17/12/2024, பகவத்கீதை, பகுதி 123
- mathvan
- Dec 17, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பக்தி யோகமென்னும் பன்னிரண்டாம் அத்தியாயத்தினுள் நுழைவோம்.
வியத்தம் என்றால் தமிழில் வெளிப்படை என்று பொருள். இந்தச் சொல் சமஸ்கிருதத்தில் வியக்தம் என்று வழங்கப்படுகிறது. இந்தச் சொல்லுடன் ‘அ’ என்னும் முன்னொட்டு இட்டால் எதிர்மறை பொருள் கொள்ளும்.
அஃதாவது, அவ்வியக்தம் என்றால் வெளிப்படையற்ற என்று பொருள்.
பாடல் 2:28 இல் இந்தச் சொல்லாடல்களைப் பார்த்துள்ளோம்.
அவ்வியக்த்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத
அவ்யக்தநிதனான் யேவ தத்ர கா பரிதேவனா – 2:28
பூதானி = பொருள்கள்; அவ்வியக்த்தாதீனி = முதலில் தோன்றாமலும்; வ்யக்தமத்யானி = இடையில் சில பொழுது தோன்றியும்; அவ்யக்தநிதனான் யேவ = முடிவில் மறையும் தன்மையையும் உடையன.
இந்த அவ்வியக்த என்னும் சொல் இந்த அத்தியாயத்தின் முதல் பாடலில் மீண்டும் வருகிறது.
இது நிற்க.
அர்ஜுனன் ஒரு வினாவைத் தொடுக்கிறான்:
எந்தப் பக்தர்கள் நிலை பெற்ற மனத்தினராய் உன்னை நன்கு பூசிக்கின்றனரோ மேலும் புலன்களுக்குப் புலனாகாத (அவ்வியக்த) அக்ஷரப் பொருளைப் போற்றுகின்றனரோ இவ்விரு வகையினருள் எவர்கள் யோகத்தை நன்கு உணர்ந்தவர்கள்? – 12:1
மேற்கண்ட வினா அர்ஜுனனுக்கு ஏன் எழுகின்றது என்றால் எட்டாம் அத்தியாயமான அக்ஷரப் பிரம்ம யோகத்தில் இந்த அவ்வியக்த அக்ஷரப் பொருளை அறிந்து கொண்டால் இயற்கையுடன் இயல்பாக (தம்முடன்) இணைந்து கொள்ளலாம் என்பது விளக்கப்பட்டுள்ளது. காண்க 20/11/2024, 21/11/2024, பகவத்கீதை, பகுதி 96, 97.
பகவான் அர்ஜுனனின் வினாவிற்கு விடையாகச் சொல்லுகிறான்:
என்னிடத்தில் மனத்தை வைத்துச் சிரத்தையுடன் அதனிலேயே நிலை பெற்று எவர்கள் என்னைப் பூசிக்கின்றனரோ அவர்கள் யோகத்தை நன்குணர்ந்தவர்கள் என்று என்னால் கருதப்படுவர். – 12:2
(இந்தப் பாடல்களில் வரும் யோகம் என்னும் சொல் பகவானுடன் பொருந்துவது என்னும் பொருளில் வருகின்றது.)
இருப்பினும், அழிவற்றதும், கண்ணுக்கு நேரடியாகப் புலப்படாத (அவ்வியக்தம்), மாறுதலற்று எங்கும் பரவியுள்ள உறுதிப் பொருளை யாவர் போற்றுகின்றனரோ, எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்களும் என்னயே அடைகின்றார்கள். – 12:3-4
அவ்வியக்தப் பொருள்களில் நாட்டம் கொண்டவர்களுக்குத் தொல்லை அதிகம். உடலைத் தாங்கி இருப்பவர்க்கு இந்தப் பாதை கடினமானது. – 12:5
ஆனால், எல்லாச் செயல்களையும் துறந்து என்னையே உயர் பொருளாகக் கொண்டு வேறு எதனையும் சாராது என்னையே தியானித்து இருப்பவர்கள் யாவர்? அவர்களை மரண சம்சாரக் கடலில் இருந்து நான் கரையேற்றிக் காப்பவனாக இருப்பேன். – 12:6-7
மனத்தை என்னிடத்திலேயே நிறுத்து; என்னித்தில் உன் புத்தியையும் செலுத்து; அதன்பின் என்னிடத்திலேயே நீ உறைவாய். ஐயமில்லை. – 12:8
இந்த வழிமுறையில் செல்ல உனக்குச் சக்தி இல்லையாயின், அர்ஜுனா, தொடர்ந்து முயல் (அப்பியாசம்). முயன்று, முயன்று என்னை அடைவதற்கு விரும்பு. - 12:9
முயல்வதற்கும் சக்தி இல்லையாயின் எனக்காகவே ஊழியம் செய்பவனாய் மாறு. எனக்காக ஊழியம் செய்பவனும் என்னை அடைவான். – 12:10
இதுவும் செய்ய உனக்குச் சக்தி இல்லை என்றால் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு என்னிடமே உன் சிந்தனைகளைச் செலுத்தி இலயத்திரு. செயல்களையும் பயன்களையும் எனக்கு அர்ப்பணி. – 12:11
முயல்வதைக் (அப்பியாசத்தைக்) காட்டிலும் ஞானம் சிறந்ததாம்; ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்ததாம்; தியானத்தைக் காட்டிலும் என்னிடம் சரணடைவதனால் அதிவிரைவில் மனம் அமைதியடைகிறது. – 12:12
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments