top of page
Search

18/01/2025, பகவத்கீதை, பகுதி 158

  • mathvan
  • Jan 18
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

எல்லாரும் விரும்பும் ஆகாரம், யக்ஞம், தவம், தானமும் (என்னும் நான்கும்) மூவகைப்படும். அவற்றை விரித்து உரைக்கிறேன். கேள். – 17:7


வாழ்நாளை நீட்டிப்பதும், நல்ல எண்ணங்களைத் தூண்டுவதும், சக்தி, நோயின்மை, இன்பம், நல்லவையில் நாட்டம் உள்ளிட்டவைகளை வளர்ப்பனவும், சுவையுடன் இருப்பனவும், பசையுடனும், நீண்ட நாள் கெடாமல் இருப்பனவும், மனத்திற்கு இன்பம் அளிப்பனவும் ஆன உணவுகள் சாத்விகர்களுக்கு ஏற்புடையனவாக இருக்கும். – 17:8


(உப்பை மிகவும் சிறிய அளவில்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். உப்பு தன்மட்டில் ஒரு உணவு அல்ல என்பதனையும் கருத்தில் கொள்க.)


கசப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு (காரம்), உவர்ப்பு, எரிப்பு உள்ளிட்ட குணங்களை (அதிக அளவில்) உடையனவும், துன்பம், துயர், பிணி உள்ளிட்டவைகளைத் தரும் உணவுகளை இராசச குணம் மேலோங்கியர் விரும்புவர். – 17:9


(உணவு என்பது உள்ளீடுகளின் குறியீடு. இவற்றில் மிக கவனம் தேவை. எனக்குப் பற்றில்லை என்பதனால் எவற்றையும் எப்படியும் எடுத்துக் கொள்வேன் என்றும் கூறுவதற்கு இயலாது.)


சமைத்து ஆறிப் போனதும், சுவையிழந்ததும், புளித்துப் போனதும், கெட்டுப் போனதும், மீச்சம் மீதியிருப்பதனையும், அசுத்தமாக இருப்பனவும் ஆன உணவுகளை தாமச குணம் மேலோங்கியிருக்கும் போது விரும்புவார்கள். – 17:10


(தாமச குணமானது மதியிழக்கச் செய்யும், தம் மேல் தமக்கே மரியாதையில்லாமல் நடந்து கொள்ளச் செய்யும்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்னும் தமிழ்ப் பழமொழிகள் உண்டு.

பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்றால் நாமும் அந்தப் பத்துப் பேரில் ஒருவர்தாம் என்னும் நிலை ஏற்படும். தலைமைக்கு அக்குணம் ஏற்புடையாதாக இருக்காது.

சாத்விகம் என்பது வேறு ஒன்றுமல்ல பற்றில்லாமலும் எந்தவிதப் பதற்றமும் இல்லாமலும் கடமைகளைச் செய்யும் குணம்.  

 

செயல்களைச் செய்யும் வழிமுறைகளை யக்ஞம் என்று பார்த்தோம்.)

 

கீதாச்சாரியன் தொடர்கிறார்:


செயல்களைச் செய்யும் வழிமுறைகளில் ஒரே எண்ணத்துடன் பயணிப்பதும், அதனால் விளையப் போகும் பயன்களில் கருத்தினைச் சிதறவிடாமல், மனத்தினை ஒருமைப்படுத்தி  அறிவுசார் நூல்களில் விதிக்கப்பட்டப்படிச் செய்யப்படும் யக்ஞம் சாத்விக யக்ஞமெனப்படும். – 17:11


பயனைமட்டும் குறிக்கோளாகக் கொண்டு, வெறும் ஆடம்பரத்திற்காகச் செய்யும் செயல்களின் வழிமுறைகள், அஃதாவது அந்த யக்ஞம், அர்ஜுனா, இராசச யக்ஞமெனப்படும் என்று அறி. – 17:12


அறிவுசார் நூல்களை அவமதித்து அவற்றில் சொல்லப்பட்ட விதிகளை மீறிச் செயல்களை அமைத்துக் கொள்வதும், பிறர்க்கு உணவிடாமலும், மனத்தில் உறுதியில்லாமலும், பிறர்க்குக் கொடுக்க வேண்டியனவற்றை கொடுக்காமலும், சிரத்தையில்லாமலும் செய்யப்படும் யக்ஞம் தாமச யக்ஞம் என்று கூறப்படும். – 17:13


திவிஜ (Divija) என்றால் இரு பிறப்பாளர்கள் என்று பொருள் சொல்கிறார்கள். அஃதாவது, தாயின் வயிற்றில் பிறப்பது ஒரு முறை என்றும், உபநயனம் என்னும் சடங்கு நிகழும் பொழுது இரண்டாம் முறை பிறக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். தற்காலத்தில், அவ்வாறு உபநயனம் செய்து கொண்டோர் “திவிஜ” என்று அழைக்கப்படுகின்றனர்.


இந்தத் திவிஜ (இரு பிறப்பாளர்கள்) என்னும் சொல் மிகவும் காலத்தால் பின்னர் தோன்றிய சொல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page