17/01/2025, பகவத்கீதை, பகுதி 157
- mathvan
- Jan 17
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
உணவு என்றால் வாயால் உண்பது மட்டுமல்ல!
நம் புலன்களால் உள் செலுத்தும் உள்ளீடுகள் அனைத்துமே உணவுகள்தாம் (inputs).
உன்ணும் உணவை ஆகாரம் என்றும்
வழிமுறைகளை யக்ஞம் என்றும்
மனத்தின் ஒருமையை தவம் என்றும்
பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமையைத் தானம் என்றும்
நான்கு வகையாகப் பகுத்து இந்த நான்கும் எவ்வாறு
சாத்விகம், இராசசம், தாமச முக்குணங்களால் வேறுபடலாம் என்பதனையும் விரித்து எடுத்து வைக்கிறார் இந்த அத்தியாயத்தில்.
கீதாச்சாரியன் தொடர்கிறார்:
அர்ஜுனா, சிரத்தையில்லாதவன் (நம்பிக்கையில்லாதவன்) என்பவன் யாருமில்லை. உயிரினம் அனைத்தும் சிரத்தையின் வடிவே. அஃது அவரவர் உள்ளத் தின்மைக்கு ஏற்றார் போல் வடிவம் கொள்ளும். அவனின் நம்பிக்கைக்கு ஏற்றார்போல் அந்தத் தன்மை கொண்டவனாகவே ஆகிறான். – 17:3
நம் வள்ளுவப் பெருந்தகை வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்கிறார் குறள் 595 இல். காண்க https://foxly.link/easythirukkural_595.
சில பழமொழிகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டினைப் பார்த்துவிட்டு நகர்வோம்.
“நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள் என்று எனக்குக் காட்டுங்கள், நீங்கள் எப்படிப்பட்டவர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
(“Show me who you’re with, and I’ll tell you who you are.”)
நம் வாழ்நாளில் மிக அதிகமான நேரம் எந்த ஐந்து நபர்களுடன் செலவழிக்கிறோமோ அவர்களின் இயல்புகளின் கலவையாகவே நாம் இருப்போம்.
(“You are the sum total of the five people you spend the most time with.”)
இவற்றிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.
ஜார்ஜ் பெர்னாட்ஷா (George Bernard Shaw, 1856 – 1950) என்னும் ஒரு பேரறிஞரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் தோற்றத்தில் கொஞ்சம் சுமாராக இருப்பார். அவரை ஒரு அழகி சந்தித்து “நானோ அழகு; நீங்களோ அறிவின் மொத்த உருவம்; நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அழகும் அறிவும் உள்ள ஒரு குழந்தை நமக்குக் கிடைக்காதா?” என்றார்.
அதற்கு நம் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள் “நீங்கள் சொல்வது உண்மையாகவும் ஆகலாம். ஆனால், இப்படி யோசித்துப் பாருங்கள் – நானோ அழகில்லை, உங்களுக்கோ அறிவு குறைவு. இந்த இரண்டும் இணைந்து ஒரு குழந்தை வந்துவிட்டால்? எனவே வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு” என்றாராம்.
கீழ்க் குணங்கள் எளிதாகப் பற்றிக் கொள்ளும். நாம் யாருடன் இணைந்து இருந்தாலும் நம்மட்டில் குணங்களைக் கடந்து சிரத்தையை மனத்தில் வைத்து நடக்க வேண்டும்.
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து என்று நாலடியாரில் கூறியுள்ளதைப் போல் இருக்க வேண்டும். காண்க https://foxly.link/easythirukkural_396_naladiyaar_135
இக் கருத்துதான் பகவத்கீதையின் பதினேழாம் அத்தியத்தின் மையப் புள்ளி என்று நினைக்கிறேன்.
கீதாச்சாரியன் தொடர்கிறார்:
சாத்விக குணம் நிறைந்திருப்பின் கடவுளரைப் போன்ற சான்றோர்களைப் போற்றுவர்; இராசசம் நிறைந்திருந்தால் உடலில் உறுதி கொண்டவர்கள் என்று சொல்லப்படும் யக்ஷர்கள், இராட்சசர்களைப் போன்றவர்களைப் போற்றுகின்றனர்; தாமச குணமுடையோர் கண்ணுக்குப் புலப்படாத பிரேத பூத கணங்களைப் போன்றவர்களைப் போற்றுகின்றனர். – 17:4
(போற்றுவது என்பது வழிகாட்டியாக (Role model) அமைத்துக் கொள்வது என்று பொருள்.)
சிலர் பேராசையினாலும் பெரும் பற்றினாலும் தாம் விரும்புவதனை அடைய வீண் அகங்காரம் கொண்டு (காண்பவர்கள் கலங்கும்படியான) கோரமான முயற்சிகளில் (தவம்) இறங்குகிறார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் துன்பம் விளைவிக்கின்றனர். உடலினுள் உறையும் நானும் இன்னலுக்கு ஆளாகிறேன். சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் இவர்கள் அசுர சிரத்தை உள்ளவர்கள் என்பதனை அறி. – 17:5-6
(மென்மைதான் இயற்கையின் மொழி. கடுமை தவிர்க்க வேண்டிய வழி.)
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comentários