21/09/2024, பகவத்கீதை, பகுதி 37
- mathvan
- Sep 21, 2024
- 1 min read
Updated: Jan 13
அன்பிற்கினியவர்களுக்கு:
நாமெல்லாம் கருவிகள் என்பதுதான் சாங்கியம்!
இந்த அறிவினைக் கொண்டு பற்றற்றுப் பந்த பாசம் தவிர்த்துப் பயனித்தால் மனத்தில் அமைதி விளையும். இஃதே யோகம்.
மன அமைதியுடன் மறைவதுதான் முக்தி.
வானிலே தெய்வங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே, அந்தத் தேவர்கள் இருக்கட்டும் இல்லாமல் போகட்டும், ஆனால், அப்படி ஒரு இடம் இருந்து ஆங்கே சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அங்கே செல்வதற்கு வழி என்ன தெரியுமா?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். ---குறள் 50; இல்வாழ்க்கை
வாழும் வகையறிந்து விதித்தன செய்து விலக்கியன ஒழித்து இல்வாழ்வில் வாழ்பவன் மேலான தெய்வங்களாக போற்றப்படுவான்.
வானுலகிற்குப் போவதல்ல நம் பேராசான் சொல்வது!
இவ்வாறு வாழ்ந்தால் நம்மிடம் வானமே வசப்படும் என்கிறார். உனது எச்சங்கள் நீடித்த நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
தெய்வங்கள் என்பன இல்லை என்பதனால் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றால் நன்றாகவா இருக்கும்!
அல்லது, தெய்வங்கள் இருக்கின்றன. அதுவும் உனக்குச் சொல்லப்பட்ட தெய்வங்கள் அன்றி பிறிதொரு இறைவன் இருப்பதனை நம்பாதே! உன் தெய்வத்தை மட்டும் நம்பு. அதற்கு மட்டும் ஆராதனை செய்; அடுத்தவன் தெய்வத்தைச் சிறிதும் மதிக்காதே, அவமானப்படுத்து என்றெல்லாம் சொன்னால் அவன் தெளிவு பெற்றவனா?
நாம் மன அமைதியுடன் வாழ வானுலகு முதலானவை உருவகங்களே!
சரி, இந்தக் குறளை நம் பேராசான் எங்கு சொன்னார் என்றால் இல்லறவியலில், அதுவும் குறிப்பாக இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் முடிவுரையாகச் சொல்கிறார்.
சரி, பகவத்கீதை யாருக்குச் சொல்லப்பட்டது?
அர்ஜுனனுக்கு! இதுகூட தெரியாதா என்கிறீர்களா?
அர்ஜுனன் முற்றும் துறந்த துறவியா? அல்லது ஓய்வெடுக்கும் பருவத்தில் இருக்கும் வயதில் முதிர்ந்தவனா அல்லது இப்பொழுதுதான் கல்வி கற்கும் பருவத்தில் இருக்கும் இளையவனா? அல்லவே!
அவன் இல்லறவாழ்வில் இருப்பவன். எனவே, கீதை என்பது இல்லறத்தில் குழம்பிக் கொண்டிருப்பவனுக்குச் சொன்னது. இது பாதி விடைதான்! மீதியைப் பின்னர் பார்ப்போம்.
தற்கால வழக்கில் துறவிகள்தாம் தங்கள் கைகளில் கீதையை ஏந்திப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!
வாழ்க்கையின் படிநிலைகள் நான்கு: 1. கற்கும் பருவம்; 2. வாழும் பருவம்; 3. ஓய்வெடுக்கும் பருவம்; 4. நீங்கும் பருவம்.
இவற்றை, பிரம்மச்சரியம்; கிரகஸ்தம், சந்நியாசம்; வானப்பிரஸ்தம் என்று வழங்குகிறார்கள். இவற்றைத்தாம் நான்கு ஆச்சிரமங்கள் என்று வழங்குகிறார்கள்.
வர்ணங்கள் என்றால் தொழில் முறை பாகுபாடுகள் (Division of Labours) என்று பொருள்படும். இதனை நாம் முன்னரே சிந்தித்துள்ளோம். காண்க:
தொழில் முறை பாகுபாடுகள் அறிவினையும் உடல் உழைப்பினையும் கொண்டு பிரிக்கிறார்கள்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments