top of page
Search

16/01/2025, பகவத்கீதை, பகுதி 156

  • mathvan
  • Jan 16
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பாவனை என்றால் என்ன பாவனை என்ற வினாவொடு நிறுத்தியிருந்தோம்.

 

அதற்கு விடையாகப் “பரசிவ வெள்ளம்” என்னும் கவிதையின் இறுதிக் கண்ணியில் மகாகவி பாரதியார் உறுதியாகச் சொல்வது “சிரத்தை” என்னும் பாவனை ஒன்றே போதும் என்கிறார்.

 

சிரத்தை ஒன்றே போதும் நினைத்ததை அடைய!

 

சிரத்தை என்பது வேறு ஒன்றுமன்று! நம்மை நாமே உயர்த்திக் கொள்ளத் தேவையான மேலாண்மை (Management).

 

சிரத்தையின் கூறுகளாவன:

1.   குறிக்கோளில் தெளிவு;

2.   அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெளிதல்;

3.   சரியாக வழி நடத்திச் செல்ல வழிகாட்டி;

4.   அந்த வழிகாட்டியின் மேல் முழு நம்பிக்கை;

5.   செல்லும் பாதையில் தெளிவும் உறுதியும்;

6.   இலக்கை அடைய தொடர் முயற்சியும் எந்தவொரு சிறிய செயலையும் கவனத்துடன் கையாள்வதும்;

7.   சிந்தனையைச் சிதறடிக்கச் செய்யும் எதனையும் செய்யாமலிருத்தல்;

8.   தடைகள் வரின் தகர்த்தெறியும் துணிவு

 

இந்தச் செயல்முறைதான் சிரத்தை. இது ஒன்றே போதும் வையத் தலைமை கொள்ள!

 

சிரத்தை எப்பொழுதும் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். நமது குணக் கோளாறுகள் (Mood swings) சிரத்தையைச் சிதறடிக்கக் கூடாது. சிந்தனையில் சிதறல் ஏற்பட்டால், சிரத்தையானது குணங்களைச் சார்ந்தே அமைந்துவிடும். மிகவும் கவனம் தேவை.

 

குணங்களோ இடம் மற்றும் காலத்தைச் சார்ந்தன. குணங்கள் சாத்விகம், இராசசம், தாமசம் என மூவகையாகச் செயல்படும்.

 

அவற்றின் வழி சிரத்தையும் மூவகைப்படலாம். அவை: சாத்விக சிரத்தை, இராசச சிரத்தை, தாமச சிரத்தை. ஆனால், நாம் எப்பொழுதும் குணங்களை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதனை குணங்களைக் கடந்து நில் என்று பல முறை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார் கீதாச்சாரியன்.

 

எனினும், குணங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மூவகைச் சிரத்தை எவ்வாறு வெளிப்படும் என்பதனை விரித்தும் பகுத்தும் சொல்வதே சிரத்தாத் திரய விபாக யோகமென்னும் பதினேழாம் அத்தியாயம்.

 

நம் அர்ஜுனன் தன் வினாவினால் இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறான்:

 

கிருஷ்ணா, சற்று முன்னர் சொல்லிய பாடலில் (16:24), அறிவுசார் நூல்கள் பிரமானங்கள் என்றாய், வழிகாட்டிகள் என்றாய்.  இந்த அடிப்படைகளை மறந்தவர்களின் செயல்களின் வழி சிரத்தை எவ்வாறு அமையும்? சாத்விகமா? இராசசமா? தாமசமா? – 17:1

 

பிரமானங்களும் வழிகாட்டிகளும் இல்லாத சிரத்தையானது மூவகை குணங்களின் வழி சாத்விகம், இராசசம், தாமசம் என அமையும். அவற்றை விரிக்கிறேன் கேள் அர்ஜுனா! – 17:2

 

இது நிற்க.

 

முக்குணங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நாம்தாம் எந்தக் குணம் எப்பொழுது தேவை என்று அறிந்து செயலாற்ற வேண்டும். பிடித்த முயலுக்கு, உண்மையில், ஒரு கால் எல்லையென்றால் தவிர, அந்த முயலுக்கு மூன்று கால் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது! இவ்வாறே எந்தக் குணமும் தாழ்வான குணமில்லை!

 

சிரத்தை என்பதை எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால் எடுத்துக் கொண்ட குறிக்கோளுக்குத் தடையாகக் குணக்கோளாறுகள் இருந்துவிடக் கூடாது. குணக்கோளாறுகள் ஏற்படப் பல காரணிகள் இருக்கும். அவையாவன: உண்ணும் உணவு, செயல்களைச் செய்யும் வழிமுறை (means), மனத்தில் ஒருமை (focus), பிறர்க்குத் தர வேண்டிய கடமை (responsibility).

 

உணவு என்றால் வாயால் உண்பது மட்டுமல்ல!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 
 
 

Comentários


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page