20/08/2024, பகவத்கீதை, பகுதி 6
- mathvan
- Aug 20, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
ஆதிசங்கரப் பெருமான், மத்துவாச்சாரியார், இராமானுஜப் பெருமான் அவர் அவர் கொள்கைகளில் நின்று பகவத்கீதைக்கு உரை கண்டுள்ளார்கள்.
இந்த உரைகளுக்கு அன்மைக் காலத்தில் அறிஞர் பெருமக்கள் பலர் விளக்க உரைகளையும் விரிவுரைகளையும் செய்துள்ளார்கள்.
அந்த உரைகளில் பல் வேறு கருத்துகள் அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன!
மாபெரும் அருளாளர்களின் வாக்குகளில் பொய்மை இருக்காது என்ற ஒன்றினை நினைவில் கொண்டே நாம் பொருள் காண வேண்டும்.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். – ஒளவையார், நல்வழி – 40
ஒளவைப் பெருந்தகை சொன்னதை நினைவில் நிறுத்துவோம்.
திருவள்ளுவத் தேவரின் திருக்குறளும், திருநான்மறையின் முடிவும், திருநாவுக்கரசப் பெருமான், திருஞானசம்பந்தர், சுந்தர மூர்த்தி பெருமான் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பெருமான் அருளிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ஒன்றே என்று உணர்க என்கிறார்.
உணர்தல் அதுதான் மிக முக்கியம். உணர்தலைக் கொண்டே சிந்திக்கத் தொடங்குவோம்.
ஆதிசங்கரப் பெருமானின் உரைதான் முதன்முதல் உரையாக நமக்கு கிடைத்துள்ளது. அவரின் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. அதுவரை பகவத்கீதை தனிப்பெரும் நூலாக உருப்பெறவில்லை என்கிறார்கள்.
நம் முன்னாள் குடியரசுத் தலைவர் (President) சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (S. Radhakrishnan) அவர்கள் சொல்வது என்னவென்றால் ஆதிசங்கரப் பெருமான் உரைக்கும் முன்னதாக சில உரைகள் இருந்திருக்கலாம் ஆனால் அவை நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம் என்கிறார். இந்த ஊகத்திற்கு இந்நாள்வரை எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை.
இந்தக் கருத்தை விவேகானந்தப் பெருமானும் தெரிவிக்கிறார்.
சமஸ்கிருத மொழியில் இருந்த கீதையை முதன்முதலில் மராத்தியில் மொழி பெயர்த்தவர் ஞானேஷ்வர் மகராஜ் (1275 – 1296) என்கிறார்கள். அவரின் மொழி பெயர்ப்பிற்கு இட்ட தலைப்பு “ஞானேஸ்வரி”. இந்த உரைக்குப் பின்புதான் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் கீதை மொழி பெயர்க்கப்பட்டதாம்.
மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் கீதையை மொழி பெயர்த்துள்ளார். இந்த உரை ஆங்கிலத்திலும், தமிழ் முதலான பல இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
மகாத்மாவின் புரிதலில் கீதை என்பது வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும் ஒரு நூல் அல்ல என்கிறார். அஃதாவது புனைவு. வெளிப்பார்வைக்கு அஃது ஒரு வரலாற்று நிகழ்வினைப் போலத் தோன்றினாலும், அது மனிதர்களின் உள்ளங்களில் இடைவிடாது நிகழும் போராட்டத்தையே விவரிக்கிறது என்கிறார். மேலும் பல தகல்களைத் தெரிவிக்கிறார். (பக்கம் 5-6, பகவத்கீதை மகாத்மா காந்தி எழுதியது, தமிழில் ஜெயமணி சுப்பிரமணியம், ஸ்ரீ ராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் பதிப்பு 1964)
மகாகவி பாரதியும் காந்தியாரின் முடிவிற்குதான் வருகிறார்.அவர் தம் பகவத்கீதை உரையின் முன்னுரையில்: “ … துரியோதனாதியர் காமக் குரோதங்கள், அர்ஜுனன் ஜீவாத்மா, ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவர்களுக்குப் பகவத்கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.” (பக்கம் 20, பாரதியாரின் பகவத்கீதை, வானவில் புத்தகாலயம், புதிய பதிப்பு 2013)
இலக்கியங்களில் உயர்வுப் புகழ்ச்சியும், மிகக் கீழான இகழ்ச்சியும் சித்தரிக்கப்படும். இது ஒரு விதமான உத்தி. எனவே இந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதே இது பகுத்தறிவிற்கு ஒத்து வரவில்லையே என்றெல்லாம் கேள்விகள் கேட்டால் பயனில்லை.
நடிகர் சூர்யா திரைப்படத்தில் “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டுடா” என்றால் அஃது உயர்வு நவிற்சி அணி.
நடிகர்கள் ஒரு கையினால் தொடருந்தினைத் (Rail) தடுத்து நிறுத்துகிறார்கள். இந்தக் காட்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்துப் பார்க்கும் நம் வழித்தோன்றல்கள் “ஓஒ அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள். சிறப்பே சிறப்பு. முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல, அது மட்டுமல்ல் பெரும் பலசாலிகள்” என்று ஒரு முடிவிற்கு வருவார்கள் என்றால்?
ஒரு பனை மரத்தைப் பார்த்து ஒரு கவிஞர் “வானுற ஓங்கி வளம் பெற உயர்ந்தது” என்றால் எங்கேயாவது பனை மரம் வானுயர வளர முடியுமா என்று வினா எழுப்பினால்?
இப்படிப் புனையப்பட்ட காட்சிகள் எல்லாம் நாம் அந்த உணர்ச்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அவ்வளவுதான்!
காட்சிகளைத் தவிர்த்துக் கருத்துகளை உணர வேண்டும். இது இலக்கியங்களைப் படிப்பவர்களுக்கான முதல் குறிப்பு.
இலக்கியங்கள் இரு முனையிலும் கூரான கத்தி. கவனமுடன் அனுக வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments