

இதற்கு அடிப்படைக் காரணம் காமம், கோபம், லோபம் (தமக்கே தமக்கென இருத்தல் – எச்சில் கையால் காக்கையையும் ஓட்டாதவர்கள்!) என்னும் முக்குணங்கள். இம் மூன்றினையும் தள்ள வேண்டும். இல்லையென்றால் அவை நம்மை நரகத்தில் தள்ளி அழித்துவிடும். – 16:21

 

அர்ஜுனா, தவிர்க்க வேண்டிய இந்த மூன்று கீழானப் பாதையிலிருந்து விலகி நிற்பவர்கள் உயர் பண்பு கொண்டோர்களாவர். (அவரே) உயர் நிலை அடைவர். – 16:22

 

அற நூல்களை மதிக்காமல் ஆசை வயப்பட்டுச் செயல்களைச் செய்பவர்கள் ஒரு நாளும் மன அமைதி பெறுவதில்லை; இன்பத்தினை அனுபவிப்பதில்லை; உயர்நிலையும் எய்துவதில்லை. – 16:23

 

ஆகையினால், எவை செய்யத் தக்கன, எவை விலக்கத் தக்கன என்று உறுதிப்படுத்திக் கொள்ள உயர்ந்த அறநூல்களே அடிப்படை (பிரமாணம்). எனவே, காலம் கடந்தும் நிற்கும் உயர்ந்த அற நூல்களின் வழி உன் செயல்களை அமைத்துக் கொள். – 16:34

 

இவ்வாறாகச் சொல்லி இந்த அத்தியாத்தை நிறைவு செய்கிறார்,

 

தெய்வாசுர சம்பத்(து) விபாக யோகமென்னும் பதினாறாம் அத்தியாயம் முற்றும்.

 

அடுத்த அத்தியாயமாக சிரத்தாத் திரய விபாக யோகம் என்னும் பதினெழாம் அத்தியாயம் சொல்லப் போகிறார்.

 

சிரத்தை என்றால் நம்பிக்கை என்று சொல்கிறார்கள். அஃதாவது, நாம் ஒன்றின் மீது முற்றிலும் ஒன்றி வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஒட்டி நம் செயல்கள் என்று பொருள்படும்.

 

எடுக்கும் காரியத்திலெல்லாம் வெற்றி பெற சிரத்தை மிகவும் முக்கியமானது என்று அனைத்து அறிஞர்களும் அடித்துச் சொல்கிறார்கள்.

 

மகாகவி பாரதியார் இயற்றிய பரசிவ வெள்ளம் என்னும் ஒரு அருமையான கவிதையில் பல உண்மைகளைச் சொல்கிறார், இருபத்து நான்கு கண்ணிகளைக் கொண்ட நீண்ட கவிதையது.

 

சில கண்ணிகளைப் பார்ப்போம்.

 

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்

வெள்ளம் ஒன்றுண்டாம் அதனைத் தெய்வமென்பார் வேதியரே

எங்குமுளான் யாவும்வலான்  யாவும் அறிவானெனவேதங்கு பலமதத்தோர்  சாற்றுவதும் இங்கிதையே

(இவ்வாறக அந்த ஒரு பொருளின் மேன்மைகளை விரித்துக் கொண்டே போகிறார். சில வரிகளைப் பார்த்துவிட்டு அவர் சொல்லும் அந்த அரிய பொருள் என்னவென்று இறுதிக் கண்ணியில் தெரிவிப்பதைப் பார்ப்போம்.)

காவித் துணிவேண்டா கற்றைச் சடைவேண்டா

பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே…

 

சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதுமில்லை

தோத்திரங்கள் இல்லை உளந்தொட்டு நின்றாற் போதுமடா…

 

… நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்

சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா.

 

அஃதாவது, மகாகவி என்ன சொல்கிறார் என்றால் பாவனை ஒன்றே போதும் பரம நிலை எய்துதற்கு என்கிறார்,

 

பாவனை என்றால் என்ன பாவனை?


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page