20/10/2024, பகவத்கீதை, பகுதி 66
- mathvan
- Oct 20, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பரமாத்மா தொடர்கிறார்:
வேள்விகளைப் பல வகையாகச் செய்யலாம். சிலர் யாகத்தீயில் உணவிட்டுத் தேவர்களுக்காக வேள்விகள் செய்கிறார்கள். வேறு சிலர் தங்கள் செயல்களால் ஈட்டிய பொருள்களையே அவியாக இட்டு வேள்விகளைச் செய்கிறார்கள். – 4:25
இன்னும் சிலர் தங்கள் செவி, சப்தம் உள்ளிட்ட புலன் நுகர்ச்சிகளை அவியாக இட்டு வேள்விகள் செய்கிறார்கள். – 4:26
மேலும் சிலர் தங்கள் அறிவிற்கு எட்டியபடி இந்திரியங்கள் அனைத்தையும் கட்டி உயிரினையும் வதைக்கும்விதமாக வேள்விகள் நடாத்துகிறார்கள். – 4:27
இன்னும் சிலர் தானங்கள் செய்கிறார்கள், பல் வேறு மகாவிரதங்கள் செய்கிறார்கள், இன்னும் பலர் யோக முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். – 4:28
“ஸம்சிதவ்ரதாஹா” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால் மகாவிரதங்கள் என்று பொருள். அவையாவன: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிரம்மச்சரியம், ஏலாமை.
ஏலாமை என்றால் எதனையும் பிறரிடம் இருந்து ஏற்றுக்கொள்ளாமை.
இன்னும் சிலர் மூச்சுக் காற்றைக்கட்டி வேள்விகள் செய்கிறார்கள். – 4:29
வேறு சிலர் வயிற்றைக் கட்டி உண்டியை மறுத்து மூச்சினை அடக்கி யோகத்தில் ஈடுபடுகிறார்கள். – 4:30
இவ்வாறு பல விதத்தினில் பல முயற்சிகளைச் செய்கிறார்கள். குருகுலத்தில் உதித்தவனே, நன்கு கவனி. இவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு காரியத்தினைச் செய்கிறார்கள். அந்தச் செயலுக்குப் போக மீதம் இருப்பதனைத் தனக்காக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களும் ஒருவாறு அமைதியை அடைவார்கள். ஆனால், எதுவும் செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த உலகே வீண். 4:31
இப்படிப் பல வகையான யாகங்கள் முன்னரே விரிக்கப் பட்டுள்ளன. இவை அனைத்துமே செயல்கள்தாம் அடிப்படை. (ஆனால், இந்தச் செயல்களில் பற்று இருந்தால் பயனில்லை.) இதனை அறிந்து இவற்றில் இருந்து விடுபடுவாய். – 4:32
நம்மாளு: அர்ஜுனா இல்லறத்தில் இருக்கும் நீ செய்ய வேண்டியது உன்னுடைய கடமைகள் மட்டும்தாம். இதனைக் கவனத்தில் கொள். மயில் ஆடுகிறது; குயில் கூவுகிறது; அதோ அவர் அந்த யாகம் செய்கிறார்; இதோ இந்த முனிவர் இந்தத் தவம் செய்கிறார் என்றெல்லாம் ஓடிக்கொண்டு இருக்காதே என்று சொல்கிறார் போலும்!
தன்னறம் என்னவென்று அறிந்து செயலாற்று என்பதனைப் பாடல் 3:35 இல் ஏற்கெனவே சொல்லியுள்ளார்.
பரமாத்மா தொடர்கிறார்:
பார்த்தா (அர்ஜுனா) இவ்வாறு பல விதமாகச் செய்யும் வேள்விகளைக் காட்டிலும் உன்னுடைய அறிவின் தெளிவில் உள்ள ஞானத்தைக் கொண்டு உன் கடமைகள் என்னும் வேள்வியினைச் செய்வாயாக. அதுவே சிறந்தது. . உன் செயல்களாலேயே எல்லாம் பூர்த்தியடைகின்றன. – 4:33
பணிவாலும், உன் அறிவு மிகுந்த கேள்விகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் இந்த ஞானத்தை அறிந்து கொள்வாய். உனக்கு மெய்ப்பொருள் கண்ட சான்றோர்கள் துணை நிற்பார்கள். – 4:34
பாண்டவா, இந்த ஞானத்தைப் பெற்றால் உன்னில் மயக்கம் இருக்காது. எல்லா உயிர்களையும் உன்னில் காண்பாய். அவற்றை என்னிலும் காண்பாய். – 4:35
பாவங்களைச் செய்து விடுவேனோ என்று பதறுகிறாய். பாவிகளுள் எல்லாம் பெரிய பாவியாகி விடுவேனோ என்றும் நினைக்கிறாய். அந்த எண்ணக் கடலை இந்த அறிவு என்னும் படகிலேறி கடப்பாயாக. – 4:36
தீயானது அனைத்தையும் சாம்பலாக்கும்; அதனைப் போல இந்த ஞானத் தீ உன் மயக்கங்களைச் சாம்பலாக்கும். – 4:37
ஞானத்தைப் போன்று தூய்மையாக்கும் பொருள் வேறு ஏதும் இல்லை. பற்றில்லாமல் செயல்களைச் செய்யும் கர்ம யோகத்தைக் கடைபிடித்து வந்தால் அது நாளடைவில் உன் இயல்பாகவே மாறிவிடும். – 4:38
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments