19/08/2024, பகவத்கீதை, பகுதி 5
- mathvan
- Aug 19, 2024
- 2 min read
Updated: Jan 13
அன்பிற்கினியவர்களுக்கு:
மத்துவாச்சாரியார் பெருமான் என்ன முடிவிற்கு வந்தார் என்றால் உறுதிப் பொருள்கள் இரண்டு. அவை ஜீவாத்மா (உயிர்கள்), பரமாத்மா (இறை) என்றார். அவை இரண்டும் வேறு, வேறு என்றார். அதனைத் துவைதம் என்று வழங்குகிறார்கள்.
ஆதிசங்கரர் பெருமானும் இரண்டு உண்டு என்றார். அவை ஜீவாத்மா, பரமாத்மா என்பதனையும் சொன்னார். ஆனால் அவை இரண்டல்ல (இரண்டன்மை) என்றார். பெரிய ஒன்றின் பகுதிதான் உயிர்கள் என்கிறார். அதனை அத்துவைதம் என்று வழங்குகிறார்கள்.
ராமானுஜர் பெருமான் மேற்கண்ட இரு கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு அந்தத் தத்துவ விளக்கங்களில் ஏற்படும் இடர்களைக் களைய விசேட அத்துவைதம் என்ற நிலைக்கு வருகிறார். அதனைச் சிறப்பு இரண்டன்மை என்கிறார். சில பொழுது வேறு வேறாகவும் சில பொழுது இரண்டல்லாமல் கலந்தும் இருக்கும் என்றார். இதனை விசிஷ்டாத்துவைதம் என்று வழங்குகிறார்கள்.
நமக்கு முன்னும் இறைவன் இருந்துள்ளான்; நமக்கு பின்பும் இறைவன் இருப்பான். எனவே நாமும் (உயிர்களும்) இறைவனும் வேறு வேறு என்பது துவைதம்.
இறைவன் நம்முடனே இருப்பவன் என்பது அத்துவைதம்.
மேற்கண்ட இரண்டையும் இணைப்பது விசிஷ்டாத்துவைதம்.
இந்த மூன்று கருத்துகளையும் அன்மைக் காலத்தில் நம்முடன் வாழ்ந்து
மறைந்த வேதாத்ரி மகரிஷி அவர்கள் பின் வருமாறு விளக்குகிறார்.
உணவும் நாமும் வேறு வேறாக இருப்பது துவைதம்;
வயிற்றுக்குள் உணவு இருக்கும் நிலை விசிட்டாத்துவதம்;
உணவு நம்முடன் இரண்டறக் கலந்து சத்தாக மாறி நிற்பது அத்துவைதம் என்கிறார்.
எல்லாத் தத்துவங்களிலும் ஒருவன் உள்ளான். அவனே படைப்பின் தலைவன் என்பது அடிநாதமாக இருக்கிறது. அப்படி இருக்க இயலுமா என்று சிந்தித்தார்கள் தமிழ் சைவ சமய சித்தாந்திகளான சந்தானக் குரவர்கள்.
அவர்களின் முடிவுகள் வியக்கதக்க வகையில் இருக்கின்றன. என்றும் உள்ள உள்பொருள் மூன்று என்றும் அவை பதி, பசு, பாசம் என்கின்றனர்.
பதி என்றால் இறைவன்; பசு என்றால் எண்ணற்ற உயிர்கள்; பாசம் ஆணவம் அல்லது பற்று என்கிறார்கள்.
இந்த மூன்றும் அநாதி காலம் தொட்டே இருக்கின்றன என்று சொல்லி அமைதிப் படுத்துகின்றனர்.
அஃதாவது அவற்றிற்கு தோற்றமில்லை. எனவே அவற்றிற்கு மறைவும் இல்லை என்கின்றனர்.
இப்படிப் பார்த்தால் உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்கின்றனர்!
ஆனால், உயிர்களை நெறிப்படுத்துபவன் இறைவன் என்கிறார்கள். இயற்கை என்றாலும் பொருந்தும்.
திருமூலப் பெருமான் திருமந்திரத்தில்:
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – பாடல் 115, முதல் தந்திரம், உபதேசம்
நம் கையில் ஐந்து விரல்கள் உள்ளன. அவை: சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல், ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல்.
என்ன இதுகூடத் தெரியாத என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுமை.
கட்டை விரலை அசைக்காமல் கட்டைப் போல வைத்துக் கொண்டால் மற்ற நான்கு விரல்களும் என்ன முயற்சித்தாலும் கட்டை விரலினைத் தொடக்கூட முடியாது!
என்ன முயற்சி செய்து பார்த்தீர்களா? முடியவில்லை அல்லவா?
எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? நாம் பொதுவாகவே புதுச் செய்திகளை அறிய ஆர்வமுள்ளவர்கள்! Human beings are generally inquisitive!
கட்டை என்று அழைக்கிறோமே அந்த விரலைக் கொண்டே மற்ற விரல்களை அனுகலாம். இப்படிப் பார்க்கும்போது, கட்டை விரலை கட்டை விரல் என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது.
இதுபோன்று பதி என்பவன் நினைக்காமல் பசு, பாசம் பயனுள்ள இயக்கத்திற்கு வாரா! இதனைத்தான் திருமூலப் பெருமான்
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே என்கிறார்.
என்ன பகவத்கீதைக்குள் நுழைவோமா இல்லையா என்று கேட்கிறீர்களா?
இன்னும் பல அடிப்படைச் செய்திகளைப் பார்த்துவிட்டுதான் நுழைய வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments