top of page
Search

16/12/2024, பகவத்கீதை, பகுதி 122

  • mathvan
  • Dec 16, 2024
  • 1 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

பன்னிரண்டாம் அத்தியாயம் பக்தி யோகம். அஃதாவது பக்தியில் பொறுந்தி நிற்பது.

 

பற்றற்றுச் செயல்களைச் செய்தால் இறுதியில் என்னை அடைவாய் என்று பகவத்கிதையின் இரண்டாம் அத்தியாயம் வலியுறுத்தியது. வேதங்களில் மயங்கி நிற்காதே என்றும் அதற்குச் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் விளக்கமும் முன்னர் பார்த்துள்ளோம்.  காண்க 25/09/2024, பகவத்கீதை, பகுதி 41.

 

மேலும் பகவத்கீதையின் இலக்கே இல்லறத்தில் இருக்கும் அர்ஜுனன் போன்றோர்க்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகள்தாம் முக்கியம் என்பதனை மீண்டும் மீண்டும் பல அத்தியாயங்களில் உணர்த்தியதைக் கண்டோம்.

 

ஆனால், அத்தியாயம் எட்டு முதல் இந்தக் கருத்துகளில் இருந்து மாறுபட்டு ஞானத்தைவிட, விஞ்ஞானத்தைவிட, செயலைவிட கேள்வி கேட்காத பக்தி சிறந்தது என்றும் அதனிலும் தன்னை வணங்கல் சிறந்தது என்று பகவான் தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்ளுமாறு அமைந்துள்ளது. அவனோ “நான் உனது செயல்களுக்கெல்லாம் பொறுப்பு எடுக்கமுடியாது” என்று முன்னர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தான். காண்க பாடல் 5:15, 01/11/2024, பகவத்கீதை, பகுதி 77.

சரி, இப்பொழுது சொல்லும் கருத்துகள் யாருக்குப் பொருந்தலாம் என்றால் இல்லறத்தில் இருந்து விலகியவர்களுக்குச் சாத்தியமாகலாம்! சதாகாலமும் அவனின் நினைவாக இருந்து இந்த உலகைவிட்டு நீங்கலாம்!

 

இவ்வாறு மாறுபட்ட சிந்தனைகளைச் சொல்லிக் கொண்டுவரும் பொழுதும் இடையிடையே “போர் செய்” என்னும் கருத்தும் அங்காங்கே வருகின்றது! எனவே கருத்து ஒற்றுமையை இந்த நூலில் காண்பது கடினமாக உள்ளது என்கிறார் கைர் (Quest for the original Gita, Gajanan Shripat Khair).

 

சரி கடவுள் கொள்கை தேவையா என்றால் அதனின் பயனின் இருந்து பார்க்க வேண்டும். கதியற்றவனுக்குக் கடவுளே துணை! கடவுள் தம்மைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் பள்ளத்தில் வீழ்ந்திருப்பவர்க்கு ஆறுதல் அளிக்கலாம். அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பயணிக்கும் பொழுது சுமை சற்றுக் குறைந்தாற் போலவும் உணர்வார்கள். அவர்களிடம் சென்று உனக்குப் பகுத்தறிவு இல்லை. “கடவுள் இல்லை” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பது பகுத்தறிவிற்கே ஒவ்வாது.

 

ஒரு திரைப்படப் பாடல் உண்டு:

 

… நான்கு பக்கம் துன்பம் வந்தால்

நாத்திகர்க்கும் கடவுள் உண்டு …

 

அடுத்துவரும் வரிகள்தாம் கவிதையின் உச்சம்!

 

… காண்பதெல்லாம் துயரம் என்றால்

கடவுளுக்கும் கடவுள் உண்டு! – திரைப்படம் - நினைப்பதற்கு நேரமில்லை, 1963

 

இப்படியான சிதறலற்ற பக்தி சைவத்தில் இல்லையா என்றால் நிரம்ப உண்டு!

 

சரி, இவை நிற்க. நாம் எடுத்துக் கொண்ட செயலான பகவத்கீதை வாசிப்பிற்குள் நாளை மீண்டும் நுழைவோம். கடமை, கடமை! அதனை மறத்தல் கூடாது.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page