22/01/2025, பகவத்கீதை, பகுதி 162
- mathvan
- Jan 22
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
சில வார்த்தைகளின் பொருள்களைப் பார்த்துவிட்டுத் தொடர்வோம்.
காமிய கருமம் என்றால் விரும்பும் பயன்களை எதிர்ப்பார்த்துச் செய்யும் செயல்.
நிஷ்காமிய கருமங்கள் என்றால் செயல்களின் பலன்களைத் துறத்தல்.
நித்ய கருமங்கள் என்றால் நாளும் செய்ய வேண்டிய கடமைகள்;
நைமித்ய கருமங்கள் என்றால் எப்பொழுதாவது செய்யப்படும் சிறப்புச் செயல்கள்.
சரி, நாம் இறுதி அத்தியாயத்தினுள் நுழைவோம்.
அர்ஜுனனின் கேள்வியொடு தொடங்குகின்றது இந்த அத்தியாயம்.
கிருஷ்ணா, வலிமையான கைகளை உடையவனே, கேசி என்ற தீயவனை அழித்தவனே, சந்நியாசத்தின் இயல்பையும், தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன். – 18:1
கிருஷ்ணர் சொல்வது:
காமிய கருமங்களைத் துறப்பது சந்நியாசமெனப்படும் என்பர் ஞானியர். நித்ய, நைமித்ய, காமிய உள்ளிட்ட அனைத்துக் கருமங்களின் பலன்களின் மீதும் பற்றில்லாமல் பணியாற்றுவது தியாகம் என்று அறிஞர்கள் சொல்லுவர். – 18:2
அறிஞர் பெருமக்கள் சிலர் செயல்கள் அனைத்தையுமே குற்றம் போலக் கருதி விட்டுவிட வேண்டும் என்கின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் போன்ற செயல்களை விட்டுவிடக்கூடாது என்கிறார்கள். – 18:3
(வேள்வி என்றால் என்னவென்று முன்னர் சிந்தித்துள்ளோம். அஃதாவது, வேள்வி என்றால் நெருப்பை மூட்டி அதில் பல வகையான ஆகுதிகளை இடுவது அல்ல. இல்லறத்தில் இருப்பவனுக்கு அவன் செய்யவேண்டிய கடமைகள்தாம் வேள்வி. காண்க 07/10/2024, பகவத்கீதை, பகுதி 53.)
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments