top of page
Search

18/08/2024, பகவத்கீதை, பகுதி 4

  • mathvan
  • Aug 18, 2024
  • 2 min read

Updated: Jan 13

அன்பிற்கினியவர்களுக்கு:

தோத்திர நூல்கள் மனப்பயிற்சியைத் தந்து செயல்களில் மூழ்கச் செய்யும்;

சாத்திர நூல்கள் தத்துவ விளக்கங்களை நல்கும்;


சூத்திர நூல்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதனைச் சுருக்கமாகத் தெரிவிக்கும் என்றும் பார்த்தோம்.


பகவத்கீதை சூத்திர வடிவில் அமைந்த சாத்திர நூல் என்று தோன்றுகிறது என்று பார்த்தோம். அஃதாவது தத்துவ சிந்தனைகளைத் தூண்டக் கூடிய நூல்.

இது நிற்க.


அன்மைக் காலத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russel 1872 - 1970) பெருமானார். இவர் ஆகச் சிறந்த கணித அறிஞர். அது மட்டுமல்ல சிறந்த தத்துவ அறிஞரும் ஆவார். 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினையும் (Nobel Price Laureate) பெற்றவர்.

இவரின் கருத்து என்னவென்றால் கடவுள் என்ற ஒருவன் இல்லை என்பதுதான். அதற்கு ஆதரவாக நான்கு பெரும் வாதங்களை எடுத்து வைத்து விவாதிக்கிறார். (காண்க Why I am not a Christian – Speech 1927).


அந்த நான்கு வாதங்களை விரித்தால் விரிந்து கொண்டே போகும். இருப்பினும், அவரின் முதல் வாதத்தைப் பார்ப்போம். அதற்குப் பெயர் முதல் காரண வாதம் (First Cause Argument).


அஃதாவது, சுருக்கமாக, காரணமின்றி காரியம் இல்லை என்பதுதான் அடிப்படை. நம்மைப் படைத்தவன் ஆண்டவன் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை.


அனைத்தையும் ஆண்டவன் படைத்தான் என்றால் அந்த ஆண்டவன் உருவாகக் காரணமாக இருந்தவர் யார் என்ற கேள்வியை எழுப்பினார்.


இது நிற்க. நாம் வேறு வகையினில் மிக மிகச் சுருக்கமாகச் சிந்திக்கலாம். ஒரு பொருள் என்றால் அதற்கு ஓர் அறுதியிட்ட வடிவம் (shape), நிறை (weight) போன்றன இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே.


மேலும் ஒவ்வொரு பொருளிற்கும் ஓர் ஆதாரமான வேறொரு பொருள் தேவை. நாம் அமர்ந்திருந்தால் நமக்கு ஆதாரம் நாற்காலி. அந்த நாற்காலிக்கு அதன் கீழ் இருக்கும் பூமி ஆதாரம்; அந்த பூமிக்கு ஆதாரம் ஆகாயம்.


அப்பொழுது, ஆகாயத்திற்கு?


காயம் என்றால் உடல். காயம் என்றால் கண்ணால் காணக் கூடியது; புலன்களால் உணரக் கூடியது.


ஆகாயம் (பெரிய உடல்?) என்பது கண்ணால் காண இயலாது; புலன்களால் உணர முடியாதது.


இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. ஆகாயம் ஒரு பொருளா? அல்லவா?

ஆகாயமானது இந்தப் பூமிப் பந்தைத் தாங்கிக் கொண்டு ஆதாரமாக உள்ளது என்றால் அஃது ஒரு பொருள் என்றாகிறது!


பொருள் என்றால் புலன்களால் அறியக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் அதனைப் புலன்களால் உணர முடியுமா என்றால் அதுதான் இல்லை. எனவே அதனைப் பொருள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா என்றால் அதுவும் இயலாது.


இப்படித்தான் தத்துவியலாளர்கள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து இறுதியில் “முடிவிலி” என்ற இடத்திற்கு வருகிறார்கள்.


முடிவிலி என்றால் எந்த முடிவும் இல்லை! இதனைத்தான் “ஆதிமூலம்” என்று முடித்து வைக்கிறார்கள்.


இன்னும் ஒரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம். எண்களை 1, 10, 100, 1000 என்று கூட்டிக் கொண்டே போனால் இறுதியில் முடிவிலி என்கிறார்கள்.


அதே போன்று, எண்களைக் குறைத்துக் கொண்டே போனாலும் இறுதியில் முடிவிலி என்கிறார்கள். அஃதாவது அதன் மதிப்பை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்கிறார்கள்.


முடிவிலி என்பதனை ஏதும் இல்லை என்று ஒரு சாராரும், எல்லாம் அஃதே என்று ஒரு சாராரும் சொல்கிறார்கள்.


இல்லை என்பவர்கள் நாத்திகர்களாகிறார்கள் (நிரீஸ்வர வாதம்); ஏதோ ஒன்று இருக்கிறது என்பவர்கள் ஆத்திகர்கள் (ஈஸ்வர வாதம்) என்று அறியப்படுகிறார்கள்.


அந்த வகையில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russel) அனைத்திற்கும் காரணம் இறைவன் என்றால் அந்த இறைவனுக்குக் காரணப் பொருள் என்னவென்று கேட்டார். காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்கிறீர்களே? இறைவனுக்கு மேலே ஒருவரும் இல்லை. எனவே, அவனுக்குக் காரணப் பொருள் இல்லை. எனவே இறைவன் என்ற ஒருவன் இல்லை. என்ன சரிதானே? என்று தம் வாதத்தை எடுத்து வைக்கிறார். இஃது ஒரு தத்துவ விசாரணை (Philosophical inquisition).


மெய்யியலில் தத்துவ விசாரனை எது என்று கேட்டால் அழியாப் பொருள்களின் தேடல்தான்.


நம்மைப் படைத்தவர்கள் நம் பெற்றோர்கள்; அவர்களைப் படைத்தவர்கள் முன்னோர்கள்; முன்னோர்களைப் படைத்தவர்கள் மூதாதையர்கள்; இப்படியே சென்று கொண்டிருந்தால் ஆதியில் ஒரு தம்பதியினர் இருந்திருப்பர் அல்லவா? அவர்களைப் படைத்தவர்கள் யார்? இந்த வினாவிற்கும் விடையில்லை.


இந்தத் தத்துவ விசாரணையை நம் நாட்டில் ஆதிசங்கரர் பெருமான், ராமானுஜர் பெருமான், மத்துவாச்சாரியார் போன்றவர்களும், சைவ சமய தத்துவ ஆசான்களாகிய மெய்கண்ட தேவர் பெருமான் முதலானவர்கள் நிகழ்த்தினார்கள்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page