top of page
Search

17/10/2024, பகவத்கீதை, பகுதி 63

  • mathvan
  • Oct 17, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

இயற்கை சமநிலை தவறும் பொழுது அது பல விதத்தில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வழி முறையைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.


நம் வள்ளுவப் பெருந்தகை வான்சிறப்பில் இதனைக் குறிக்கிறார். காண்க https://foxly.link/easythirukkural_15


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. - 15; - வான் சிறப்பு


மழை எப்படித் தோன்றுகிறதோ அப்படியே சமநிலையும் தோன்றும்.

யுகங்கள் தோறும் நான் வந்து உதிப்பேன் என்றால் இந்தக் கருத்துகள் மீண்டும் மீண்டும் தோன்றும் சரி செய்வதன் பொருட்டு!


வரலாறு திரும்பும் என்பார்கள்?


எப்பொழுது என்றால் நாம் வரலாற்றை மறந்துவிடும் பொழுது!


யூஜின் ஓ நீல் (Eugene O'Neill) ஓர் அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் சொல்வது என்னவென்றால்:


"நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என்பன இல்லை – தற்பொழுது நிகழ்வது கடந்த காலம் மட்டுமே! அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன”


“There is no present or future - only the past, happening over and over again - now.” - Eugene O'Neill


வரலாறு திரும்பும் நாம் கவனக் குறைவாக இருக்கும் பொழுது!

(History repeats when we forget).


யுகங்கள் தோறும் தோன்றும். அவ்வளவே!


சரி நாம் மீண்டும் நான்காம் அத்தியாயத்திற்குள் நுழைவோம். இந்த அத்தியாயத்திற்கு ஞான கர்ம சந்நியாச யோகம் என்று பார்த்தோம். ஆனால், சில உரைகளில் இதற்கு ஞான யோகம் என்ற தலைப்பையும் கொடுக்கிறார்கள்.


யுகங்கள் தோறும் தோன்றுவேன் என்ற பரமாத்மா தொடர்கிறார்:

மீண்டும் மீண்டும் தோன்றும் இந்த இரகசியத்தை அறிந்தவன் முழுமை அடைகிறான், அவன் இயற்கையோடே ஒன்றிவிடுகிறான். – 4:9


ஆசை, அச்சம், கோபம் உள்ளிட்டவைகளை ஒழித்தவர்களின் மனம் அமைதியடையும்; செயல்களில் பற்று இருக்காது; (அவர்களின் மனத்தில் நானே இருக்கிறேன்.) அவர்கள் பிறவாமை எய்துகிறார்கள்; இயற்கையோடே (என்னுடனே) கலந்துவிடுகிறார்கள். யார் யார் என்னை எவ்வாறு வேண்டுகிறார்களோ அவ்வாறே நான் அவர்களைச் சார்கிறேன். அனைத்து உயிர்களும் பல வழிகளில் இயற்கையை (என்னை) அடையவே முயல்கின்றன– 4:10-11


வள்ளுவர் பெருந்தகை கடவுள் வாழ்த்தில் கீழ்க்காணுமாறு சொல்கிறார்:


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். - 3; - கடவுள் வாழ்த்து


மாட்சிமை கொண்ட அடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் பூப்போல இருக்கும் மனத்தின் கண்ணே விரைந்து சென்று அடைவான். அவ்வாறு, இடைவிடாது நினைப்பவர்கள், எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகிலும் நீடு வாழ்வார். இந்த உலகில் நீடு வாழச் சாத்தியமில்லை என்பதனால் இந்த உலகை விட்டு நீங்கிய பின்பும் நீடுவாழ்வார். புகழ் வாழ்வு எய்துவர்.



மதி எப்படியோ வழி அப்படி! (யதா மத்; ததா பத்)


பரமாத்மா தொடர்கிறார்:


செயல்களின் பயன்களினால் ஈர்க்கப்படுபவர்கள் பல் வேறு தேவதைகளை நாடுகிறார்கள். அவர்கள் கேட்டது கிடைத்தும்விடும்! – 4:12


நம்மாளு: எல்லாமே ஒரு தொகுப்பாகத்தான் (Package) வரும்! இது கவனத்தில் இருக்கட்டும் என்று சொல்கிறார் போலும்.


பெற்றோர்களின் சொத்துகளுக்காக அடித்துக் கொள்ளும்பொழுது அவர்களுக்கு அந்தச் சொத்துகள் வந்து சேர்ந்துவிடும். ஐயமில்லை. ஆனால், அந்தச் சொத்துகளுடன் என்னென்ன வரும் என்பது யாருக்குத் தெரியும். அவை அனைத்தையும் அனுபவித்துதான் தீர வேண்டும்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page