23/08/2024, பகவத்கீதை, பகுதி 9
- mathvan
- Aug 23, 2024
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
கற்பனையைத் தவிர்த்துக் கருத்துகளைக் கொள்க என்று மகாத்மா காந்தி அவர்கள் சொல்கிறார்.
நம் இந்தியத் திருநாட்டில் பெரும் போற்றுதலுக்குரியவர் விவேகானந்தப் பெருமான். அவரின் கருத்துகளும் இந்த வண்ணத்தில் இருப்பதனைக் காணலாம்.
விவேகானந்தப் பெருமான் கீதையைக் குறித்த மிக முக்கியமான நான்கு கருத்தியல்களை எடுத்துக் கொண்டு அலசுகிறார். அவையாவன: 1. கீதையின் தோற்றம் - எப்பொழுது, யாரால்; 2. கிருஷ்ண பரமாத்மாவின் பரிமாணம்; 3. குருஷேத்திரப் போரின் பரிமாணம்; 4. அர்ஜுனன் உள்ளிட்ட அனைவரின் வரலாற்றுச் சான்றுகள்.
இவற்றை விரித்தால் விரியும். (காண்க Thoughts on Gita by Swami Vivekananda, Second Edition 2013, Seventh Reprint 2024)
சான்றாக: “… (அந்தக் காலத்தில்) கற்பனை கரைபுரண்டு ஓடியுள்ளது எனவே இனிப்புக்கடல், பாற்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல் போன்ற மனிதக் கற்பனையின் ஆச்சரியப்படத்தக்க உருவகங்களை நாம் சந்திக்கிறோம்!
புராணங்களில் ஒரு புராணம் மனிதன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துள்ளான் என்றும் மற்றொன்று நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துள்ளான் என்றும் சொல்கின்றன. ஆனால் வேதங்கள் "மனிதன் நூறு ஆண்டுகள் வாழ்கிறான்." என்று இயம்புகிறது. இங்கு யாரைப் பின்பற்றுவோம்? எனவே, கிருஷ்ணரின் விஷயத்தில் சரியான முடிவை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” என்கிறார் விவேகானந்தப் பெருமான்.
இது நிற்க.
முடிவில் அவர்கள் சொல்வது என்னவென்றால் உலக வழக்கில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் முக்கியம் என்கிறார்கள்.
கற்பவனுக்கு அன்னம் போல் பிரித்தறியும் திறன் வேண்டும் என்று சிந்தித்தோம்.
நன்னூலார் (பவணந்தி முனிவர்) கற்பவர்களை மூன்றுவகையாகப் பிரிக்கிறார். அவையாவன: முதல் தரம்; இடைத்தரம்; கடைத்தரம்.
முதல் தர மாணாக்கர்க்கு அன்னம், மாடு உவமை என்கிறார்.
அஃதாவது, அன்னம் போல் சொல்லப்படுகின்ற கருத்துகளில் எது சத்துள்ளது என்று தெரிந்து பிரித்துப் பயன்படுத்திக் கொள்பவர்; மாட்டினைப் போல ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவற்றை சிறிது சிறிதாக நினைவிற்கு கொண்டுவந்து சிந்தித்து மனத்தில் நிறுத்தி அறிவினைப் பெருக்குபவர் என்கிறார்.
இரண்டாம் தர மாணாக்கர்க்கு மண், கிளி என்கிறார்.
அஃதாவது, விளைவிப்பவரின் உழைப்பிற்கு ஏற்ப மண்ணில் விளைச்சல் கிடைக்கும். அதுபோல, ஆசிரியரின் உழைப்பிற்கு ஏற்ப அறிந்து கொள்பவர்; கிளி போலச் சொன்னதையே திருப்பிச் சொல்பவர்கள். கற்றலில் அவர்களின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கும் என்கிறார்.
மூன்றாம் தரம் அல்லது கடைத்தர மாணாக்கர்க்கு ஓட்டைக் குடம், ஆடு, எருமை, நெய்யரி போன்ற உவமைகளைச் சொல்கிறார்.
ஓட்டைக் குடத்தில் எப்படி நீர் தங்காதோ அவ்வாறே பாடம் கேட்கும்போதே உள்வாங்கிச் சேமித்து வைக்காமல் விட்டுவிடுபவர்கள்; ஆடு எப்படி ஓரிடத்தில் நின்று வயிற்றினை நிரப்பிக் கொள்ளாமல் இங்கும் அங்கும் சென்று மேயுமோ அதைப்போல ஓரிடத்தில் ஒழுங்காகக் கற்காமல் பலரிடம் சென்று தெளியலாம் என்று ஓடிக் கொண்டேஇருப்பவர்கள்; எருமையானது நல்ல நீர்ச் சுனையாக இருந்தாலும் அதனை ஒரு கலக்கு கலக்கியே பருகும், அவ்வாறே நன்றாகக் கற்றுக் கொடுப்பவர்களையே ஒரு கலக்கு கலக்கி கலங்கிய குட்டையில் பருக முயலுவர்; நெய்யரி (Sieve / Filter) என்பது நெய்யைக் காய்ச்சும்போது உண்டாகும் கசடுகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு நல்ல நெய்யை விட்டுவிடும் அதைப்போல நல்ல கருத்துகளை விட்டுவிட்டு கசடுகளைத் தம்முடன் வைத்துக் கொள்வர் என்கிறார் நன்னூலார்.
இதோ அந்தச் சூத்திரம்:
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.- பாடல் 38, நன்னூல்
நன்னூலார் இவ்வாறு கற்றல் மரபை (Pedagogy) விளக்கிப் பல சூத்திரங்களைச் சொல்லிச் சென்றுள்ளார். இந்த விதிகளைப் பள்ளிப் பருவத்திலேயே சொல்லிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ம்ம்… என்ன செய்ய?
தெரிந்திருந்தால் முதல் தரமாக இருக்க முயன்றிருக்கலாம்.
எனக்கு இதுவரை கலக்குவதே பழக்கமாக இருந்து வந்துள்ளது என்பதனை உணரவைத்தது இந்தப் பாடல்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments