top of page
Search

15/10/2024, பகவத்கீதை, பகுதி 61

  • mathvan
  • Oct 15, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பகவத்கீதையின் முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம். இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாங்கிய யோகம் என்னும் இரண்டாம் அத்தியாயம். இந்தப் பகுதியில் அறிவின் தேடலையும், செயலின் முக்கியத்துவத்தையும் குறித்து விரித்தார்.


மூன்றாம் அத்தியாயமாகிய கர்ம யோகத்தில் செயல், செயல், செயல் என்பதனை அழுத்திச் சொன்னார். அச் செயல்களும் பற்றற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுவே இல்லறத்தில் இருப்பவர்க்கு முக்கியம் என்றார்.


மூன்றாம் அத்தியாயம் சுருக்கமாக:


அர்ஜுனனுக்கு மீண்டும் குழப்பம்.


என்ன குழப்பம்?

ஞான யோகம் முக்கியம் என்றால் என்னை ஏன் செயலில் தூண்டுகிறாய் என்றதொரு கேள்வியை எழுப்பினான்.


செயல் ஏன் முக்கியம்?

செயலைச் செய்யாமல் யாராலும் இருக்க இயலாது. இல்லறத்தானுக்குக் கடமைகள் பல. எனவே, அவன் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தாக வேண்டும்.

கடமைகளோடேதான் பிறக்கிறாய். அக்கடமைகள் இயற்கையாக அமைவன. அவற்றை இயற்கையோடே இயைந்து செய். இயற்கை பேணப்படும். நீயும் உயர்வாய். இந்த இயற்கைச் சுழற்சியை அறிந்துகொள். பற்றில்லாமல் செயல்களைச் செய்.


எதற்காகப் பற்றில்லாமல் செய்ய வேண்டும்?

மனத்தில் தெளிவு இருக்கும். மனம் அமைதியுறும். இந்த உலகில் நீடித்து இருப்பாய்.


அறிவில் தெளிவில்லாமல் ஆர்வத்துடன் (பற்றுடன்) செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டால் என்ன செய்ய வெண்டும்?

அவர்களைக் குழப்பாதே; அதே சமயம் உன் செயல்கள் மூலம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ், அவர்கள் உன்னைப் பார்த்து மாறிக்கொள்ளட்டும்.


தலைமை என்பதே எடுத்துக்காட்டாகத் திகழ்வதுதான். நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பின் உங்களின் ஒவ்வொரு அசைவுகளையும், உங்களைத் தொடர்பவர்கள், பின்பற்றுவார்கள். - லீ ஐகோக்கா


Leadership means setting an example. When you find yourself in a position of leadership, people follow your every move. - Lee Iacoca


எதனைத் தவிர்க்க வேண்டும்?

ஆசையையும் சினத்தையும்.


எவ்வாறு தவிர்ப்பது?

புலன்களையும் மனத்தையும் ஆசையின் பின்னால் செல்வதைக் கட்டுப்படுத்து.


அவ்வாறு செய்தால்?

உன்னையே நீ அறிவாய்!

என்று சொல்லி நிறுத்தினார்.


சரி, நாம் ஞான கர்ம சந்நியாச யோகத்துக்குள் நுழைவோம்.


ஞானம் என்றால் அறிவு; கர்மம் என்றால் செயல்கள் அல்லது கடமைகள்; சந்நியாசம் என்றால் எல்லாவற்றையும் துறப்பது. யோகம் என்றால் இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று பொருந்தி இருக்கிறது என்பதனைக் குறித்த சிந்தனை.


வாழ்க்கையின் நான்கு படி நிலைகளாவன: கற்கும் பருவம்; வாழும் பருவம்; ஓய்வெடுக்கும் பருவம்; மறையும் பருவம் என்பன நாம் அறிந்ததே.


பகவத்கீதையானது வாழும் பருவத்தில் இருப்பவர்களுக்கு, அஃதாவது, இல்லறத்தில் பயணிப்பவர்களுக்குச் சொல்லப்பட்டது என்பதும் தெரியும்.


இல்லறத்தில் சோர்வு வரும்; சலிப்புத் தலை தூக்கும்; என்ன முயன்றாலும் எங்கேயாவது முட்டிக் கொண்டு நிற்கும். அந்த நேரத்தில் மனம் மயங்கும். இந்த வாழ்வினைத் துறந்து விடலாமா என்ற எண்ணம் தோன்றலாம். அல்லது, இந்த உலகத்தைவிட்டு ஒரே வழியாகச் சென்றுவிட்டால்தான் என்ன என்ற கையறு நிலை தோன்றலாம்.


அவ்வாறு தோன்றும்போது மனத்தை ஒரு நிலையில் நிறுத்து. விடா முயற்சி விசுவரூப வெற்றி என்பதனை அறிந்துகொள் என்று சொல்லப் போகிறாரா?


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page