top of page
Search

23/01/2025, பகவத்கீதை, பகுதி 163

  • mathvan
  • Jan 23
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

அர்ஜுனா, சந்நியாசம் மற்றும் தியாகம் என்னும் இரண்டனுள் தியாகத்தைக் குறித்த என்னுடைய உறுதியான கருத்தைக் கேள்: தியாகம் மூவகையெனக் கூறப்பட்டுள்ளது. அவையாவன: வேள்வி, தானம், தவம். இந்த மூன்றினையும் ஒருவன் விட்டுவிடக்கூடாது. இந்த மூன்றினையும் ஒருவன் செய்தே ஆக வேண்டும். இவை ஒருவனை அறிவுடையோனாக்கித் தூய்மைப் படுத்தும். – 18:4-5.


பார்த்தா, அந்த மூன்றினையும்கூட (வேள்வி, தவம், தானம்) பற்றின்றியும் பயன் கருதாமலும் செய்யவேண்டும் என்பது என் உறுதியான நிச்சயமான கொள்கை. – 18:6


(இந்தப் பாடலில் மதம் என்னும் சொல்லுக்குக் கொள்கை என்று பொருள்படும்படியே பெரும்பாலான உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.)


வகுத்த செயல்களைத் துறத்தல் தகாது. மதி மயக்கத்தால் சிலர் தங்கள் கடமைகளைத் தவிர்க்கிறார்கள். இது தமோ குணத்தால் நேர்வதென்பார். – 18:7

(இது மனத்தினால் விளைவது.)


உடலுக்குத் துன்பம் விளையும் என்றும், உடலை வளைத்துச் செயல்களைச் செய்வது கடினமென்றும் கருதி தாம் செய்ய வேண்டிய செயல்களைத் துறப்பது இராசச குணத்தால் வருவது. அதனால், அவனுக்கு முன்னேற்றம் என்பது இருக்காது. – 18:8

(இது சோம்பலினால் விளைவது.)


அர்ஜுனா, பற்றையும், பயனையும் துறந்து செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் (நித்ய கருமம்) தவிர்க்காமல் செய்யப்படுகிறதோ அந்தத் தியாகம் சாத்விகமென்று கருதப்படும். – 18:9


எப்பொழுதும் சாத்விக குணத்தைக் கைக்கொண்டு மன உறுதியுடன் தமக்கு வகுக்கப்பட்ட வேள்வி, தவம், தானம் உள்ளிட்ட செயல்களை வெறுக்காமல் செய்பவனே புத்திசாலி. அந்த வேள்வி, தவம், தானம் உள்ளிட்ட செயல்களில் பற்றினையும் கொள்வதுமில்லை. – 18:10


உடல் எடுத்த உயிர்கள் அனைத்தும் செயல்களை முற்றாகத்  தவிர்க்க இயலா. இருப்பினும், அவ்வுயிர்கள் செய்யும் செயல்களின் பயனைத் துறப்பவனே தியாகி என்று அறி. – 18:11


கரும பலனை விடாதவர்க்கு மன அமைதி இல்லை. அவர்கள் இன்பத்தையும், துன்பத்தையும், இவ்விரண்டின் கலவையான அனுபவத்தையும் மீண்டும் மீண்டும் பெறுவர். (கீழே ஆழ்த்தும் ஒரு திருகுச் சுழல் போல அந்தச் சுழலிலேயே உழன்று கொண்டிருப்பர்.) செயல்களின் பயனைத் துறந்தவர்களான சந்நியாசிகளுக்கு அந்தச் சிக்கல் இல்லை. – 18:12


எல்லாச் செயல்களையும் செய்து முடிக்க ஐந்து காரணிகள் உள்ளன என்று சாங்கிய சாத்திரத்தில் கூறப்படுள்ளன. அர்ஜுனா, அவற்றை உனக்குச் சொல்கிறேன். கேள்! – 18:13


(அவையாவன,) இடம், தொழில் செய்வோன் (கர்த்தா), கருவிகள் (கரணம்), செயல் முறைகள், இயற்கை என ஐந்தாம். – 18:14


(கருவிகள் என்பன அறிவுக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்), செயல் கருவிகள் (கர்மேந்திரியங்கள்) என இருவகைப்படும் என்று நமக்குத் தெரியும். அவற்றின் விரிவினையும் நாம் முன்னரே பார்த்துள்ளோம். காண்க சைவத் தத்துவங்கள் 21/12/2025 – 31/12/2025).


மனிதன், மனம், மொழி, மெய்களால் செய்யும், நல்ல செயல்களோ, தீய செயல்களோ அவை, எந்தச் செயல்களாயினும் மேலே சொன்ன ஐந்து காரணிகள்தாம் அவற்றிற்கு ஏது. – 18:15


இங்கனமிருக்கையில், பற்றில்லாமல் தனித்து இருக்கும் தன் ஆத்மாவோ, அதனுடன் இணைந்திருக்கும் உடலோ செயல்களைச் செய்கின்ற கர்த்தா என்று எண்ணுவதும், தாமே எல்லாம் செய்துவிட்தாக நினைப்பதும் மதிமயக்கத்தால் ஏற்படுவன. அம்மயக்கத்தினால் அவன் உண்மையைக் காண்பதில்லை. – 18:16


(அஃதாவது, நான் என்ற நினைப்பை ஒழி என்கிறார் போலும்! நீ மட்டுமே காரியங்களைச் செய்ய முடியாது. செயல்களைப் புரிய உன்னைத் தவிரவும் சில காரணிகள் உள்ளன என்கிறார். இவ்வாறு செயல்களில் இருந்து பற்று இல்லாமல் விலகி நின்றால் கருமத் தளைகள் நம்மைப் பற்றா என்கிறார். அதனை அடுத்த பாடலில் சொல்கிறார்.)


எவன் தாம் மட்டுமே செயல்களுக்கு காரணம் என்று நினைப்பதில்லையோ, எவனுடைய புத்தி செயல்களில் பற்று வைப்பதில்லையோ அவன் இந்த உலகத்தில் உள்ள உயிர்களைக் கொன்றாலும் அவன் (மட்டுமே) கொல்வதில்லை. அதனால் அவன் அந்த வினைத்தளைகளால் துன்பப்படமாட்டான். – 18:17


கொன்றாலும் என்பதற்கு என்ன பொருள் என்பதனை நாளைப் பார்க்கலாம்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page