17/11/2024, பகவத்கீதை, பகுதி 93
- mathvan
- Nov 17, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
எதனை நோக்கி ஓடுகிறோமோ அதனை அடைந்துவிடுவோம். என்ன, உள்ளத்தில் உறுதிமட்டும்தான் தேவை.
நோக்கம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். உலகத்தின் விந்தையே அதுதான்! அது உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் அனைத்துக் காட்சிகளையும் அமைத்துக் கொடுக்கும். நன்மையா, தீமையா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காது. நம் முதலாளியின் விருப்பம் இதுதான் என்று அது புரிந்து கொண்டால் அவ்வளவுதான். அல்லாவுதீனின் அற்புத விளக்குப் போல அது செயல்படுத்தும். அவ்வளவே!
பின் விளைவுகள் நம்மைச் சார்ந்தன!
இந்த விருப்பம் நிறைவேற அந்தக் கடவுள்; அந்த விருப்பம் ஈடேற அதற்குப் பக்கத்தில் இருக்கும் கடவுள்; அந்த ஆசையா அதற்கு மலை மேல் இருக்கும் கடவுள் என்றெல்லாம் மனிதர்கள் கடவுளரையும் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். அந்த அந்தக் கடவுளரிடம் சென்று வேண்டிக் கொள்ளும் பொழுது அவர்களின் மனத்தினில் ஒரு நம்பிக்கைத் துளிர் விடுகிறது. அவர்களின் முயற்சியால் அந்த துளிரின் வேர் ஆழங்கால்படுகிறது. பின்னர் அவர்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறுகிறது! இதில் முக்கியமானப் பகுதி அவர்கள் செய்யும் செயல்களில் உள்ள ஈடுபாடு (சிரத்தை). இதுதான் முக்கியம் அவர்களின் எண்ணங்கள் ஈடேற! – 7:20-22
இது நிற்க.
கடவுள் (அலாவுதீனின் அற்புத விளக்கு என்று வைத்துக் கொள்பவர்கள் அதனை நினைத்துக் கொள்க) என்பவர் நம் முன்னே தோன்றிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவரிடம் நமக்கு என்ன வேண்ட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வளவு பணம்? இந்த மகிழ்வுந்து (Car)? பெரிய வீடு? நல்ல வாழ்க்கைத் துணை? கூர்ந்த மதி? பெரும் மதிப்பும் செல்வாக்கும்? இவை சரியான வேண்டுகோள்களா? இல்லை!
சரி, இவை கிடைத்துவிட்டால்? அதற்கும் மேலே மனம் மயங்கும். இல்லாதைக் குறித்து ஏங்கும். மீண்டும் பிரார்த்தனைகள்!
சிந்திக்க வேண்டும். இதற்கு விடை கண்டுபிடித்துவிட்டால் நீங்களே ஞானியும் விஞ்ஞானியும் ஆவீர்கள்.
சரி எதை வேண்ட வேண்டும் என்கிறீர்களா? அதுதான் இரகசியம். அந்த இரகசியத்தைத்தான் சொல்லப் போகிறேன்.
அந்தக் கடவுள், அந்தக் காமதேனு, அந்த அல்லாவுதீனின் அற்புத விளக்கு நம் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நம் வாழ்நாள் முழுவதும் கவலையில்லை!
நல்ல வழியைக் காட்டு; என்னுடனே இரு; அந்த வழியினில் பயணிக்க மன உறுதி அமையட்டும் இவைதாம் நம் வேண்டுகோளாக இருக்க வேண்டும். இவற்றை விடுத்து அதைச் செய்து கொடு; இதனைச் செய்து கொடு என்றால் நாம் எப்பொழுதும் கையேந்தும் அறிவிலிகளாகவே இருப்போம்.
இந்தக் கருத்தினைப் பரமாத்மா அடுத்துவரும் பாடல்களில் தெரிவிக்கிறார்.
அற்ப மதியுடைவர்கள் அடையும் பயன்கள் தற்காலிகமானவை; மறைந்துவிடக் கூடியவை; என்னையே தம் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னையே அடைகிறார்கள். – 7:23
மாறுபாடில்லாததும், அதற்கும் மேல் வேறு ஒன்றும் தேவை இல்லை என்ற மன நிறைவையும் தருகின்ற இயற்கை விதிகளை அறியாமல் இருப்பவர்கள்தாம் தங்கள் அறியாமையின் வெளிப்பாட்டினை என் (இயற்கையின்) மேல் ஏற்றுகிறார்கள். இந்த மாயையில் சிக்குண்டவர்களுக்கு இவை விளங்குவதில்லை. – 7:24–25
அர்ஜுனா, இயற்கை அறிவானது சென்றன, நின்றன, வருவன என அனைத்தையும் அறியும் ஆற்றல் கொண்டது. இந்த இயற்கை அறிவினை ஒருவரும் கவனத்தில் கொள்வாரில்லை. விருப்பு, வெறுப்பு என்னும் இரு முனைகளினூடே அவர்களின் மனம் அலைபாய்ந்து கொண்டுள்ளன. 7:26
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments