18/12/2024, பகவத்கீதை, பகுதி 124
- mathvan
- Dec 18, 2024
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பகவான் தொடர்கிறான்:
எனக்குப் பிரியமானவன் யார் தெரியுமா?
எவ்வுயிர்களிடமும் பகைமை இல்லாதவனும், அன்புடன் பழகுபவனும், கருணை உடையவனும், நான் எனது என்னும் அகங்காரங்கள் அற்றவனும், இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிப்பவனும், பொறுமையுடையவனும், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனும், மனத்தைக் கட்டுப்படுத்தியவனும், மன உறுதியுடன் இருப்பவனும், என் மேல் மனத்தையும் புத்தியையும் அர்பணம் செய்தவனாய் என் பக்தனாக உள்ளவன் எவனோ அவனே எனக்குப் பிடித்தமானவன்! – 12:13-14
(இன்னும் பட்டியல் முடியவில்லை! இந்த அத்தியாயத்தின் இறுதிவரை இந்தப் பட்டியல் நீள்கிறது!)
மேலும், எவனிடமிருந்து உலகம் துன்புறுவதில்லையோ, எவன் உலகத்தினால் துன்பம் அடைவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, சினம், அச்சம், மனக் கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ அவன் எனக்குப் பிரியமானவன். – 12:15
எதனையும் வேண்டாதவனாய், தூயோனாய், திறமையுடையவனாய், பற்றற்று இருப்பவனாய், சலனமற்றவனாய், எல்லாச் செயல்களையும் துறந்தவனாய் என்னிடமே பக்தியைச் செலுத்துபவனாய் எவன் இருக்கிறானோ அவனே எனக்கினியவன். – 12:16
எவன் மகிழ்ச்சிக்கு ஏங்காமலும், துன்பத்தில் துவளாமலும் இல்லையோ, எவன் தமக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக ஏக்கம் கொள்ளாதவனோ, நல் வினையோ, தீ வினையோ இந்த இருமைச் செயல்களைத் துறந்தவனாய் என்னிடம் பக்தியை வைத்தவன் எவனோ அவன் எனக்கு நெருக்கமானவன். – 12:17
பகைவனிடமும், நண்பனிடமும் சமமாகப் பழகுபவனோ, மான அவமானங்களுக்கு ஆட்படாதவனோ, குளிரிலும் வெம்மையிலும், சுகத்திலும், துக்கத்திலும் சமமான மன நிலையெய்தியவனாய், இகழ்ச்சி புகழ்ச்சி என்னும் இரண்டனையும் ஒன்றாகக் கொள்பவனும் எந்த நிலையையும் ஏற்றுக் கொண்டு அமைதியாகவும் எது கிடைக்கின்றதோ அதனைக் கொண்டு மகிழ்ச்சி அடைபவனும், திட சித்தத்துடன் என்னிடம் பக்தி செலுத்தும் மனிதன் எவனோ அவன் எனக்குப் பிரியமானவன். – 12:18-19
அடுத்து முடிவுரையாக ஒரு பாடலைச் சொல்கிறார்.
எவர்கள் நான் இதுவரை சொன்ன தருமத்தினின்று வழுவாததும் அழியாததுமான வழியை நான் எவ்வாறு சொன்னேனோ அவ்வாறே அவற்றின் வழியில் சிரத்தையுடன் பயணித்து என்னையே உயர் பொருளாய் கொள்பவர்களான என் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். – 12:20
என்று சொல்லி இந்த பக்தி யோகம் என்னும் பன்னிரண்டாம் அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.
பன்னிரண்டாம் அத்தியாயம் முற்றிற்று.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments