19/01/2025, பகவத்கீதை, பகுதி 159
- mathvan
- Jan 19
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பேட்ரிக் ஆலிவெல்லே (Patrick Olivelle) என்பார் இந்திய இலக்கியம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட துறைகளை ஆராய்பவர் (Indologist). இவர் இலங்கையில் பிறந்து அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார். இவர் பல சமஸ்கிருத இலக்கியங்களை ஆராய்ந்து வருபவர்.
இவர் என்ன சொல்கிறார் என்றால் திவிஜ என்னும் சொல் பின்னர் தோன்றியது என்றும், மேலும் அந்தச் சொல்லுக்கு “இருபிறப்பாளர்கள்” என்னும் கருத்து, காலத்தால் மிகவும் பின்னர் தோன்றியிருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்.
கீதையில் பிராமணர் என்னும் சொல்லை, வர்ணங்களின் ஒரு பிரிவைக் குறிக்க பல பாடல்களில் சுட்டப்பட்டுள்ளன.
சரி, ஏன் இந்த இடையீடு என்றால் திவிஜ என்னும் சொல் 17:14 ஆம் பாடலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு அறிஞர் பெருமக்கள் பிராமணர்கள் அல்லது இருபிறப்பாளர்கள் என்று பொருள் சொல்கிறார்கள்.
பாடலைப் பார்ப்போம்:
தேவ-திவிஜ-குரு-பிரஜ்ஞ- பூஜனம் ஷௌச்சம் ஆர்ஜவம்
பிரம்மச்சரியம் அஹிம்சா ச ஷரீரம் தப உச்யதே. – 17:14
தேவ = தேவர்கள்; திவிஜ = திவிஜர்கள் / பிராமணர்கள்; குரு = ஆசிரியப் பெருமக்கள்; பிரஜ்ஞ = அறிவிற்சிறந்தோர்; ஷௌச்சம் = தூய்மை; ஆர்ஜவம் = எளிமை; பிரம்மச்சரியம் = உடல் தூய்மை; அஹிம்சா ச = கொல்லாமையும்; ஷரீரம் தப உச்யதே = உடலால் இயற்றப்படும் தவம் என்று கூறப்படுகிறது,
தேவர்கள், திவிஜர்கள் (பிராமணர்கள்), ஆசிரியப் பெருமக்கள், அறிவிற்சிறந்தோர் உள்ளிட்டவர்களின்பால் பணிவும், மேலும் உடல் தூய்மை, கொல்லாமை உள்ளிட்ட பண்புகளைக் கொண்டு இயங்குவது உடலினால் இயற்றும் தவம் என்று கூறப்படுகிறது – 17:14
(இங்கே, "பிராமணர்கள்" என்பது பிறப்பால் தங்களை பிராமணர்களாகக் கருதுபவர்களைக் குறிக்கவில்லை. மாறாகப் பாடலில் விவரிக்கப்பட்டுள்ளபடி சாத்விகக் குணங்களைக் கொண்டவர்களைக் குறிக்கிறது என்று சுவாமி முகுந்தானந்தா தமது உரையில் தெரிவிக்கின்றார்.)
கடுஞ்சொல் தவிர்ப்பதும், உண்மையை உரைப்பதும், இதயத்திற்கு இதம் அளிக்கக் கூடியதுமாகிய நாளும் நன்மையை நவிலக்கூடிய சொல்களைப் பேசுவதும், மேலும் அறிவு சார் நூல்களை என்றும் எடுத்து உரைத்துக் கொண்டிருப்பதும் வாக்குத் தவமெனப்படும். – 17:15
மனத்தில் தெளிவு, அன்புடைமை, அமைதி, தன்னடக்கம், எண்ணத்தில் தூய்மை உள்ளிட்டவை மனத்தால் இயற்றப்படும் தவமெனப்படும். – 17:16
(தமக்கு மட்டுமே) பயன் கருதாது, மனத்தில் உறுதியுடனும், உயர்ந்த சிரத்தையுடனும் மேற்கூறிய (பாடல்கள் 17:14. 17:15, 17:16) மனம், மொழி, மெய்களால் செய்யப்படும் தவம் சாத்விகத் தவமெனப்படும். – 17:17
(அஃதாவது, மனம், மொழி, மெய்களில் தூய்மையாக இருப்பது சாத்விகத் தவமென்கிறார்.)
பயன் கருதிப் பிறரைப் புகழ்ந்து பேசி வரவேற்பதும் (மொழி), தமக்கு இன்ன பயன்கள் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடனும் செயல்களைச் செய்வதும் (மெய்), மனத்தில் அத்தகைய எண்ணங்களையே நாளும் எண்ணுவதுமாகிய (மனம்) செயல்கள் இராசசத் தவமெனப்படும். இவை நிலையற்றதும், உறுதியற்றதுமாகும். – 17:18
வெறும் முரட்டுப் பிடிவாதத்தினால் தம்மையும் வருத்திக் கொண்டு பிறர்க்கும் துன்பத்தை விளைவிக்கும் செயல்கள் தாமசத் தவமெனப்படும். – 17:19
(முக்குணங்களின் வழி, உணவுகளைப் (ஆகாரம்) பிரித்து 17:8, 17:9, 17:10 பாடல்களிலும்; செயல்களைச் செய்யும் வழி முறைகளையும் (யக்ஞம்) அவ்வாறே 17:11, 17:12, 17:13 பாடல்களிலும், செயல்களை 17:17, 17:18. 17:19 பாடல்களில் பகுத்துச் சொன்னார். பாடல்கள் 17:20. 17:21, 17:22 மூலம் தானத்தையும் பிரித்துச் சொல்லுவார்.)
தாம் பிறர்க்குக் கொடுப்பது கடமையென்று அறிந்து கைம்மாறு கருதாமல், (எந்த விதத் தூண்டுதலும் இல்லாமலே) தக்கத் தருணத்தில், தக்க இடத்தில், உரியவர்களுக்குக் கொடுப்பது சாத்விகத் தானமெனப்படும். – 17:20
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Komentar