21/10/2024, பகவத்கீதை, பகுதி 67
- mathvan
- Oct 21, 2024
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
பாடல் 4:38 இல் பற்றற்றுச் செயல்களைச் செய்வது இயல்பாக வேண்டும் என்றார். மேலும் தொடர்கிறார்.
ஐம்புலன்களைத் தன் வயப்படுத்திப் பற்றற்றுச் செயல்களைச் செய்யும் அறிவே மேலானது என்னும் அறிவுடையவன் தன்னை உணர்கிறான். விரைவில் மன அமைதியையும் அடைகிறான். – 4:39
வள்ளுவர் பெருந்தகை அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் என்ன சொல்கிறார் என்றால்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியனவின் வகைகளை அறிந்து அதன்படி நாம் நம் செயல்களைச் செலுத்தி மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களும் அடங்கப் பெற்றால் அந்த அறிவின் செறிவினை அறிந்து அனைவர்க்கும் நன்மை விளையும். காண்க https://foxly.link/easythirukkural_123.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின். - 123; அடக்கமுடைமை
பரமாத்மா தொடர்கிறார்:
அறிவினில் நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தையே இயல்பாகக் கொண்டவன் அழிந்து போகிறான். சந்தேகப் பிராணிக்கு எந்த உலகமும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. – 4:40
இது நிற்க.
தெய்வப்பிறவி (1960) என்னும் திரைப்படத்தில் உடுமலை நாராயணகவி அவர்களின் வரிகளில்; தமிழ் இசைச் சித்தர் C.S.ஜெயராமன் அவர்களின் மயக்கும் குரலில்:
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் ...
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஓடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும் ...
மனிதனை விலங்காக்கிடும் ...
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் ...
சந்தேகம் என்பது மிகப் பெரிய பேய். அது பிடித்துவிட்டால் நம்மை நன்றாகவே ஆட்டி வைக்கும்.
அடுத்துவரும் இரண்டு பாடல்களை இந்த ஞான கர்ம சந்நியாச யோகமென்னும் நான்காம் அத்தியாயத்திற்கு முடிவுரையாக அமைக்கிறார்.
தனஞ்ஜயா, ஞானத்தால் ஐயத்தை அறுத்து (ஞானம்), தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு செயல்களைச் செய்பவனைக் (கர்மம்), அச்செயல்களின் விளைவுகளில் பற்றுகளை விடுத்து (சந்நியாசம்), இவ்வழியிலியே பொருந்தி இருப்பவனைக் (யோகம்) கர்மத் தளைகள் கட்டுப்படுத்தா. – 4:41
இந்தப் பாடலில் ஞான கர்ம சந்நியாச யோகத்தைச் சுருக்கிச் சொல்லிவிடுகிறார்!
அடுத்துத் தொடர்கிறார். கேட்டுக் கொண்டே இருக்காதே அர்ஜுனா! எழுந்து நில் என்னும் வகையினில் அமைந்துள்ள இறுதிப் பாடல்:
உன்னுள் தோன்றியுள்ள ஐயங்களை ஞான வாளால் அறுத்துக் காரியங்களைச் செய். அதனிலேயே பொருந்தி நில். அந்த யோக நிலை கொள். பாரத! எழுந்து நில்! – 4:42
எழுந்து நில்! துணிந்து செல்! என்று சொல்லி இந்த ஞான கர்ம சந்நியாச யோகமென்னும் நான்காம் அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments