17/08/2024, பகவத்கீதை, பகுதி 3
- mathvan
- Aug 17, 2024
- 2 min read
Updated: Jan 13
அன்பிற்கினியவர்களுக்கு:
மனம் அமைதியடைய இரு வழிகள் என்று பார்த்தோம். அவை அன்பும், அறிவுமாம்.
சூத்திர நூலுக்கு ஓர் எடுத்துக்காட்டு நம் பேராசானின் திருக்குறள் என்றும் பார்த்தோம். திருக்குறள் என்பது நம் வாழ்வியலுக்கான ஒரு முழுமையான நூல். தோற்றம் முதல் மறையும்வரை உள்ள அனைத்துப் பருவத்தினர்க்கும் ஏற்றது.
அதே போன்று முதுமுனைவர் பட்ட ஆய்விற்கும் பயன்படுத்தலாம்; முதலாம் வகுப்பு மாணவர்க்கும் பயன்படுத்தலாம்.
நாட்டின் உயர் தலைவர்களுக்கும் தேவையானக் கருத்துகளைத் தந்து வழிகாட்டும்; உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் வழிகாட்டும்.
அனைத்துப் படிநிலையினரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையினில் காலம், இடம் (time and space) கடந்தும் பயன்படும் நூல் ஒன்று உண்டென்றால் அஃது திருக்குறளே!
காலம் கடந்து நிற்கும் நூல்கள் நிச்சயம் மனித குலத்திற்கு வஞ்சனை செய்யாது. அப்படி வஞ்சனை செய்வதுபோலத் தோன்றினால் அந்தக் கருத்தினை மறு ஆய்வு செய்து தெய்ளிதல் முக்கியம்.
நம் தமிழக சிந்தனையாளர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலில் திருக்குறளின்பால் வைத்திருந்த கருத்து என்பது அஃது ஒரு பிற்போக்கான நூல் என்பதே! (குடி அரசு, சித்திரபுத்தன் என்ற புனைப் பெயரில் கட்டுரை 20-01-1929) (காண்க பக்கம் 197 - 198, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் வரிசை, தொகுதி-1, சமுதாயம் -3, பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து)
தமிழறிஞர்கள் அவரை அனுகி திருக்குறளுக்கு உரை செய்த சிலர் சொல்லும் கருத்துகள்தாம் பிற்போக்கானவையே தவிர திருக்குறள் மூல நூல் மாந்த இனத்தை உயர்த்தும் ஓர் ஒப்பற்ற நூல் என்பதனைத் தெளிபடுத்தினர்.
அதனில் தெளிவு பெற்ற தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலில் திருக்குறள் மாநாடு நடத்தி அனைவர்க்கும் ஒரே மதம் அஃது “குறள் மதம்” என்று அறிவித்தார். (ஈரோட்டில், 23-24.10.1948 இல் சொற்பொழிவு, விடுதலை 05.11.1948) (காண்க பக்கம் 1933 - 1944, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை, தொகுதி - 4, மதமும் கடவுளும் - 3, பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து)
இந்த நிகழ்வுகளை எதற்குச் சொல்கிறேன் என்றால் பொது புத்தியில் பல கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தியினால் பலவற்றை ஒதுக்குகிறோம், விலக்குகிறோம்.
உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டும்கூட அவற்றைக் கற்க முற்படுவதில்லை.
காலம் கடந்தும் நிற்கும் பகவத்கீதையைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதில் உண்மையில் என்னதான் சொல்லப்பட்டுள்ளன என்ற தேடுதல் பொறி என்னுள் பற்றிக் கொண்டது.
பகவத்கீதையின் பாடல்களும் இரு அடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை 700 பாக்கள். உரையாடல் போன்று அமைந்துள்ளது.
பகவத்கீதையின் பல உரைகளைக் கண்டபோது உரை பேதங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
எப்படித் திருக்குறளில் அறிஞர் பெருமக்களின் உரைகள் சில குறள்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதன போன்று உள்ளனவோ அவைபோன்றே பகவத்கீதையின் சில உரைகளும் விளங்குகின்றன. அவ்வுரைகளைக் கொண்டு மூலத்தினை ஒதுக்க இயலாது.
முதல் பார்வையில் பகவத்கீதையை சாத்திர நூலாகப் பார்க்கலாம் என்று சிந்தித்தோம். அது வெளிப்படுத்தும் கருத்தினைச் சுருங்கக் கூறினால் சாக்ரடீஸ் பெருமானர் சொல்லும் “உன்னையே நீ அறிவாய்” என்பதனைத்தான்!
வினாக்கள் எழலாம்! போர்க்களத்தில் நீதி போதனையா என்று? அதுவும் அவ்வளவு நீண்ட போதனையா (700 பாடல்கள்)? என்ற வினாவும் எழலாம்.
போர்க்களத்திலும் போதனைகள் மலரும் என்பதற்கு அன்மைக்கால உதாரணம் இருக்கின்றது.
அன்மை என்றால் முதலாம் நூற்றாண்டில் (கி.பி. 160 -180) போர்க் களத்தில் பிறந்ததுதான் மார்க்கஸ் அரேலியஸின் (Marcus Aurelius) “சிந்தனைகள்” (Meditations) என்றதோர் அருமையான நூல்.
மார்க்கஸ் அரேலியஸ் யார் என்றால் சாக்ரடீஸ் வழிவந்தவர். ரோமாபுரியின் பேரரசராக இருந்தவர். கிரேக்கத்தின் ஸ்டோயிசம் (stoicism) என்ற இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாட்டு மரபில் வந்தவர். ஸ்டோயிசம் குறித்துக் காண்க https://foxly.link/easythirukkural_stoic.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments