19/10/2024, பகவத்கீதை, பகுதி 65
- mathvan
- Oct 19, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
செயல்களைச் செய் என்று சொல்லிக் கொண்டு வந்தவர், செயலின்மையும் செயல்தான் என்பதனைத் தெளிவாக்குகிறார். செயலின்மையும் பற்றற்றுதான் இருக்க வேண்டும் என்றார்.
பற்றற்று இருந்தால் என்ன நிகழும் என்றால் முதலில் மனத்தில் அமைதி நிலவும். அவன் முழுமையடைகிறான். அஃதாவது, தன்னிறைவு எய்துகிறான். மேலும் இயற்கையோடு இயைந்து என்றும் அவன் இயற்கையின் அங்கமாகவே ஆகிவிடுகிறான் என்கிறார்.
கடமைகளை ஒரு வேள்வி போலச் செய்ய வேண்டும் என்றார் பாடல் 4:23 இல்.
கடமைகளே வேள்வி என்னும் கருத்தைப் பரமாத்மா இனி வரும் பாடல்களில் விளக்குகிறார்.
வேள்வி என்றால் நெய்யிட்டு தீ வளர்த்து அதனில் தேவர்களுக்கு அவியாக, அஃதாவது உணவாகப் பல விதப் பொருள்களையிட்டு செய்வது என்று நினைக்கிறோம். அதுவல்ல இல்லறத்தானுக்கு வேள்வி!
பிரம்மம் என்றால் என்றும் நிலைத்து நிற்பது. அனைத்து ஞானங்களாலும் நிறைந்து இருக்கும் பொருள் என்று சொல்கிறார்கள். அதனை இறை என்கிறார்கள். இயற்கை என்றாலும் சாலப் பொருந்தும். இயற்கையும் நிடித்து நிலைப்பது; இயற்கை விதிகளும் மாறாமல் இருப்பன.
அடுத்து வரும் பாடலுக்கு மகாகவி பாரதியாரின் உரையைப் பார்ப்போம்.
பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானம் எய்தினோன். அவன் பிரம்மத்தை அடைவான். – 4:24
பிரம்மம் என்ற சொல்லுக்கு இயற்கை என்று பொருள் கொண்டால்:
இயற்கையோடு இயைந்து செயல்களை ஒரு வேள்வி போலச் செய்து அதனை இயற்கைக்கே அர்ப்பணிப்பவன் இயற்கையாகவே மாறிவிடுகிறான் என்று பொருள்படுகிறது. இதுதான் இயற்கையும்கூட.
வில்லி பாரதத்தில் கர்ணனுக்குப் பரமாத்மாவின் விசுவரூப காட்சி. இந்தப் பகுதியை நாம் திருக்குறளில் பார்த்துள்ளோம். காண்க https://foxly.link/வில்லிபாரதம்_21072022. மீள்பார்வைக்காக:
ஞானத்தைப் பெற பலரும் பல வழியில் முயல்கிறார்கள். சிலர் நெருப்பை மூட்டி யாகங்கள் செய்கிறார்கள்; சிலர் கங்கை போன்ற பல புண்ணிய நதிகளில் நீராடுகிறார்கள்; சிலர் மூச்சுக் காற்றை அடக்கித் தவம் புரிகிறார்கள்; சிலர் மலர்கள் தூவி பூசைகள் பல செய்கிறார்கள்; சிலர் மனதுக்குள்ளேயே சதா சர்வ காலமும் நினைந்து கொண்டு இருக்கிறார்கள்; சிலர் வாழ்க்கை போகங்களையெல்லாம் விட்டு உடம்பை பலவாறு வருத்திக் கொள்கிறார்கள்; இப்படி செய்யவொண்ணாத் தவங்களை இயற்றுகிறார்கள்.
இதெல்லாம் எதற்காக? அந்த ஒரு நொடி விசுவருபத்திற்காக!
“அவ்வாறு பல தவங்கள் புரிந்தவர்கள் பெற்றார்களோ என்னவோ எனக்குத் தெரியாது கண்ணா! யாருக்கும் எட்டா அந்தப் பெரும்பேறு இந்த உயிர் இருக்கும் போதே அவ்வாறு எல்லாம் வருந்தாமல் கிடைக்கப் பெற்றேனே” என்கிறான் கர்ணன்.
“அருந் தழல் மா மகம் புரிந்தும், கடவுள்-கங்கை ஆதியாம் புனல் படிந்தும், அனில யோகத்து இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும், எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி, அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணாப் பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப் பெரும் பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.” --- பாடல் 246, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
இந்தப் பாடலின் மூலம் வேள்விகளைப் பல வகையினில் நிகழ்த்துகிறார்கள் என்பது புரிகிறது.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments